சனி, 5 மார்ச், 2016

எது முக்கியம்?

விளையாட்டு போட்டிகளில் தில்லுமுல்லு புதிதல்ல. அசுர வேகம்/பலம் வேண்டி ஊக்கமருந்து உபயோகிப்பது, பந்து நன்றாக ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக கிரீஸ் தடவுவது, நகங்களால் கீறி நூலை பிரித்து சேதப்படுத்துவது, ஸ்பாட் பிக்சிங் செய்து சிக்னல் காட்டுவது என்று ரூம் போட்டு யோசித்து ஏமாற்றுவார்கள். மோசடி அம்பலமாகும் வரை பெரிய ஹீரோவாக காலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரிவார்கள். கையும் களவுமாக ஒருநாள் பிடிபடும்போது, புகழின் சிகரத்தில் இருந்து ஒரேயடியாக அவமானப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து காணாமல் போனவர்கள் ஏராளம். எத்தனை முன்னுதாரணங்கள் இருந்தாலும், அல்பத்தனமாக குறுக்கு வழியில் வெற்றியைத் தேடும் இந்த கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. வயதை குறைத்துக் காட்டி ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதாக 22 வீரர்களுக்கு தடை விதித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் எப்..ஆர் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வீரர்கள் அனைவரும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். முறைகேடுகளும் சர்ச்சைகளும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தனியுடமை என்பது ஏற்கனவே வெகு பிரசித்தம். சம்பந்தப்பட்ட வீரர்களின் நிஜ பிறப்பு சான்றிதழை மாநகராட்சியிடம் இருந்து வாங்கி ஒப்பிட்டு பார்த்ததில், தில்லுமுல்லு செய்திருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கு இணையாக சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம், ஈரான் நாட்டு மகளிர் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளில் 8 பேர் உண்மையில் ஆண்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பது.இவர்களில் பலரும் ஹார்மோன் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பவர்கள். அந்த நாட்டில் இத்தகைய சிகிச்சை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதற்கான நடைமுறைகள் முழுமையடைய குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். சிகிச்சை பூர்த்தி அடைவதற்காக காத்திருக்காமல், அணியின் வெற்றியே முக்கியம் என்ற பேராசையில் நிர்வாகிகளும் இந்த முறைகேட்டுக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள். சம்பந்தபட்ட வீராங்கனைகளின்? பெயர் விவரங்களை வெளியிடாமல் மவுனம் காக்கிறது ஈரான் கால்பந்து சங்கம்.விளையாட்டில் வெற்றி முக்கியம் தான். ஆனால், அதை முறையான வழியில் பெறுவதே பெருமை சேர்க்கும். ஏமாற்றிப் பெறும் வெற்றி என்றைக்கும் நிலைக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக