சனி, 5 மார்ச், 2016

மகத்தான மன உறுதி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அப்பாவிகள் அநியாயமாக பலியாகி உள்ளனர். கலை அரங்குகளிலும், கால்பந்து மைதானத்திலும் உள்ள ரசிகர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தேசிய ஸ்டேடியத்தில் உலக சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் மோதும் நட்புறவு கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தான், வெளியே ஈவு இரக்கமில்லாத தாக்குதலை தீவிரவாதிகள் கட்டவிழ்த்தனர்.குண்டுகள் வெடித்துச் சிதறியதில் ஸ்டேடியம் அதிர்ந்தாலும், விறுவிறுப்பான ஆட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கொஞ்சமும் பதற்றம் அடையாமல் போட்டி முடியும் வரை அமைதி காத்து தங்கள் மன உறுதியை வெளிப்படுத்தி உள்ளனர்.அது மட்டுமல்ல, 80,000 பேரும் அடித்துப் பிடித்து வெளியேறாமல் மைதானத்தின் மையப் பகுதியில் கூடி நின்று, போலீசாரின் அனுமதிக்காக பொறுமையாகக் காத்திருந்த பின்னரே வெளியேறினர்.சோகமே உருவாகவோ, சோர்ந்து போய் மவுனமாகவோ அல்ல! தங்கள் நாட்டு தேசிய கீதத்தை உணர்சி பொங்க உரக்கப் பாடியபடி. எந்த காரணத்துக்காகவும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்பதை உலகுக்கு ஆணித்தரமாக உணர்த்தியுள்ள பாரிஸ் நகர மக்களின் மன உறுதி உண்மையிலேயே மகத்தானது.போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் பதற்றத்தை வெளிப்படுத்தாமல், ரசிகர்களின் கவனத்தை சிதைக்காமல் முன்னதாகவே ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறி, நிலைமையை சமாளிக்க உதவியுள்ளார். அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால், தீவிரவாதிகள் சாதிக்கப் போவது ஏதுமில்லை. இந்த காட்டுமிராண்டிகளை ஒடுக்குவதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதும் மிக அவசியம். சம்பவம் நடந்தபிறகு பாதுகாப்பை பலப்படுத்துவதில் அர்த்தமில்லை. ஜெர்மனி கால்பந்து அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து, அவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் போலீசார் இன்னும் விழிப்புடன் செயல்பட்டிருந்தால், இத்தகைய அசம்பாவிதத்தை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். பாரிஸ் நகர தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களை அடிக்கடி சந்தித்துள்ள மும்பை நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் மன உறுதியும், காவல் துறையின் கண்காணிப்பும் இணைந்து தீவிராதிகளின் சதியை முறியடிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக