சனி, 5 மார்ச், 2016

களையெடுங்கள்

கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைய மாணவிகள் நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் ஒரு மாணவி பரிதாபமாக இறந்த நிலையில், மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனியர்களின் துன்புறுத்தல் மற்றும் பயிற்சியாளர்களின் நெருக்கடியே அவர்களை தற்கொலை முடிவுக்குத் தள்ளியதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியும் அந்த மாணவிகள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். போலீசார் ஒருபக்கம் தீவிரமாக விசாரித்து வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.விளையாட்டு ஆணைய இயக்குனரை உடனடியாக ஆலப்புழை செல்லுமாறு கேட்டுக் கொண்டதுடன் துறை சார்ந்த விசாரணைக்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ‘இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவி மிகவும் திறமையானவர். அவரது மரணம் நாட்டுக்கும், இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்என்று அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பயிற்சியாளர் துடுப்பு கொண்டு தாக்கியதால் அந்த மாணவி உட்காரவோ, நிற்கவோ கூட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இது குறித்து நிர்வாகிகளிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததே மாணவிகளை தற்கொலை முடிவுக்குத் தள்ளியுள்ளது என்கிறார்கள்.தங்கள் குழந்தைகள் விளையாட்டில் பெரிதாக வரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இந்தியாவில் மிக மிகக் குறைவு. பல்வேறு சமூக நெருக்கடிகளை ஒதுக்கித் தள்ளி தங்கள் குழந்தைகளை, குறிப்பாக சிறுமிகளை இந்த துறையில் ஊக்குவித்து வரும் வெகு சிலரையும் இது போன்ற சம்பவங்கள் விரக்தி அடையச் செய்துவிடும். டென்னிசில் சானியா மிர்சா, பேட்மின்டனில் சாய்னா நெஹ்வால் போன்ற வீராங்கனைகள் உலக அளவில் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களைப் போல சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற முன்வரும் இளம் வீராங்கனைகளின் மன உறுதியை சிதைத்து சுக்குநூறாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது உடனடி அவசியம்.பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் குறைகளை எந்தவித அச்சமுமின்றி உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்வதும் அவசியம். இல்லையென்றால், விளையாட்டு ஆணையத்தின் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக