சனி, 5 மார்ச், 2016

கை மேல் பலன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையை தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

2014 சீசனில் சிறு சிறு விதி மீறல்கள் தவிர்த்து, பெரிய அளவில் எந்த முறைகேடும் நடைபெறாதது திருப்தி அளிப்பதாக ஏசியு தலைவர் ரவி சவானி தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சொகுசுப் படகு இரவு விருந்தில் பங்கேற்ற சிலரது பெயர்களை முன்கூட்டியே தெரிவிக்காதது குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது. நடிகை பிரீத்தி ஜிந்தா அளித்த அந்த விருந்தில் எல்லா வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், நண்பர் ஒருவருக்கு அழைப்பு அனுப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

இதே போல டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்த இரவு விருந்து நிகழ்ச்சிகள் பற்றியும் முழுமையான தகவல் இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள், தங்களின் அறையில் நண்பர்களை தங்க வைத்தது பற்றி ஏசியு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவில்லை

இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அணி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அவர்கள் அளித்த பதில் திருப்தியளித்ததால் மேற்கொண்டு விசாரணை ஏதும் தேவைப்படவில்லை என்றும் ஏசியு தரப்பு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு அணி நிர்வாகத்துடனும் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தொடர்ந்து தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார். இதனால் அனைவரும் விழிப்புடன் இருந்து தவறு ஏதும் நிகழாமல் பார்த்துக் கொண்டனர்

சூதாட்ட தரகர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள முயற்சித்தால், அது குறித்து உடனடியாக ஏசியு பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் பலனளித்துள்ளது. இது தங்களின் கிரிக்கெட் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை வீரர்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.அணி நிர்வாகமும் வீரர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால், ஸ்பாட் பிக்சிங் மற்றும் மேட்ச் பிக்சிங் சூதாட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக தவிர்க்க முடிந்துள்ளது

அடுத்து வரும் சீசன்களிலும் இது தொடரும் என நம்புகிறோம் என்கிறார் கிரிக்கெட் வாரிய செயலர் அனுராக் தாகுர். விதிமீறல்களை அனுமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுத்தால், அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் தரப்பில் எந்த வித முறைகேட்டுக்கும் வாய்ப்பு இருக்காது. தொடரட்டும் ஏசியு கண்காணிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக