சனி, 5 மார்ச், 2016

இதிலுமா விளம்பரம்?

மழை வெள்ளத்தில் உடைமைகளையும் உறைவிடத்தையும் இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள வழியில்லாமல் உதவிக் கரம் கிடைக்குமா என மக்கள் ஏங்கித் தவிக்கும் நிலையில், நிவாரணப் பணியில் கூட ஆதாயம் தேட முனையும் அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது.தனது முதல் தாக்குதலை முடித்துக் கொண்ட மழை, நான்கு நாட்கள் ஓய்வெடுத்தபோது கூட சுதாரித்துக் கொண்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிடாமல் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, மழையின் இரண்டாவது கொடூரமான தாக்குதலில் சென்னை நகரமே சின்னாபின்னமான பிறகும், அரசு இயந்திரம் முடங்கிக் கிடப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.ராணுவம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த துடிப்பான இளைஞர்கள், எதிர்க்கட்சிகளும் கூட களத்தில் இறங்கி தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இடைத்தேர்தல் நடந்த ஆர்கே நகர் தொகுதியை முற்றுகையிட்டு அனைத்து அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரம் இன்னும் கூட கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இன்று அந்த தொகுதியே மழை வெள்ளத்தில் மூழ்கி மக்கள் நிர்க்கதியாக நிற்கும்போது, எங்கே போனார்கள் அந்த அமைச்சர்களும் எம்.எல்..க்களும் என்றே தெரியவில்லை. ஒப்புக்கு வந்த ஒன்றிரண்டு பேரையும் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் மக்கள் ஆவேசத்துடன் விரட்டி அடித்திருக்கிறார்கள். அரசு சார்பில் செய்ய வேண்டிய அடிப்படையான நிவாரண உதவிகளைக் கூட தக்க சமயத்தில் வழங்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, நல்ல இதயங்கள் இணைந்து செய்யும் பணிகளையும் முடக்கப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.பக்கத்து மாநிலங்கள் தாமாக முன்வந்து செய்யும் உதவிகளை முறையாகப் பெற்றுக் கொள்வதிலும் தாமதம். தனியார் நிறுவனங்கள் நன்கொடையாக அளித்த பொருட்களின் மீது முதல்வரின் படத்தை ஒட்டுவதில் அதிகாரிகள் காட்டும் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. அப்பாவி நோயாளிகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது, ஆம்புலன்சில் அரசின் விளம்பர பேனரைக் கட்டுவதற்காக நிறுத்தி வைக்கும் அவலம், உலகில் வேறு எங்கும் நிகழ முடியாத அதிசயம்.அரசின் இந்த விளம்பர மோகத்தை சமூக வலைத்தளங்களில் நார் நாராய் கிழித்து தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை கடுமையாகப் பதிவு செய்து வருகிறார்கள். அரசு இனியாவது மெத்தனப் போக்கை கைவிட்டு, மலிவான விளம்பரம் தேட முயற்சிக்காமல் நிவாரணப் பணிகளை நியாயமான வகையில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக