சனி, 5 மார்ச், 2016

அனுமதி கிடைக்குமா?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா? சமூக வலைத்தளங்களில் இந்த கேள்வி தான் காரசாரமான விவாதப் பொருளாகி உள்ளது. இந்த அணிகள் மோதும் எந்த விளையாட்டாக இருந்தாலும், பரபரப்புக்கும் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது என்பதால், வெளிநாட்டு ரசிகர்கள் கூட இதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியம் இல்லை. சர்சதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்த அட்டவணைப்படி இந்த தொடர் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய கட்டாயம்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு அதிகம் என்பதால், எந்த அணியுமே பாகிஸ்தான் சென்று விளையாட முன் வருவதில்லை. இந்த நிலையில், இந்திய அணி அங்கு சென்று விளையாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐக்கிய அரபு நாட்டு மைதானங்களில் விளையாடலாம் வாருங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த அழைப்பையும், இந்திய தரப்பு ஏற்கவில்லை. கடும் இழுபறிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் பொதுவான இலங்கை மைதானங்களில் இந்த தொடரை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசு பச்சைக் கொடி காட்டிவிட்டது. இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவமும் கை கோர்த்துக் கொண்டு அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கிரிக்கெட் தொடர் ஒரு கேடா என கொதிக்கிறார்கள் ஒரு தரப்பினர். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் பைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது நமது அணி பாகிஸ்தானுடன் மோதியது எந்தவிதமான சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட் விளையாட ஏன் அனுமதிக்கக் கூடாது என்ற கேள்வியும் நியாயமானதே. விளையாட்டில் அரசியலை கலப்பது தவறு; இந்த தொடரால் இரு நாடுகளுக்கும் இடையே

இணக்கமான சூழல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது என்கிறது மற்றொரு தரப்பு. தொடர் கைவிடப்பட்டால், அபராதமாக பெரும் தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கொடுக்க வேண்டியிருக்கும். உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இருக்கும் பிசிசிஐ-க்கு இது ஒரு பொருட்டல்ல என்றாலும், முன்கூட்டியே மத்திய அரசிடம் பேசி அதன் அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக