சனி, 5 மார்ச், 2016

அவசரம் வேண்டாம்

தென் ஆப்ரிக்காவுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெற உள்ளது. உலக கோப்பை டி20 தொடருக்கு இன்னும் 5 மாத அவகாசமே இருக்கும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடக்கிறது இன்றைய தேர்வுக் குழு கூட்டம்.டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இளம் வீரர் கோஹ்லி, இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடந்த தொடரில் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். இதனால், மூன்று வகை போட்டிக்கும் அவரையே கேப்டனாக நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. இது குறித்து ஆன் லைனில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 26 சதவீத ரசிகர்கள் மட்டுமே கோஹ்லிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். டி20, ஒருநாள் போட்டிகளில் இருந்தும் டோனி ஓய்வு பெற்ற பிறகு கோஹ்லி பொறுப்பேற்கலாம் என்பது 72 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் அடிப்படையில் நடக்கும் போட்டிகளில், டோனியின் அனுபவத்தையும் ஆளுமையையும் அலட்சியப்படுத்தி விட முடியாது. அதே சமயம், அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரிக்கும் டெஸ்ட் கேப்டன் கோஹ்லிக்கும் இடையே நட்பும் புரிந்துணர்வும் வலுவடைந்து வருவதால், டோனி எந்த அளவுக்கு இயல்பாக செயல்பட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. வீரர்களின் ஒற்றுமை இதனால் பாதிக்கப்படுமா? என்ற கவலை எழுவதும் நியாயமானதே. ஒவ்வொரு வகை போட்டிக்கும் வெவ்வேறு கேப்டன் என்பது ஏற்கனவே இருக்கும் நடைமுறைதான். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இதை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகின்றன. இந்திய அணிக்கு அது எந்த அளவுக்கு பொருந்தும் என்பது தான் கேள்வி. சொந்த மண்ணில் உலக கோப்பை டி20 தொடர் நடக்க உள்ள நிலையில், தேவையில்லாத குழப்பத்துக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பது மிக முக்கியம்.டோனியின் உடல்தகுதி, ஆட்டத் திறன், தலைமைப் பண்பில் எந்தவித சேதாரமும் இல்லாததால், கேப்டனாக அவர் நீடிப்பதில் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்றே தோன்றுகிறது. தென் ஆப்ரிக்கா போன்ற மிக வலுவான அணியுடன் மோதும்போது, பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதும் சரியாக இருக்காது. தேர்வுக் குழுவினரின் முடிவும், அணிக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதாக அமையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக