சனி, 5 மார்ச், 2016

பவுலர்களுக்கு நிம்மதி

ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்க வகை செய்யும் பேட்டிங் பவர்பிளே விதிமுறைக்கு விடை கொடுத்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.பந்து வீச்சாளர்கள் மனம் வெதும்பிப் புலம்பும் அளவுக்கு ஆட்டத்தை ஒருதலைப் பட்சமாக மாற்றி இருந்தது இந்த விதி என்பதில் சந்தேகமே இல்லை

கடைசி 15 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் பதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் பரிதாபமாக விழிப்பதை பார்த்த பிறகே, ஐசிசி-க்கு விழிப்பு வந்துள்ளது.ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், வட்டத்துக்கு வெளியே 5 பீல்டர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று மனம் இறங்கியிருக்கிறார்கள்

கூடவே, இனி எல்லா வகைநோ பால்க்கும் பிரீ ஹிட் என்ற அறிவிப்பும். கிரிக்கெட் மட்டைகள் மட்டுமல்ல பந்துகளின் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பந்தை தைக்க பயன்படுத்தப்படும் நூலின் கனத்தை சற்று கூட்டுவதால், வேகம் மற்றும் சுழலுக்கு சற்று சாதகமாக இருப்பதுடன், நன்கு இறுக்கமாகப் பிடிக்கவும் முடியும் என பிரத்யேக ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் ஐசிசி தலைமை செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்.

உலக கோப்பைக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்த சில விதி முறைகள், பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டன. இது குறித்து எழுந்த விமர்சனங்களை உரிய முறையில் பரிசீலித்து, தற்போது தகுந்த மாற்றங்களை செய்துள்ளோம்என்கிறார் அவர்.ரன் குவிப்புக்கும், விக்கெட் வேட்டைக்கும் சம வாய்ப்பு இருந்தால் தான் ஆட்டத்தில் சுவாரசியம் இருக்கும் என்பதை இப்போதாவது ஐசிசி உணர்ந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் பவுலர்கள்

டி20 வந்த பிறகு ஒருநாள் போட்டிகளில் 300, 400 என்பதெல்லாம் சர்வ சாதாரணமான ஸ்கோராகிவிட்டது. எப்போது பவர் பிளே வரும் என்று காத்திருந்து, பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வேகம் இப்போது சற்று மட்டுப்படும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் ஆட்டம் மந்தமாகிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்

பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிடுவது மட்டும் தான் கிரிக்கெட் என்ற ரசிகர்களின் மனப்போக்கு தான், பேட்டிங் பவர் பிளே விதி அறிமுகமாவதற்கு காரணம். நல்ல வேளையாக அந்த விதியின் மோசமான பின் விளைவுகளை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சரி செய்திருக்கிறார்கள். இனி மட்டைக்கும் பந்துக்கும் சரிசமமான போட்டி இருக்கும் என நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக