சனி, 5 மார்ச், 2016

பாவம் நடுவர்கள்

நடுவரின் முடிவுகளை கடுமையாக விமர்சித்த இந்திய அணி மேலாளருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்து வரும் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டு டி20 போட்டியிலும், முதல் ஒருநாள் போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. இதனால் கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.நடுவர்களின் சில முடிவுகள் தங்கள் அணிக்கு பாதகமாக அமைந்ததே தோல்விக்கு காரணம் என்று டோனி வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். அணியின் மேலாளர் வினோத் பாத்கேவும் இதில் சேர்ந்து கொண்டார். குறிப்பாக, இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் நடுவர் வினீத் குல்கர்னியை கடுமையாக விமர்சித்தார். விதிகளை மீறி, நடுவரை வெளிப்படையாக விமர்சித்த பாத்கேவுக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.நடுவர்களும் மனிதர்கள் தான். சில சமயம் அவர்களின் கணிப்பில் தவறு நேர்வதும் இயல்பானதே. இதனால் ஆட்டத்தின் முடிவே தலைகீழாக மாறிவிடுவதும் உண்டு. இதையெல்லாம் தீவிரமாக ஆலோசித்த பிறகே, நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் டிஆர்எஸ் விதிமுறையை ஐசிசி அறிமுகம் செய்தது.நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் டிஆர்எஸ் நூறு சதவீதம் நம்பகத்தன்மை கொண்டதா? என்ற கேள்வி நீடித்தாலும், பெரும்பாலான சமயங்களில் சரியான முடிவை அடையாளம் காட்டுவதாகவே தோன்றுகிறது.எல்லா நாட்டு அணிகளும் இதன் பயன்பாட்டுக்கு பச்சைக்கொடி காட்டி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் வீரர்களும் மட்டும் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், அணியின் தோல்விக்கு நடுவர்களின் பாரபட்சமான முடிவுகளே காரணம் என்று கேப்டன் டோனியும் மேலாளர் பாத்கேவும் சப்பைக்கட்டு கட்டுவதை ஏற்க முடியாது... அது உண்மையாகவே இருந்தாலும் கூட. இப்படி விமர்சிப்பதற்கான தார்மீக உரிமை இவர்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் டிஆர்எஸ் விதியை அமல்படுத்துவதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.எல்லா அணிகளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சர்வதேச போட்டிகளில் டிஆர்எஸ் விதிமுறையை பரீட்சார்த்தமாகக் கடைப்பிடிப்பதை கட்டாயமாக்கி, அதன் சாதக/பாதக அம்சங்களை விரிவாக அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கலாம். அனைத்து அணிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விடுத்து, நடுவர்களை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக