சனி, 5 மார்ச், 2016

காலம் கனியட்டும்

இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை பார்க்க இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுமே ஆர்வம் காட்டுவார்கள். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதால். மும்பையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தியதில் இருந்து, இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மட்டும் நேருக்கு நேர் மோத மிக அரிதாக வாய்ப்பு கிடைக்கிறது. எப்படியாவது இந்திய அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மிக ஆர்வமாக உள்ளது. இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு இல்லை என்றாலும், பொதுவான ஐக்கிய அரபு நாட்டு மைதானங்களிலாவது நடத்தி விடலாம் என்று தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.இந்திய கிரிக்கெட் வாரியத் தரப்பிலும் (பிசிசிஐ) பச்சை கொடி காட்டப்பட்டு இந்த தொடர் நடப்பதற்கான காலம் கணிந்து வருவதாகவே தோன்றிய நிலையில்தான், குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இப்படி பதற்றமான சூழல் இருக்கும்போது, இரு தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் அடித்துச் சொல்லியிருக்கிறார். ‘கிரிக்கெட்டும் தீவிரவாதமும் கை கோர்த்து செயல்பட முடியாதுஎன்ற கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டை முன்னாள் கேப்டன் கங்குலி உள்பட பலரும் வரவேற்றுள்ளனர். ‘இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருப்பது அடி முட்டாள்தனம். பிசிபி நிர்வாகம் இதில் தேவையில்லாமல் கவனம் செலுத்தி காலத்தை வீணடிக்கிறது. உண்மையிலேயே பிசிசிஐ இந்த தொடர் நடப்பதை விரும்பவில்லை. அரசாங்க அனுமதி கிடைக்கவில்லை என்று சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை இனியும் நம்பக் கூடாதுஎன்கிறார் பிசிபி முன்னாள் தலைவர் இஜாஸ் பட்.இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை சொல்லி பிரயோஜனமில்லை என்பதை அவர் உணரவில்லை. நட்புக் கரம் நீட்ட நாம் தயார் என்றாலும், எல்லையில் தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. நட்புறவை வளர்க்க கிரிக்கெட் உதவும் என்றாலும், இரு தரப்பு தொடரை நடத்துவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதுவரை காத்திருப்பதிலும் தவறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக