சனி, 5 மார்ச், 2016

புதுமைகள் புகட்டும்...

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் வரும் 27ம் தேதி, கிரிக்கெட் விளையாட்டின் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது. முதல் முறையாக பகல்/இரவு டெஸ்ட் போட்டி அறிமுகமாவதுடன், இளஞ்சிவப்பு நிற பந்தையும் பயன்படுத்தப் போகிறார்கள்.இந்த புதிய முயற்சியை பலர் ஆதரித்தாலும், சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன. ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், ஸ்டேடியங்கள் வெறிச்சோடிக் கிடப்பது சகஜமாகிவிட்டது. ஒருநாள் போட்டிக்கு சுமாரான கூட்டம் என்றால், டி20 போட்டிகளுக்கு நிரம்பி வழிகிறது. டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதற்கும் ரசிகர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்பதற்காகவே, ஒரு சோதனை முயற்சியாக இந்த புதுமைகளை அரங்கேற்றுகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.இரவு நேரத்தில் நடக்கும் சில மணி நேர ஆட்டத்தை பார்க்க, அலுவலகத்தில் இருந்து நேராக அரங்குக்கு வருவார்களா ரசிகர்கள்? ஐந்து நாளும் ஸ்டேடியம் நிறையுமா? என்ற கேள்விகள் எல்லாம் இப்போது அவசியம் இல்லை. எந்த ஒரு புதிய முயற்சியும் எடுத்த எடுப்பிலேயே அமோக வரவேற்பை பெறும் என உறுதியாக சொல்ல முடியாது. தொடக்கத்தில், வெறும் பொழுது போக்குக்காக என்று முத்திரை குத்தப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட், இன்று அசுர வளர்ச்சி பெற்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகளையே ஓரங்கட்டி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பகல்/ இரவு டெஸ்ட் என்ற முயற்சிக்கு அதிக எதிர்ப்பு இல்லாவிட்டாலும், இளஞ்சிவப்பு நிற பந்தை பயன்படுத்துவது பற்றிய சந்தேகங்கள்/கேள்விகள் வரிசை கட்டுகின்றன. இந்த வண்ணத்திலான பந்தை இரவு நேரத்தில் தெளிவாகப் பார்க்க முடியாது என்று ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், சுழற்பந்துவீச்சாளரான நாதன் லியான் பிங்க் பந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.‘இந்த வகை பந்துகள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்தில் போடப்பட்டிருக்கும் தையலை பேட்ஸ்மேன்களால் பார்க்க முடியாது. பந்தின் போக்கையும், சுழலையும் கணிப்பது சிரமம் என்பதால் விக்கெட் வேட்டைக்கு உதவும்என்கிறார் லியான். கிரிக்கெட்டில் இந்த புதுமைகள் அறிமுகமாவதை, ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பது அரை வேக்காட்டுத்தனம். அடிலெய்டு டெஸ்டில் கிடைக்கும் அனுபவத்தில் இருந்து, சாதக/பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து அதன் பிறகு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக