சனி, 5 மார்ச், 2016

புதுமையை வரவேற்போம்

கிரிக்கெட் போல பரிணாம வளர்ச்சி கண்ட விளையாட்டு வேறு ஏதும் இருக்க முடியாது. முடிவே இல்லாமல் நாள் கணக்கில் நீடித்த டெஸ்ட் போட்டிகளை கட்டுப்படுத்துவதற்காக அதிகபட்சம் 5 நாள் என்று ஆரம்பித்து படிப்படியாக ஒருநாள், டி20 ஆக புதுப்புது பரிமாணங்களை எட்டிக் கொண்டிருக்கிறது.மூன்று மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடுவதுடன், கடைசி பந்து வரை விறுவிறுப்பும் பரபரப்புமாகப் போவதால் டி20 போட்டிகளின் ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்க... பெரும்பாலும் டிராவில் முடியும் டெஸ்ட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம் இறங்குமுகமாகவே உள்ளது.இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், மீண்டும் டெஸ்ட் போட்டிகள் பக்கமாக ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகல்/இரவு டெஸ்ட் போட்டியை பரீட்சார்த்தமாக முயற்சிக்கப் போவதாக அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.இந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளிடையே தொடங்கும் அந்த டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதே டெஸ்டில் முதல் முறையாக ரோஜா நிற பந்தும் பயன்படுத்தபட இருக்கிறது. ‘இந்த மாற்றங்களை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிமுகம் செய்யவில்லை. நீண்ட நாள் ஆய்வுக்குப் பிறகே இந்த சோதனை முயற்சிக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்பதற்கான ஒரு போராட்டம் இது. இதற்கு ஒத்துழைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றிஎன்கிறார் இங்கிலாந்தின் புகழ் பெற்ற மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தலைமை நிர்வாகி ஜான் ஸ்டீபன்சன். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் கிளப் ஆட்டங்களை இரவு நேரத்தில், பிங்க் பந்து உபயோகித்து விளையாட வைத்து அதில் ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக அலசி ஆராய்ந்த பிறகே ஐசிசி இந்த ஆக்கபூர்வமான முடிவை எடுத்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின்போது, வீரர்கள் விரைவாக சோர்வடைந்து விடுவதில் இருந்தும் விடுதலை கிடைக்க வகை ஏற்பட்டுள்ளது.இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் விளையாடுவதால் வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் இது புது வகையான டெஸ்ட் அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கிறார்கள். இது ஒரு சோதனை முயற்சிதான். எல்லா டெஸ்ட் போட்டிகளையுமே பகல்/இரவு ஆட்டமாக நடத்தப்போவதில்லை என்பதால், எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த புதுமையை வரவேற்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக