எந்த ஒரு துறையிலும்
முதலிடத்துக்கு முன்னேறுவது என்பது பெருமைக்குரிய விஷயம்
தான். விளையாட்டு
வீரர், வீராங்கனைகள்
இந்த சாதனையை
நிகழ்த்தும்போது, அது ஒட்டு மொத்த தேசத்துக்கும்
பெருமை சேர்ப்பதாக
அமைகிறது. குறிப்பாக,
பெண்கள் இப்படி
உலக அளவில்
நம்பர் 1 ஆக
முத்திரை பதிப்பது,
ஒவ்வொரு இந்தியனும்
பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய நிகழ்வு என்பதில்
சந்தேகமில்லை.மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில்
சானியா மிர்சாவும்,
மகளிர் பேட்மின்டன்
ஒற்றையர் பிரிவில்
சாய்னா நெஹ்வாலும்
இந்த அரிய
சாதனையை நிகழ்த்தி
அசத்தியிருக்கிறார்கள். முதல் முறையாக
சாய்னா முதலிடத்துக்கு
முன்னேறியபோது, அந்த அந்தஸ்து ஒரு சில
நாட்களே நீடித்தது.
தரவரிசையில் 2வது, 3வது ரேங்க் என
பின்தங்கியிருந்த அவர், சமீபத்தில் நடந்த உலக
சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றதால்
மீண்டும் முதலிடத்துக்கு
முன்னேறி தாய்நாட்டுக்கு
பெருமை சேர்த்திருக்கிறார்.இறுதிப் போட்டியில்
நடப்பு சாம்பியனான
ஸ்பெயின் வீராங்கனை
கரோலினா மரினிடம்
போராடித் தோற்றாலும்,
புள்ளிகள் அடிப்படையில்
அவரைப் பின்னுக்குத்
தள்ளி நம்பர்
1 ஆகியிருக்கிறார் சாய்னா. இம்முறை,
அவரது ஆதிக்கம்
நீண்ட நாள்
நிலைத்திருக்கும் என்கிறார்கள். மகளிர் பேட்மின்டனில் சீன
வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்த அளவுக்கு
சாதிப்பது என்பது,
உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. பிரம்மப்
பிரயத்தனம் என்பார்களே... அத்தகைய ஒரு கடினமான
முயற்சி மற்றும்
அசாத்தியமான திறமையால் மட்டுமே அவர் இந்த
சாதனையை நிகழ்த்தி
இருக்கிறார்.கடந்த ஆண்டு தொடர்ச்சியாக தோல்விகளை
சந்தித்ததுடன் காயம் காரணமாக முழு உடல்தகுதி
இல்லாமல் தடுமாறியபோது,
பேட்மின்டன் விளையாட்டில் இருந்தே விலகிவிடலாமா? என
யோசித்ததாகக் கூறுகிறார் சாய்னா. எனினும், புதிய
பயிற்சியாளரை நியமித்துக் கொண்டு கடுமையாகப் போராடி
முதல் இடத்துக்கு
முன்னேறியுள்ள அவரது மன உறுதி,
இந்திய பெண்கள்
அனைவருக்குமே உத்வேகம் அளிக்கக் கூடிய முன்னுதாரணமாக
அமைந்துள்ளது.விளையாட்டுத் துறையில் ஆர்வம் செலுத்தும்
குழந்தைகளை ஊக்குவிக்கத் தயங்கும் பெற்றோர்கள் சானியா,
சாய்னா போன்றவர்களின்
வெற்றிக்குப் பிறகு நிச்சயமாக தங்கள் மனதை
மாற்றிக் கொள்வார்கள்.
சர்வதேச விளையாட்டு
தினம் கொண்டாடப்படும்
ஆகஸ்ட் மாதத்தில்
(29ம் தேதி),
சாய்னா படைத்துள்ள
இந்த சாதனையை
போற்றுவோம், வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக