சனி, 5 மார்ச், 2016

அவகாசம் கொடுத்திருக்கலாம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கணிசமான பதக்கங்களைக் குவிக்கத் தவறியதால், மூன்று பயிற்சியாளர்களை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிரடியாக பதவிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை மல்யுத்த வட்டத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.கத்தார் தலைநகர் தோஹாவில் சமீபத்தில் நடந்த இந்த தொடரில், இந்திய அணிக்கு நான்கு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் ஐந்து பதக்கங்கள் கிடைத்தன. தங்கப் பதக்கங்களை அள்ளி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றம். இதைத் தொடர்ந்தே விநோத் குமார், ரஜனீஷ், ரமணி சானு ஆகிய மூன்று பயிற்சியாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.நமது வீரர், வீராங்கனைகள் தோற்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் தோற்றத விதமே பயிற்சியாளர்களின் பதவியை காவு வாங்கியிருக்கிறது என்கிறார்கள். போட்டியின் கடைசி கட்டம் வரை முன்னிலை வகித்து தங்கப் பதக்கம் உறுதி என்ற நம்பிக்கையை தோற்றுவித்தவர்கள், கடைசி 15 விநாடிகளில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியதே மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தை ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும். இப்படி தோற்றது ஒருவர் அல்லது இரண்டு பேர் என்றால் கூட பணிநீக்கம் என்ற கடுமையான நடவடிக்கை இருந்திருக்காது. ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கடைசி சில விநாடிகளில் தோல்வியைத் தழுவியது உண்மையிலேயே எரிச்சலூட்டும் விஷயம் தான்.களத்தில் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக பயிற்சியாளரை நீக்குவது என்றால், யாருமே பதவியில் இருக்க முடியாது என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது. அரை இறுதியில் ராணா என்ற வீரர் கடைசி 30 விநாடி வரை 7-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார். கடைசி கட்டத்தில் எதிரணி வீரரிடம் தேவையில்லாமல் சரணடைந்து பதக்க வாய்ப்பை வீணடித்தார். மல்யுத்த போட்டியில் முன்னிலை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் இறுதிக் கட்டத்தில் எதிராளியுடன் அதிகமாக மோதாமல் தற்காப்பாக விளையாடுவது, வட்டத்துக்கு வெளியே செல்வது, நடுவர்களுடன் விவாதிப்பது... என்று நேரத்தைக் கடத்தும் வியூகத்தை கையாள்வதே வழக்கம். இதற்காக அதிகபட்சம் ஒரு புள்ளி மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்பதால், பதக்க வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.இந்த அடிப்படையான விஷயத்தில் கூட சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதாலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ‘எதிர்த்து விளையாடிய வீரர், வீராங்கனைகள் மிகவும் வலுவானவர்கள். நடுவர்களின் தரமும் சரியில்லை. இந்திய வீரர்களுக்கு எதிராகப் பல தவறான முடிவுகளை வழங்கினார்கள். அதனால் தான் கடைசி விநாடிகளில் வெற்றியை நழுவவிட நேர்ந்ததுஎன்கிறார் பயிற்சியாளர் விநோத் குமார். இதற்கு முந்தைய ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் கூட இந்தியா 5 வெண்கலம், ஒரு வெள்ளி மட்டுமே வென்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறது கோச் தரப்பு.பணிநீக்கம் என்பது சற்று அதிகப்படியான நடவடிக்கை. இதனால் வீரர், வீராங்கனைகளின் தன்னம்பிக்கையும் தகர்ந்துவிடும். மறுபடி பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினால், அடுத்து வரும் போட்டிகளில் எப்படி சாதிக்க முடியும்? என்ற கேள்வியும் நியாயாமானதாகவே உள்ளது. இந்த விஷயத்தில் மல்யுத்த கூட்டமைப்பு இன்னும் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு, பயிற்சியாளர்களுக்கு கூடுதல் அவகாசம் கொடுத்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக