சனி, 5 மார்ச், 2016

யாருக்கு நஷ்டம்?

பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட முன்வராவிட்டால், ஐசிசி உலக கோப்பை உள்பட எந்த போட்டியிலும் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று மிரட்டி உள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (பிசிபி) தலைவர் ஷாரியர் கான்.வரும் டிசம்பரில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை எப்படியாவது நடத்திட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது பிசிபி. ஐக்கிய அரபு நாட்டு மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த தொடருக்கு, இந்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தொடர் அவசியமா என்ற கேள்வி எழுவதில் தவறேதும் இல்லை.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கெஞ்சிக் கொண்டிருந்த பிசிபி, இந்தியாவிடம் இனியும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்காதீர்கள் என்று அந்நாட்டு வீரர்கள் உசுப்பிவிட்டதால், இப்போது மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் பெரிய போட்டிகளில் கூட இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்கிறார் ஷாரியர் கான். பாகிஸ்தான் தொடர் பற்றி பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் பச்சைக் கொடி காட்டப்படும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடத் தயாராக இல்லை. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அந்நாட்டு வாரியம், வேறு வழியில்லாமல் பொதுவான ஐக்கிய அரபு மைதானங்களில் போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியுடன் இருதரப்பு தொடர் சாத்தியமானால், அதை வைத்து கொஞ்சம் தலை நிமிரலாம் என்ற கனவு கைகூடாத விரக்தியில், இப்போது மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கோ, வீரர்களுக்கோ எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஒப்பந்தத்தை மீறியதாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தாலும் அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட, பிசிசிஐ அதை மிக எளிதாக சமாளிக்க முடியும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்பு பாகிஸ்தான் தரப்புக்கே.கிரிக்கெட் போட்டிகள் முக்கியம் தான். அதை விட முக்கியம் நாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும். அதில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. வெற்று மிரட்டலைக் கைவிட்டு, பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர பிசிபிக்கு வேறு வழி ஏதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக