சனி, 5 மார்ச், 2016

ஆச்சரியம்... ஏமாற்றம்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அமர்க்களமாக நடந்திருக்கிறது. சிலருக்கு ஆச்சரியம், பலருக்கு ஏமாற்றம். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் புதிதாக உருவாகி உள்ள புனே, ராஜ்கோட் அணிகள் வீரர்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டின. கடந்த சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த டெல்லி டேர்டெவில்ஸ் பல வீரர்களைக் கழட்டி விட்டதால், ஏலத்தில் மிகக் கவனமாக செயல்பட்டது.230 இந்திய வீரர்கள், 121 வெளிநாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து 116 பேரை மட்டுமே ஏலம் எடுக்க முடியும் என்பதால், சரியான வீரரை தேர்வு செய்வதில் சற்று தடுமாற்றம் இருந்தது. முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்த யுவராஜ் சிங், கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன் போன்றவர்களை எந்த அணிகள் எவ்வளவு தொகைக்கு வாங்கின என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை, இந்த முறை ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சனுக்கு கிடைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ₹9.5 கோடிக்கு வாட்சனை அள்ளியிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ₹7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் யுவராஜ் சிங். ஜாக்பாட் அடித்தது யார் என்றால், டெல்லி ஆல் ரவுண்டர் பவான் நேகி தான். ஆசிய கோப்பை, உலக கோப்பை டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்த கையோடு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ₹8.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து நட்சத்திரம் கெவின் பீட்டர்சனுக்கே ₹3.5 கோடி தான்! தென் ஆப்ரிக்காவின் கிறிஸ் மோரிஸ் (₹7 கோடி), சென்னை வீரர் முருகன் அஷ்வின் (₹4.5 கோடி), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (தலா ₹4.2 கோடி) ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். இப்படி, ஆச்சரியங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், விலை போகாத பல வீரர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் பரிசாகக் கொடுத்துள்ளது 2016 ஐபிஎல் ஏலம். மைக்கேல் ஹஸி, பெய்லி, ஜெயவர்தனே, கப்தில், கவாஜா, தில்ஷன், புஜாரா, கேன் ரிச்சர்ட்சன் என்று இந்த பட்டியல் மிக நீளம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்பட்டாலும், இந்திய யு-19 அணிக்காக விளையாடும் ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்களும் கோடியில் சம்பாதிக்க முடியும் என்பதே ஐபிஎல் தொடரின் அடையாளம், பெருமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக