சனி, 5 மார்ச், 2016

பெரிய ஏமாற்றம்

இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரில், ஆண்கள் அணிகள் மோதும் ஒரு போட்டி கூட சென்னைக்கு ஒதுக்கப்படாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் பல்வேறு நாட்டு அணிகள் விளையாடுவதை பார்ப்பது, ரசிகர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பு. டிவியில் நேரடி ஒளிபரப்பு இருந்தாலும், ஸ்டேடியத்தில் இருந்து பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அதிலும் டி20 கிரிக்கெட் பற்றி சொல்லவே வேண்டாம். பந்துக்கு பந்து... பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆட்டம். 2016 ஐசிசி உலக கோப்பை டி20ல் குறைந்தபட்சம் நான்கு போட்டிகளாவது சென்னையில் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். அனுமதியில்லாமல் கட்டப்பட்ட மூன்று கேலரிகளால் ரசிகர்களுக்கு ஆபத்து என்று கூறி, அவற்றை இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்களாகிவிட்டது. பல கோடி ரூபாயை விழுங்கிய இந்த புதிய பார்வையாளர் மாடங்களால் எந்தப் பயனுமில்லை.அந்த கேலரிகளில் ரசிகர்களை அனுமதிக்காமல் இருக்கும்பட்சத்தில், போட்டிகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதை ஏற்கவில்லை. அனைத்து கேலரிகளும் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே உலக கோப்பை போட்டி ஒதுக்கப்படும் என்பதில் கண்டிப்பாக இருந்தது. அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டிகளையாவது ஒதுக்குங்கள் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், மகளிர் உலக கோப்பை டி20 ஆட்டங்களை மட்டும் சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அதுவாவது கிடைத்ததே என்ற ஆறுதல் ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கை நழுவியது சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.கிட்டத்தட்ட ₹200 கோடி ரூபாய் செலவில் ஸ்டேடியத்தை புதுப்பிக்க திட்டமிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அதற்கு அவசியமான அனுமதிச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து முறைப்படி பெறத் தவறியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மூன்று கேலரிகளும் இடிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டும் என்றால், பாரம்பரியம் மிக்க எம்சிசி உடற்பயிற்சிக் கூடத்தை தியாகம் செய்ய வேண்டும் என்ற இக்கடான நிலை. கிரிக்கெட் சங்கத்தின் குளறுபடியால், சென்னை ரசிகர்கள் மிகப் பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக