சனி, 5 மார்ச், 2016

ஒலிம்பிக் வாய்ப்பு?

ஒலிம்பிக் போட்டி... விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் கனவு/லட்சியம். பதக்கத்தை விடுங்கள், பங்கேற்பதே பெரிய கவுரவம். அதற்கு தகுதி பெறுவதும் இமாலய சவால். உலகத் தரம் வாய்ந்த திறமையாளர்களுக்கு ஈடு கொடுத்தால் மட்டுமே அந்த வாய்ப்பும் சாத்தியமாகும். பிற விளையாட்டுகளுடன் ஒப்பிட்டால், குத்துச்சண்டையில் சவால் மட்டுமல்ல... ஆபத்தும் அதிகம். ரியோ டி ஜெனிரோவில் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய பாக்சிங் வீரர், வீராங்கனைகள் ஒருவர் கூட இதுவரை தகுதி பெறவில்லை. விரைவில் நடக்க உள்ள ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். திடகாத்திரமான வெளிநாட்டு வீரர்களின் குத்துகளை சமாளித்து வெற்றியை வசப்படுத்தினால் கூட, ரியோ ஒலிம்பிக்சில் அவர்களால் பங்கேற்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி இருப்பது தான் வேதனையின் உச்சம்.இதில் அவர்களின் தவறு ஒரு சதவீதம் கூட இல்லை! நிர்வாகக் குளறுபடியால் நேர்ந்த அவலம். தலைவர் சந்தீப் ஜஜோடியா, பொதுச் செயலர் ஜெய் காவ்லிக்கு எதிராக மாநில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் முடங்கிப் போயிருக்கிறது இந்திய குத்துச்சண்டை சங்கம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச பாக்சிங் கூட்டமைப்பு தலையிட்டு இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்தது.கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக அமைப்பு இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறதுபாக்சிங் இந்தியா’. சீனாவில் மார்ச் 23ல் தொடங்கும் ஆசிய தகுதிச் சுற்று வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்காவிட்டால், களத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்தாலும் பயனில்லை. அவர்களால் ரியோ ஒலிம்பிக்சுக்காக பிரேசில் பறக்க முடியாது.இந்த இடியாப்ப சிக்கலைத் தீர்ப்பதற்காக இந்திய விளையாட்டு ஆணையமும், இடைக்கால நிர்வாகக் குழுவும் இணைந்து ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை! உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் ஷில்லாங்கில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியின்போது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தாய் நாட்டுக்காக பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்ற வெறியோடு கடுமையாகப் போராடும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் திறமை, முயற்சி, லட்சியம்... நிர்வாக சீர்கேட்டால் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போக அனுமதிக்கவே கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக