சனி, 5 மார்ச், 2016

தவறேதும் இல்லை!

மொகாலி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில், உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்வது வழக்கமான நடைமுறை தான். நடப்பு சுற்றுப்பயணத்தில் தென் ஆப்ரிக்க அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதால், டெஸ்ட் போட்டிகளில் பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு. மும்பையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 438 ரன் விளாசித் தள்ளியதை அடுத்து, வாங்கடே மைதான ஆடுகள பராமரிப்பாளரை திட்டித் தீர்த்துவிட்டார் இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி. நமது பலம் சுழற்பந்துவீச்சு தான். அதற்கு சாதகமாக ஆடுகளம் அமைக்காமல், எதிரணியின் ரன் குவிப்புக்கு உதவும் வகையில் பிட்ச் இருந்தால் எப்படி வெற்றியை வசப்படுத்த முடியும் என்பது சாஸ்திரியின் ஆதங்கம். இந்திய பவுலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் களம் அமைய வேண்டும் என்ற சிக்னல் கிடைத்துவிட்டதால், அதற்கேற்பவே முதல் டெஸ்ட் போட்டிக்கான மொகாலி ஆடுகளம் அமைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.தென் ஆப்ரிக்க தரப்புக்கும் இது எதிர்பார்த்த ஒன்றுதான். முதல் நாளில் இருந்தே களம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அவர்களும் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். சுமாரான பவுலர் எல்கர் சுழலையே தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி 201 ரன்னில் சுருண்டதால், ஆடுகளம் குறித்து மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திய பந்துவீச்சையும் ஸ்பின்னரான அஷ்வின் தான் தொடங்கினார். நமது வீரர்களுக்கே சிரமமாக இருக்கும் களத்தில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? மூன்றாவது நாளிலேயே போட்டி முடிந்துவிட்டது. முழுசாக 40 விக்கெட் காலி. வெற்றிக்கான இந்திய வியூகம் கை மேல் பலன் கொடுத்துள்ளது. எதிரியின் பலவீனம் எது என்பது தெரிந்த பிறகு, அதை குறிவைத்து அடிப்பதில் தவறேதும் இல்லை. ‘ஆடுகளத்தை குறை கூறாதீர்கள். பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையில் தான் தவறு. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைப்பதும் நியாயமானதே. நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும்போது, அவர்கள் வேகப் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் களத்தை தயார் செய்கிறார்கள். அப்போது யாரும் அதை விமர்சிப்பதில்லை. இங்கு செய்தால் மட்டும் கூப்பாடு போடுகிறார்கள்என்று விளாசுகிறார் அஷ்வின். மொகாலி டெஸ்ட் தோல்வியால் தென் ஆப்ரிக்க அணியை குறைத்து மதிப்பிட முடியாது. எஞ்சியுள்ள மூன்று டெஸ்டிலும் அவர்கள் கடுமையாகப் போராடுவார்கள். இந்திய வீரர்களும் ஆடுகளத்தை மட்டுமே நம்பாமல், எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக