சனி, 5 மார்ச், 2016

பதக்க வேட்டை

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். கடந்த 1984ம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்துள்ள 11 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணியே பதக்க வேட்டையில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியனாகி இருந்தாலும், சொந்த மண்ணில் 3வது முறையாக நடக்கும் நடப்பு தொடரில் தங்க மழையில் நனைகிறது என்றால் மிகையல்ல. 2006ல் கொழும்புவில் நடந்த போட்டியில் இந்தியா 118 தங்கம் வென்றதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த தொடரில் நமது அணி மொத்தம் 214 பதக்கங்களை வென்றதும் புதிய சாதனை தான். இந்த இரண்டு சாதனைகளுமே கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் தற்போது நடந்து வரும் போட்டியில் உடைந்து நொருங்கியுள்ளன. தங்கம் மட்டுமே 150+, வெள்ளி, வெண்கலம் சேர்த்து 250+ என்று சொல்லி அடித்திருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கியுள்ள நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு நம்பிக்கை அளிக்கிறது. எட்டு நாடுகள் மட்டுமே பங்கேற்கும் போட்டி என்றாலும்... திறமை வாய்ந்த இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளின் சவாலுக்கு ஈடு கொடுப்பது அத்தனை எளிதல்ல. மல்யுத்தம், பளுதூக்குதல், வில்வித்தை, நீச்சல், பேட்மின்டன், ஸ்குவாஷ், டென்னிஸ், வாலிபால், துப்பாக்கி சுடுதல் என்று அனைத்து வகை போட்டியிலும் அசத்தியிருந்தாலும், தேசிய விளையாட்டான ஹாக்கியில் தங்கப் பதக்கத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்திருப்பது மட்டுமே இந்திய அணிக்கு திருஷ்டிப் பொட்டாகி இருக்கிறது. லண்டன் ஒலிம்பிக்சில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றமளித்தாலும், ரியோ டி ஜெனிரோவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, கனடா, அயர்லாந்து அணிகளின் சவால் காத்திருக்கும் நிலையில், தெற்காசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தால் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும். எனினும், இந்த தோல்விக்காக துவண்டு விடாமல் குறைகளைக் களைந்து, தீவிர பயிற்சி மற்றும் புதுமையான வியூகங்களுடன் முயன்றால் புதிய எழுச்சி நிச்சயம்.கவுகாத்திக்கு வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதும், போட்டிகள் எந்தவித தடங்கலும் இன்றி சிறப்பாக நடந்து வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும் ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடரிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்ற நம்பிக்கையை தெற்காசிய விளையாட்டு போட்டி கொடுத்துள்ளது. இந்திய அணியின் பதக்க வேட்கையும் வேட்டையும் தொடர வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக