சனி, 5 மார்ச், 2016

சிலிர்க்கவைக்கும் டெஸ்ட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் படுதோல்வி கிரிக்கெட் அரங்கில் பல்வேறு நேர்மறை விளைவுகளுக்கு வித்திட்டிருக்கிறது.டெஸ்ட் போட்டிகள் என்றாலே கொட்டாவி விடும் அளவுக்கு சுவாரஸ்யம் குறைந்து வந்த நிலை மாறி, ஒவ்வொரு பந்தையும் நெஞ்சம் படபடக்க பார்க்க வைத்திருக்கிறார்கள்.தொடரின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வென்று ஆதிக்கம் செலுத்தும் என்ற நிபுணர்களின் கணிப்பெல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது.இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது... இந்த தொடரோடு அவரது கதை முடிந்துவிடும் என எல்லோருமே எதிர்பார்த்து காத்திருக்க, நிலைமை தலைகீழாகி இருக்கிறது.இந்த தொடரோடு ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். நாட்டிங்காமில் நடந்த நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தங்கள் அணி 60 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதை அந்நாட்டு ரசிகர்களால் மட்டுமல்ல, கிரிக்கெட் வாரியத்தாலும் ஜீரணிக்க முடியவில்லை. தற்போதைய ஆஸி. அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இனி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்கிறார் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்.இங்கிலாந்து அணி கடந்த 2013-14 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது 0-5 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனதையும் மறந்துவிடக் கூடாது. அந்த தோல்விக்கு சொந்தமண்ணில் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளத்தில் இங்கிலாந்து வேகங்கள் ஸ்டூவர்ட் பிராடு, பென் ஸ்டோக்ஸ் இருவரின் அபாரமான பந்துவீச்சு, டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறது. இருவரும் பந்தை காற்றிலே ஊஞ்சலாடவிட்டு ஆஸி. பேட்ஸ்மேன்களை அலைக்கழித்த விதம் கண்கொள்ளா காட்சி என்றால் மிகையல்ல. விக்கெட் கீப்பரும், ஸ்லிப் திசை பீல்டர்களும் வரிசைகட்டி நின்று மிரட்ட, தொடுவதா வேண்டாமா என பேட்ஸ்மேன் இருமனதோடு யோசிக்கும் விநாடியில் பந்து மட்டையின் விளிம்பை முத்தமிட்டு காத்திருக்கும் கைகளில் தஞ்சமடைந்த காட்சி ஆக்ஷன் ரீப்ளேவாகிக் கொண்டே இருந்தது. வியூகம், விதம் நிலையாக இருக்க, அவுட்டான வீரர்களின் முகங்கள் மட்டுமே மாறின. டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், ஐந்து நாள் ஆட்டத்துக்கான பொறுமையும், பொறுப்பும் ஆவியாகிக் கொண்டிருக்கிறதே என்ற கவலையும் தலைகாட்டுகிறது. டி20 போட்டிகளின் பாதிப்பு இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலங்கைக்கு எதிராக புதிய டெஸ்ட் அத்தியாயத்தை தொடங்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய விரர்களும்சோதனைஆட்டங்களுக்கு சுவை கூட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக