கால்பந்து...
உலகின் அழகிய விளையாட்டு! இந்தியாவில் அதிகம் கண்டுகொள்வதில்லை. நமக்கு தான் கிரிக்கெட் இருக்கிறதே. சர்வதேச போட்டிகளில் பெரிதாக வெற்றிகளைக் குவிக்க முடியாததும், தரவரிசையில் மிகவும் பின் தங்கியிருப்பதும் இங்கே கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. ஐபிஎல் 20
ஓவர் கிரிக்கெட் போட்டி போல தற்போது நடத்தப்பட்டு வரும் இந்தியன் சூப்பர் லீக் தொடரால், ரசிகர்கள் லேசாக திரும்பிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.நடப்பு சீசனின் இறுதிப் போட்டிக்கு சென்னையின் எப்சி அணி தகுதி பெற்றிருப்பதால் ஆர்வம் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது.
சென்னையுடன் ஒப்பிட்டால் கோவா, கொச்சி, கொல்கத்தா நகர ரசிகர்கள் சற்று வெறித்தனமானவர்கள். உள்ளூர் வீரர்கள் அதிக அளவில் இடம் பெற்று திறமையை வெளிப்படுத்தினால், ஸ்டேடியங்கள் நிரம்பி வழிவது நிச்சயம்.அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, பெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுவன் இஷான் பண்டிதா ஸ்பெயின் நாட்டின் பிரபல கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளான் என்ற தகவல்.
‘முதல் முறையாக ஒரு இந்திய வீரரை எங்கள் கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம். முதலில் மிகவும் தயக்கமாகவே இருந்தது. ஆனால், இஷான் பண்டிதாவின் திறமையை நேரில் பார்த்த பிறகு எங்கள் சந்தேகமெல்லாம் பறந்துவிட்டது. ஸ்பெயின் நாட்டின் கால்பந்து சூழலுக்கு அவர் இவ்வளவு விரைவாக தன்னை தயார்படுத்திக் கொள்வார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை’ என்று புகழ்கிறார் அல்மேரியா கால்பந்து அகடமியின் பயிற்சியாளர் அகஸ்டின் சான்செஸ்.ஆறு வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கியவர், பெற்றோர் பிலிப்பைன்சில் இருந்து 2009ல் பெங்களூர் திரும்பி செட்டிலான பிறகு பள்ளி அணிக்காக களமிறங்கி ஒரே ஆண்டில் கேப்டனாக உயர்ந்திருக்கிறார்.
கர்நாடகா ஏ டிவிஷன் போட்டிகளில் பிரபலமானவர், 2013ல் ஸ்வீடன் சென்று விளையாடியபோது உள்ளூர் கிளப் நிர்வாகிகளின் கவனத்தை கவர்ந்துவிட்டார். 17 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான தேர்வில் பங்கேற்குமாறு அழைப்பு, அடுத்த ஆண்டே ஸ்பெயினின் இன்டர்சாக்கர் மாட்ரிட் கால்பந்து அகடமியின் ஒப்பந்தம்... அதைத் தொடர்ந்து அல்மேரியா கிளப் என்று இஷான் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
கோடிக் கணக்கான இந்திய இளைஞர்களில் இன்னும் ஆயிரக்கணக்கான இஷான்கள் ஒளிந்திருக்கிறார்கள். அந்த வைரங்களைக் கண்டெடுத்து பட்டை தீட்டினால், இந்திய கால்பந்து அணியும் நிச்சயம் ஒருநாள் உலக கோப்பையை முத்தமிட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக