சனி, 5 மார்ச், 2016

பயிற்சியாளர் தேவையா?

தலைமை பயிற்சியாளர் இல்லாமலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. நான்கு ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்தடங்கன் பிளெட்சர், உலக கோப்பை தொடருடன் விடைபெற்றுக் கொண்டார். புதிய பயிற்சியாளர் நியமனத்தில் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்துக் கொண்டே இருக்கிறது.
மறுபடியும் வெளிநாட்டு பயிற்சியாளரா? இல்லைஇந்தியாவை சேர்ந்தவரா? என்பதில் முடிவு செய்ய முடியாதது தான் இழுபறிக்கு காரணம். அந்த பதவி வெறுமையாகவே இருக்க, இந்திய அணி வங்கதேச தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அணியின் தற்போதைய இயக்குனர் ரவி சாஸ்திரி, புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல் கசிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இப்படி ஒரு பதவி அவசியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மிகத் திறமையான வீரர்களே சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனி பாணி இருக்கும். அதில் பயிற்சியாளர்களின் ஆதிக்கமும் குறுக்கீடும் இருந்தால், இயல்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள். எனவே, எந்த ஒரு அணிக்கும் மேலாளர் இருந்தால் போதும். மற்றதை எல்லாம் கேப்டன் பார்த்துக் கொள்வார்.
தலைமை பயிற்சியாளர் இல்லாவிட்டாலும், இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி இருப்பதால் எந்த பிரச்னையும் இருக்காது. அவர் மிகச் சிறந்த நிர்வாகி. அவரது அனுபவம் இந்திய அணிக்கு வெகுவாக உதவும்என்கிறார் இங்கிலாந்து முன்னாள் நட்சத்தரம் ஜெப்ரி பாய்காட்.
இந்த விஷயத்தில் உறுதியான முடிவு எடுக்காமல் கிரிக்கெட் வாரியம் இழுத்தடித்தாலும், ஆலோசனைக் குழுவில் முன்னாள் நட்சத்திரங்கள்
சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை சேர்த்திருப்பது ஆக்கபூர்வமாக நடவடிக்கை என்பதில் சந்தேகமே இல்லை. இவர்களின் அனுபவ ஆலோசனை, தகுதி வாய்ந்த தலைமை பயிற்சியாளரை அடையாளம் காண உதவும் என நிச்சயம் நம்பலாம்.


இந்தியா மற்றும் இளைஞர் அணி பயிற்சியாளராக மற்றொரு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமித்திருப்பதும் வரவேற்கத்தக்க நல்ல முடிவு. கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கும் நிலையில், அவசரப்பட்டு கிரேக் சேப்பல் போல ஒரு சர்ச்சைக்குரிய நபரை மீண்டும் பொறுப்பில் அமர்த்துவது சரியாக இருக்காது. சற்று தாமதமானாலும், இந்த முறை சரியான ஒருவரையே கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யும் என்ற நம்பிக்கையை அதன் சமீபத்திய நடவடிக்கைகள் ஏற்படுத்தி உள்ளன. நல்ல முடிவுக்காக காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக