சனி, 5 மார்ச், 2016

ஆபத்தான விளையாட்டு

பாதுகாப்பான விளையாட்டாக கருதப்பட்டு வந்த கிரிக்கெட், இப்போது உயிர்பலி வாங்கும் மிக ஆபத்தான விளையாட்டாக மாறி வருவது கவலை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்துவீச்சில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்த சம்பவத்தின் மோசமான நினைவுகளே இன்னும் மறையாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் வீரர் அங்கித் கேஷ்ரி பலியானது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு அடுத்த நாளே கொல்கத்தாவை சேர்ந்த ராகுல் கோஷ் என்ற வீரர், பந்து தாக்கியதில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் இடி போல் இறங்கியது. ஐதராபாத்தில் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடிய 6 வயது சிறுவனின் உயிரிழப்பு சோகத்தின் உச்சம். தலைக் கவசம், கால்காப்பு, கையுறை... என்று எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் விளையாடிய இந்த சிறுவர்கள், நிஜமான கிரிக்கெட் பந்தை உபயோகித்ததே இந்த மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. டென்னிஸ் பந்து அல்லது சாதாரண ரப்பர் பந்தில் விளையாடி இருந்தால் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்காது. பிரபல இந்திய வீரர் ராமன் லம்பா உள்பட ஏற்கனவே பல வீரர்கள் கிரிக்கெட் விளையாடும்போது படுகாயம் அடைந்து இறந்திருந்தாலும், ஒரு சில நாட்களுக்குள்ளாக இப்படி கிரிக்கெட் களத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. பீல்டிங்கின்போது வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதும் கூட இறப்புக்கு காரணமாவது கவலையை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு உள்ள பாதுகாப்பு கவசங்களைப் போலவே பீல்டிங் செய்யும் வீரர்களுக்கும் பிரத்யேகமான பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்ய வேண்டியது அவசியம். ரக்பி விளையாட்டில் உடல் முழுவதற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முழுமையான கவச சீருடை அணிந்து விளையாடுவதை பார்த்திருக்கிறோம். இனி கிரிக்கெட்டிலும் அது போன்ற பாதுகாப்பான சீருடையை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. சிறுவர்கள் விளையாடும்போது அனுபவம் வாய்ந்த, நன்கு பயிற்சி பெற்ற மூத்த வீரர்கள் உடன் இருப்பதை பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும். மன மகிழ்ச்சிக்கும், உடற்பயிற்சிக்குமான விளையாட்டு, உயிரை பறிக்கும் எமனாக மாற இனியும் அனுமதிக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக