சனி, 5 மார்ச், 2016

கிராண்ட் மாஸ்டரின் மோசடி

சதுரங்க விளையாட்டில் நடந்த நூதன மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த துபாய் ஓபன் செஸ் போட்டியில், ஜார்ஜியாவை சேர்ந்த 25 வயது கிராண்ட் மாஸ்டர் நிகாலிட்ஸ் பங்கேற்று விளையாடினார். ஆட்டத்தின் இடையே அவர் அடிக்கடி எழுந்து கழிப்பறைக்குப் போவதும், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து ஆட்டத்தை தொடர்வதாகவும் இருந்தார். ஒவ்வொரு முறை போய் திரும்பிய பிறகும், அவர் விளையாடிய நகர்த்தல்கள் எதிர்த்து விளையாடிய வீரரின் வியூகங்களை தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்தன
இதனால் சந்தேகம் அடைந்த அந்த வீரர், போட்டிக்கான நிர்வாகிகளிடம் புகார் செய்தார். நிகாலிட்ஸை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து சந்தேகத்துக்குரிய எந்த சாதனமும் சிக்கவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட கழிப்பறையை மட்டுமே தொடர்ந்து உபயோகித்தது தெரியவந்ததை அடுத்து, நிர்வாகிகள் அங்கு சென்று சோதித்ததில், காகிதத்தில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த -பாட் ஒன்றை கண்டுபிடித்தனர்.
அது தன்னுடையது இல்லை என்று சாதித்தார் நிகோலிட்ஸ். ஆனால், சமூக இணையதளம் ஒன்றில் அவர் தனது ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்த்தலையும் அலசி ஆராய்ந்து கம்ப்யூட்டர் தரும் ஆலோசனைப்படி விளையாடியது அம்பலமானது. போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக வெளியேற்றப்பட்டார் அந்த வீரர். அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கு செஸ் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட அவர் இதுவரை பெற்ற வெற்றிகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்க உள்ளனர்.
விளையாட்டு என்பது திறமை வெளிப்பாட்டிற்கான ஒரு களம். அதில் குறுக்குவழியில் வெற்றியை வசப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். நவீன தொழில்நுட்பத்தை இப்படி தவறாகப் பயன்படுத்தியதால், தனது எதிர்காலத்தையே குழி தோண்டி புதைத்திருக்கிறார் இந்த இளைஞர். ஊக்க மருந்து உபயோகம், ஸ்பாட் பிக்சிங்... மேட்ச் பிக்சிங் சூதாட்டம், ரிவர்ஸ் ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக பந்தை சேதப்படுத்துதல் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது இந்த ஸ்மார்ட் போன் சதுரங்க மோசடி
நீர்ப்பரப்பின் வெளியே தெரிவது பிரம்மாண்டமான பனிப்பாறையின் ஒரு நுனி மட்டுமே. ஆழ்ந்து பார்த்தால் தான் இதன் ஆபத்து விளங்கும். நிகாலிட்ஸ் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக