சனி, 5 மார்ச், 2016

பிரமிப்பூட்டும் சாதனை

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று உலக சாதனை படைத்திருக்கிறார் இந்திய வீரர் லியாண்டர் பயஸ்.கலப்பு இரட்டையரில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் (இதுவரை 9!) என்ற பெருமையும் உலக சாதனையும் அவர் வசமாகியிருக்கிறது. அமெரிக்க வீராங்கனை மார்டினா நவ்ரத்திலோவா 10 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அந்த சாதனையையும் பயஸ் சமன் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹிங்கிசுடன் இணைந்து நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் வசப்படுத்தி இருக்கிறார். ஒரே ஆண்டில் 3 கலப்பு இரட்டையர் பிரிவு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்லும் இந்த சாதனை, 1969ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் கை கூடியிருக்கிறது என்பதில் இருந்தே, இதன் மகத்துவம் எளிதாக விளங்கும்.சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை, மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார் இந்த 42 வயது இளைஞர். அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையும் இவருக்கே சொந்தம். கால் நூற்றாண்டு காலமாக களத்தில் இருக்கும் பயஸ், இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடிய பார்ட்னர்களின் எண்ணிக்கை சதத்தையும் தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ‘அடுத்த வாரம் டேவிஸ் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடத் தயார்என்று கூறும் பயசின் குரலில் உள்ள உற்சாகம், இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் சாதிப்பதற்கான உத்வேகத்தை நிச்சயம் அளிக்கும். ‘நான் அப்படி ஒன்றும் பெரிய வீரன் இல்லை. டென்னிசின் நுணுக்கங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி என்றும் சொல்ல முடியாது. அப்படி இருந்தும் என்னால் வெற்றி பெற முடிகிறது என்றால், எந்த சமயத்திலும் மன உறுதியைத் தளரவிடாமல் கடைசி வரை போராடுவதே காரணம்என்று தனது வெற்றி ரகசியத்தை பகிர்கிறார் பயஸ். அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் உறுதியுடன் உள்ள இவர், மெட்ராஸ்பிரிட்டானியா அமிர்தராஜ் டென்னிஸ் அகடமிமாணவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஓய்வறியா இந்த டென்னிஸ் இயந்திரம் இன்னும் பல வெற்றிகளைக் குவித்து தாய் நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக