சனி, 5 மார்ச், 2016

தேவையில்லா சந்தேகம்

உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருந்த இந்திய வில்வித்தை அணி வீரர், வீராங்கனைகளுக்கு விசா மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணி விலகுவதாக வில்வித்தை சங்கம் அறிவித்துள்ளது.அமெரிக்காவில் நாளை தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்பதற்காக மொத்தம் 31 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், 7 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாகி என மொத்தம் 10 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டதால், மற்ற வீரர், வீராங்கனைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் பயிற்சியாளர் சே வோம் லிம் (தென் கொரியா) விசா விண்ணப்பத்தையும் அமெரிக்க தூதரகம் நிராகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த இந்திய வில்வித்தை அணியும் உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக இந்திய வில்வித்தை சங்கம் அறிவித்துவிட்டது.‘இந்திய வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அசாம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த மிகவும் ஏழ்மையான பின்னணி கொண்டவர்கள். தூதரக அதிகாரியின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிப்பதில் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணம் என்றால், உலகம் முழுவதும் பயணித்துள்ள பயிற்சியாளர் சே வோம் லிம் விண்ணப்பத்தை நிராகரித்தது ஏன் என்றே புரியவில்லை. மத்திய அரசின் அனுமதி, அமெரிக்க வில்வித்தை சங்கத்தின் முறையான அழைப்பு இருந்தும் இப்படி நடந்துள்ளது வேதனையளிக்கிறதுஎன்கிறார் வில்வித்தை சங்க பொருளாளர் வீரேந்தர் சச்தேவா.வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள்? என்பது தான் தூதரக அதிகாரியின் கேள்வி. ‘நாங்கள் வில்வித்தை வீரர், வீராங்கனைகள். அம்பு எய்து விளையாடுகிறோம்என்ற அவர்களின் உண்மையான பதில், அதிகாரிக்கு பல்வேறு சந்தேகத்தை கிளப்பிவிட்டது. இவர்கள் நாடு திரும்பமாட்டார்கள், அமெரிக்காவிலேயே வேலை தேடிக் கொண்டு செட்டிலாகிவிடுவார்கள் என்று நினைத்து விசா கொடுக்க மறுத்திருக்கிறார்.அரசின் அங்கீகாரம் பெற்று முறைப்படி விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இப்படி அலைக்கழிப்பதும் அவமதிப்பதும் சரியல்ல. அப்படியே யாரேனும் தவறு செய்தால், அதை கண்டுபிடிப்பதும் தண்டிப்பதும் அமெரிக்க போலீசாருக்கு அத்தனை கடினமா என்ன? அந்த அதிகாரியின் தேவையில்லாத சந்தேகம், திறமையான இளைஞர்களின் பதக்க கனவை கலைத்திருக்கிறது. பிரபல அரசியல் தலைவருக்கோ, நடிகருக்கோ விசா மறுக்கப்பட்டிருந்தால் இப்படி அலட்சியம் காட்டுவார்களா? இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக