சனி, 5 மார்ச், 2016

எதற்கும் ஒரு எல்லை

இந்திய அணியுடன் அடிலெய்டு மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் மைக்ரோபோனில் பேசிக்கொண்டே பேட் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அடுத்த சில விநாடிகளில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது, ‘உங்கள் ஓட்டை வாயை மூடிக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்புங்கள்என்று இந்திய வீரர் கோஹ்லி சைகை செய்ததும் புயலை கிளப்ப தவறவில்லை.

ஆஸ்திரேலியாவில் பிரபலமானடிவி 9’ சேனலுக்கு பேட்டி கொடுத்தபடியே பேட்டிங் செய்ததால் தான், கவனம் சிதறி விக்கெட்டை பறிகொடுத்தார் ஸ்மித் என்கிறார்கள். செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை

தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பின் தரத்தை மேம்படுத்துவதை குறை கூற முடியாது. அதே சமயம், களத்தில் இருக்கும் வீரர்களின் உடலில் மைக்ரோபோனை பொருத்தி ஓவருக்கு ஓவர் அவர்களின் வாயைக் கிளறி பேட்டி எடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்! என அலுத்துக் கொள்கிறார்கள் முன்னாள் பிரபலங்கள்.ஸ்மித்தை ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்தது பற்றி கோஹ்லியிடம் கேட்டால், ‘அவர் மைக்ரோபோன் வைத்திருந்தது எனக்கு தெரியாது. எங்கள் அணியின் இளம் பந்துவீச்சாளர்களை ஸ்மித் கிண்டலடித்தார்

பவுண்டரி அடித்துவிட்டு எகத்தாளமாக ஏதோ கூறியதை பார்த்தேன். அவரை கண்காணித்து எச்சரித்து வையுங்கள். இல்லையென்றால் நான் தலையிட நேரிடும் என்று நடுவரிடம் கூறினேன். அதற்குள்ளாகவே அவுட்டாகி விட்டார். அதனால் தான் வாயை மூடிக்கொண்டு போங்கள் என்று சைகை செய்தேன்என்கிறார்.இதே போல விறுவிறுப்பான ஆட்டத்தில் மூக்கை நுழைக்கும் மற்றொரு தொழில்நுட்பமாக உருவெடுத்திருக்கிறது ஸ்பைடர் கேமரா

மைதானத்தின் குறுக்காக கம்பியில் தொங்கியபடி இப்படியும் அப்படியுமாக நகர்ந்து பறவையின் பார்வையில் படம் பிடிக்கும் இந்த கேமராவின் கோணம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை காட்டிப் பரவசப்படுத்துகிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சிட்னியில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் கோஹ்லி வேகமாக அடித்த பந்து ஸ்பைடர் கேமராவில் பட்டு எல்லைக் கோட்டை கடந்தபோது, இந்திய அணிக்கு 4 ரன் சேர வேண்டிய நிலையில் அந்த பந்துசெல்லாதுஎன்று நடுவர் அறிவித்தது கேப்டன் டோனியை கடுப்பாக்கி விட்டது.

அந்த 4 ரன் ஆட்டத்தின் முடிவையே மாற்றியமைக்கக் கூடியது என்பதை மறந்துவிடக் கூடாது. இனி ஸ்பைடர் கேமராவால் ஆட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கு அபராதம் விதிக்க வேண்டும்என்கிறார் டோனி. நியாயமான வாதம். காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், அதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக