சனி, 5 மார்ச், 2016

விவேகம் வேண்டும்...

புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்பத்தினர், நண்பர்கள், அறிமுகம் இல்லாத சக மனிதர்கள் என எல்லோருடனும் மகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு, புதிய ஆண்டை உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் தொடங்குவதற்கான ஒரு சந்தர்ப்பம். கடந்த ஆண்டில் சந்தித்த சறுக்கல்களில் இருந்து மீண்டு, புதிய சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு.இதில்... அடுத்து செய்ய வேண்டிய பணிகள், நீண்ட கால லட்சியத்தை நிறைவேற்ற தேவையான திட்டமிடல், தடைக்கற்களை தகர்ப்பதற்கான வழிமுறைகள் என்று ஆற அமர யோசித்து ஆத்ம பரிசோதனை செய்துகொள்பவர்கள் வெகு சிலர். மற்றபடி பண்டிகை நாளின் வழக்கமான பிரார்த்தனை, விருந்து, பொழுதுபோக்குடன் கடந்துபோகும் ஒரு சாதாரண நாள்.மொத்தத்தில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கழிய வேண்டிய ஒரு இனிய தொடக்கம், சிலரது பொறுப்பற்ற செயலால் என்றென்றும் மறக்க முடியாத இழப்பாக, சோகமாக அமைந்து விடுகிறது. தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் 13 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் என்ற செய்தி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. சென்னையில் மட்டும் 8 மணி நேரத்தில் 900 சாலை விபத்துகள் பதிவாகி இருக்கின்றன. இதில் அதிவேகமாக மோட்டார் பைக்கில் பறந்து சாகசம் செய்த இளைஞர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார்கள்.சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இனி ஒவ்வொரு புத்தாண்டு தினமும் வேதனையான நினைவுகளின் நீட்சியாக மட்டுமே இருக்கும்.பந்தயங்களில் பயன்படுத்தப்படும் அதிவேக மோட்டார் பைக்கை நெரிசல் மிகுந்த சாலைகளில் சீறவிட்டு, அருகில் செல்லும் வாகனங்களில் இருப்பவர்களும், பாதசாரிகளும் அலறித் துடித்து அச்சப்படுவதை அலட்சியப்படுத்தி செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 18 வயது பூர்த்தியடையாத, ஓட்டுனர் உரிமம் பெறாத சிறுவர்களும் இதில் அடக்கம். ஆண்டுதோறும் இப்படி புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நிகழும் வாகன விபத்துகளில் பலியாகும் இளைஞர்களுடன், சாலைகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் ரேஸ்களில் உயிரை விடுபவர்களும் ஏராளம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுப்பின்றி செயல்படும் இதுபோன்ற இளைஞர்களைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, பண்டிகை நாட்களில் மட்டுமாவது குறிப்பிட்ட இடைவெளியில் சாலைத்தடுப்புகள் அமைத்து கண்காணிப்பதுடன், விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். விலையுயர்ந்த பைக் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களும், உயிர் விலைமதிப்பில்லாதது என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக