சனி, 5 மார்ச், 2016

பொருத்தமான பரிசு

ஆகஸ்ட் 29... ஈடு இணையற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாள். தேசிய விளையாட்டு தினமாக நேற்று  கொண்டாடப்பட்ட நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி

பெற்றிருக்கிறது என்ற செய்தி ரசிகர்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மகளிர் அணியும் அந்த அரிய வாய்ப்பை உறுதி செய்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது. மறைந்த வீரர் தயான் சந்த்துக்கு சமர்ப்பிக்க, இதைவிட பொருத்தமான பிறந்தநாள் பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. 1980ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மகளிர் அணி தற்போது 2வது முறையாக ஒலிம்பிக்சில் விளையாடப் போகிறது. தகுதி பெற்றதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா? என்ற கேள்வியில் அர்த்தமில்லை. இந்த வாய்ப்பு 35 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருப்பதில் இருந்தே, போட்டி எத்தனை கடுமையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.செயற்கை புல்தரை மைதானங்கள் அறிமுகமானதும் ஐரோப்பிய அணிகள் அசுர வளர்ச்சி பெற, இந்திய அணியின் வீழ்ச்சி ஆரம்பமானது. பயிற்சி பெறுவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட பற்றாக்குறை என்ற நிலையில், சர்வதேச அணிகளின் வேகத்துக்கு இந்திய வீரர், வீராங்கனைகளால் ஈடு கொடுக்க முடியாமல் போனதில் ஆச்சரியமில்லை. நிர்வாகிகள் செய்த முறைகேடுகளும் குளறுபடிகளும் இந்திய ஹாக்கியின் நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்தன. 2008ல் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, ஹாக்கி இந்தியா என்ற புதிய நிர்வாக அமைப்பு உருவான பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சீரடையத் தொடங்கியிருக்கிறது. வீரர்கள் தேர்வில் அதிகார குறுக்கீடு, ஈகோ மோதலால் பந்தாடப்படும் பயிற்சியாளர்கள் போன்ற தடைகளையும் மீறி நமது ஹாக்கி வீரர், வீராங்கனைகள் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவதே மிகப் பெரிய சாதனை தான். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதே போதும் என்று ஓய்ந்துவிடாமல் தங்கப் பதக்கத்தை குறிவைத்து திவிரமாகப் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தையாவது வெல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக