சனி, 5 மார்ச், 2016

பொறுமை இழக்கலாமா?

எதிரணி பந்துவீச்சாளரை இடித்துத் தள்ளிய இந்திய அணி கேப்டன் டோனிக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான நெருக்கடியிலும் நிதானத்தை இழக்காதகூல் கேப்டன்என புகழ்பெற்றவரின் இந்த செயல், கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.வங்கதேச அணியுடன் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக, அறிமுக வீரராக இடம் பெற்ற முஸ்டாபிசுர் ரகுமானின் சாதுரியமான வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. நோஞ்சான் அணியிடம் இப்படி உதை வாங்குவதா? என்ற கடுப்புடன் விளையாடிக் கொண்டிருந்தார் டோனி.முஸ்டாபிசுர் சிறப்பாகப் பந்துவீசினாலும், பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதற்காக ஓடி வரும்போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குறுக்கே நின்று எரிச்சலூட்டிக் கொண்டிருந்தார். இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா கடுமையாக எச்சரித்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அணி இக்கட்டான நிலையில் இருக்க, இயல்பான அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த டோனியையும் முஸ்டாபிசுர் விட்டுவைக்கவில்லை.ரன் எடுக்க வேண்டுமா? என்னை சுற்றிக் கொண்டு ஓடுங்கள் என்று இறுமாப்புடன் நின்றிருந்தவரை பார்த்ததும் டோனியின் ஆத்திரம் எல்லை மீறியது. தோள் மற்றும் முழங்கையால் பலமாக இடித்துத் தள்ளியபடி ஓடினார். நிலைகுலைந்துபோன முஸ்டாபிசுர் களத்தில் இருந்து வெளியேறி ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அந்த இடியின் தாக்கம் இருந்தது. டிவி ரீப்ளேவில் பார்க்கும்போது அது இயல்பாக நடந்த சம்பவமாகத் தெரியவவில்லை. டோனி வேண்டுமென்றே இடித்துத் தள்ளுவதை அப்பட்டமாக பார்க்க முடிந்தது.இது குறித்து விசாரணை நடத்திய ஐசிசி போட்டி நடுவர், தவறு செய்த இருவருக்கும் அபராதம் விதித்துள்ளார். இரு தரப்புமே இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் அடக்கி வாசித்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அறிமுக வீரர் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தாலும், பல ஆண்டு அனுபவத்துடன் கேப்டன் என்ற பொறுப்பிலும் உள்ள டோனி இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.அணி தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதே என்ற கவலையும், தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற விரக்தியும் சேர்ந்து டோனியின் பொறுமையை சோதித்துவிட்டன. வெற்றி முக்கியம் என்றாலும், விளையாட்டு நெறியை போற்றுவது அதைவிட அவசியம். இனியாவது சம்பந்தப்பட்ட வீரர்கள் விவேகமாக நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக