சனி, 5 மார்ச், 2016

பொறுமை அவசியம்

காலே டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அதி தீவிர இலங்கை ரசிகனுக்கு கூட அது பேராசை என்றே தோன்றியிருக்கும். கிட்டத்தட்ட இரண்டரை நாட்களுக்கு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது நாளில் மண்ணைக் கவ்வியது ஏமாற்றத்தின் உச்சம்.பத்து விக்கெட் பறித்த அஷ்வினின் சுழல் ஜாலம், ஷிகர் தவானும் கேப்டன் விராத் கோஹ்லியும் விளாசிய சதங்கள், ரகானேவின் எட்டு கேட்ச் உலக சாதனை எல்லாமே இந்த தோல்வியின் கனத்தில் நசுங்கிக் காணாமல் போய்விட்டன.இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 95 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தவித்தபோது, இந்திய பவுலர்கள் பிடியைத் தளர்த்தியதே தோல்விக்கு முக்கிய காரணம். முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினாலும், சரணடையாமல் போராடிய சண்டிமால் சவாலான ஒரு இலக்கை நிர்ணயிக்க உதவினார். வெற்றிக்கு 176 ரன் தானே தேவை... ஊதித் தள்ளிவிடலாம் என்ற அதீத தன்னம்பிக்கை, இந்திய பேட்ஸ்மேன்களை கவிழ்த்துவிட்டது.ஸ்பின்னர்களை சண்டிமால் சமாளித்த விதத்தில் இருந்து நம் வீரர்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆடுகளமும் ஒரேயடியாக பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. டெஸ்ட் பேட்டிங்கில் சாதிக்க... களத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்ற ஆர்வம், முழுமையான அர்ப்பணிப்பு, பொறுமை, பொறுப்பு, சக வீரருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று பல்வேறு அம்சங்களில் கவனம் தேவை.அவசர டி20 ஆட்டத்துக்கு பழகிப்போனவர்களால் டெஸ்ட் போட்டியின் சோதனைகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை. சச்சின், கங்குலி, டிராவிட், லஷ்மண், சேவக், கம்பீர் போன்ற சாதனையாளர்கள் படிப்படியாக விடைபெற்ற நிலையில், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறுவது இயல்பானதே. அதனால் தான், எதற்குமே அலட்டிக் கொள்ளாதகேப்டன் கூல்டோனியே, போதுமடா சாமி என்று கழன்று கொண்டிருக்கிறார்.அதே சமயம், இந்த ஒரு தோல்விக்காக கோஹ்லி தலைமையிலான இளம் அணியை வசைபாடுவதோ, சிதைத்து சின்னாபின்னமாக்குவதோ எந்த பலனையும் தராது. தங்களின் தவறுகளில் இருந்து அவர்கள் அனுபவப் பாடம் கற்று பக்குவம் அடைய அவகாசம் அளிப்பது அவசியம். அதன் பிறகே அடுக்கடுக்கான வெற்றிகளை எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கும். இங்கிலாந்துடன் நடக்கும் ஆஷஸ் தொடரில் ஆஸி. அணியின் தடுமாற்றத்துக்கும் இது தான் காரணம். அணி ஒரு புதிய மாற்றத்தை, முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது, கரடுமுரடான பாதையில் சற்று சறுக்கலை சந்திப்பது சகஜம் தான். பொறுமையோடு காத்திருப்போம். கோஹ்லி & கோவும் நிச்சயம் சாதிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக