ஒலிம்பிக் போட்டி... விளையாட்டு
வீரர், வீராங்கனைகளின்
கனவு/லட்சியம்.
பதக்கத்தை விடுங்கள்,
பங்கேற்பதே பெரிய கவுரவம். அதற்கு தகுதி
பெறுவதும் இமாலய
சவால். உலகத்
தரம் வாய்ந்த
திறமையாளர்களுக்கு ஈடு கொடுத்தால்
மட்டுமே அந்த
வாய்ப்பும் சாத்தியமாகும். பிற விளையாட்டுகளுடன் ஒப்பிட்டால், குத்துச்சண்டையில்
சவால் மட்டுமல்ல...
ஆபத்தும் அதிகம்.
ரியோ டி
ஜெனிரோவில் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கும்
ஒலிம்பிக் போட்டிக்கு,
இந்திய பாக்சிங்
வீரர், வீராங்கனைகள்
ஒருவர் கூட
இதுவரை தகுதி
பெறவில்லை. விரைவில் நடக்க உள்ள ஆசிய
அளவிலான ஒலிம்பிக்
தகுதிச் சுற்றுக்காக
நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். திடகாத்திரமான
வெளிநாட்டு வீரர்களின் குத்துகளை சமாளித்து வெற்றியை
வசப்படுத்தினால் கூட, ரியோ ஒலிம்பிக்சில் அவர்களால்
பங்கேற்க முடியுமா
என்பது கேள்விக்குறியாகி
இருப்பது தான்
வேதனையின் உச்சம்.இதில் அவர்களின்
தவறு ஒரு
சதவீதம் கூட
இல்லை! நிர்வாகக்
குளறுபடியால் நேர்ந்த அவலம். தலைவர் சந்தீப்
ஜஜோடியா, பொதுச்
செயலர் ஜெய்
காவ்லிக்கு எதிராக மாநில அமைப்புகள் போர்க்கொடி
தூக்கியதால் முடங்கிப் போயிருக்கிறது இந்திய குத்துச்சண்டை
சங்கம். நம்பிக்கையில்லா
தீர்மானம் கொண்டு
வரப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச பாக்சிங் கூட்டமைப்பு
தலையிட்டு இடைக்கால
நிர்வாகக் குழுவை
நியமித்தது.கடந்த ஆண்டு மே மாதத்தில்
இருந்து அங்கீகரிக்கப்பட்ட
நிர்வாக அமைப்பு
இல்லாமல் அல்லாடிக்
கொண்டிருக்கிறது ‘பாக்சிங் இந்தியா’. சீனாவில் மார்ச்
23ல் தொடங்கும்
ஆசிய தகுதிச்
சுற்று வரை
மட்டுமே அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக புதிய
நிர்வாகிகள் பொறுப்பேற்காவிட்டால், களத்தில்
இந்திய வீரர்,
வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்தாலும் பயனில்லை. அவர்களால்
ரியோ ஒலிம்பிக்சுக்காக
பிரேசில் பறக்க
முடியாது.இந்த
இடியாப்ப சிக்கலைத்
தீர்ப்பதற்காக இந்திய விளையாட்டு ஆணையமும், இடைக்கால
நிர்வாகக் குழுவும்
இணைந்து ஒரு
ஒருங்கிணைப்புக் குழுவை! உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில்
ஷில்லாங்கில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியின்போது
எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்த அளவுக்கு
கை கொடுக்கும்
என்பதை பொறுத்திருந்து
தான் பார்க்க
வேண்டும். தாய்
நாட்டுக்காக பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்ற
வெறியோடு கடுமையாகப்
போராடும் குத்துச்சண்டை
வீரர், வீராங்கனைகளின்
திறமை, முயற்சி,
லட்சியம்... நிர்வாக சீர்கேட்டால் விழலுக்கு இறைத்த
நீராய் வீணாகிப்
போக அனுமதிக்கவே
கூடாது.
சனி, 5 மார்ச், 2016
சரியான வீரர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்
கேப்டன் பிரெண்டன்
மெக்கல்லம். 34 வயது தான் ஆகிறது. ஒருநாள்,
டி20, டெஸ்ட்
என மூன்று
வகை போட்டியிலும்
முத்திரை பதித்த
வெகு சில
வீரர்களில் முக்கியமானவர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே,
சர்வதேச போட்டிகளில்
இருந்து ஓய்வு
பெறுவது என்ற
அவரது துணிச்சலான
முடிவு யாரும்
எதிர்பாராதது. ஆஸ்திரேலியாவுடன் கிறைஸ்ட்சர்ச்
மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட்
போட்டியுடன் பிரியாவிடை பெறப்போகிறார். ஒரு 30 அல்லது
40 ரன் கவுரவமான
ஸ்கோர் அடித்தாலே
திருப்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்க,
அதிரடியாக உலக
சாதனை படைத்து
அசத்திவிட்டார் மெக்கல்லம். அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால்
அணி இக்கட்டான
நிலையில் தடுமாறிக்
கொண்டிருந்தபோது, கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஆஸ்திரேலிய
பந்துவீச்சை அடித்து நொறுக்கியவர் 54 பந்தில் சதம்
விளாசி மகத்தான
சாதனைக்கு சொந்தக்காரராகி
இருக்கிறார். வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ்,
பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக்
வசம் இருந்த
டெஸ்ட் போட்டிகளில்
அதிவேக சதம்
(56 பந்து) என்ற சாதனை உடைந்து நொறுங்கி
மெக்கல்லம் வசமாகிவிட்டது.கடைசி போட்டியில் சதம்
விளாசுவது என்ற
பெருமை எல்லோருக்கும்
கிடைத்துவிடாது. டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர்
போன்ற ஈடு
இணையற்ற வீரர்களுக்கு
கூட அது
கை கூடவில்லை.
சதம் அடிப்பதே
பெரிய விஷயம்
எனும்போது, அதில் உலக சாதனையும் படைத்திருக்கும்
மெக்கல்லமை பாராட்ட வார்த்தைகள் இல்லை. டெஸ்ட்
போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்
என்ற பெருமையையும்
தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.ஆஸ்திரேலியாவின் ஆடம்
கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்து (100 சிக்சர்) முன்னேறியவர்,
தற்போது 106 சிக்சருடன் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
விளையாடிக் கொண்டிருக்கும் 101வது டெஸ்டில் இன்னும்
ஒரு இன்னிங்ஸ்
மிச்சம் இருக்கிறது.
அணியில் அறிமுகமானதில்
இருந்து ஒரு
டெஸ்ட் போட்டியை
கூட மிஸ்
செய்யாமல் தொடர்ச்சியாக
விளையாடி வருவதிலும்
கூட மெக்கல்லம்
தான் பெஸ்ட்.
இந்தியாவில் நடக்க இருக்கும் ஐசிசி உலக
கோப்பை டி20
தொடரில் விளையாடிய
பிறகு ஓய்வு
பெற்றிருக்கலாமே... என்ற ஆதங்கம்,
நியூசிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல; கிரிக்கெட் ரசிகர்கள்
அத்தனை பேருக்குமே
நிச்சயம் இருக்கும்.
பதக்க வேட்டை
தெற்காசிய விளையாட்டு போட்டியில்
இந்திய அணியின்
ஆதிக்கம் கொடிகட்டிப்
பறக்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக
செயல்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை
அள்ளிக் குவித்து
வருகின்றனர். கடந்த 1984ம் ஆண்டு தொடங்கி
இதுவரை நடந்துள்ள
11 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணியே
பதக்க வேட்டையில்
முதலிடம் பிடித்து
ஒட்டுமொத்த சாம்பியனாகி இருந்தாலும், சொந்த மண்ணில்
3வது முறையாக
நடக்கும் நடப்பு
தொடரில் தங்க
மழையில் நனைகிறது
என்றால் மிகையல்ல.
2006ல் கொழும்புவில்
நடந்த போட்டியில்
இந்தியா 118 தங்கம் வென்றதே அதிகபட்ச சாதனையாக
இருந்தது. அந்த
தொடரில் நமது
அணி மொத்தம்
214 பதக்கங்களை வென்றதும் புதிய சாதனை தான்.
இந்த இரண்டு
சாதனைகளுமே கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் தற்போது
நடந்து வரும்
போட்டியில் உடைந்து நொருங்கியுள்ளன. தங்கம் மட்டுமே
150+, வெள்ளி, வெண்கலம் சேர்த்து 250+ என்று சொல்லி
அடித்திருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்
போட்டி நெருங்கியுள்ள
நிலையில், இந்திய
வீரர், வீராங்கனைகளின்
செயல்பாடு நம்பிக்கை
அளிக்கிறது. எட்டு நாடுகள் மட்டுமே பங்கேற்கும்
போட்டி என்றாலும்...
திறமை வாய்ந்த
இலங்கை, பாகிஸ்தான்,
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளின் சவாலுக்கு ஈடு
கொடுப்பது அத்தனை
எளிதல்ல. மல்யுத்தம்,
பளுதூக்குதல், வில்வித்தை, நீச்சல், பேட்மின்டன், ஸ்குவாஷ்,
டென்னிஸ், வாலிபால்,
துப்பாக்கி சுடுதல் என்று அனைத்து வகை
போட்டியிலும் அசத்தியிருந்தாலும், தேசிய விளையாட்டான ஹாக்கியில்
தங்கப் பதக்கத்தை
பாகிஸ்தானுக்கு தாரை வார்த்திருப்பது மட்டுமே இந்திய
அணிக்கு திருஷ்டிப்
பொட்டாகி இருக்கிறது.
லண்டன் ஒலிம்பிக்சில்
கடைசி இடம்
பிடித்து ஏமாற்றமளித்தாலும்,
ரியோ டி
ஜெனிரோவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்வார்கள்
என்ற நம்பிக்கை
இன்னும் உள்ளது.ஜெர்மனி, நெதர்லாந்து,
அர்ஜென்டினா, கனடா, அயர்லாந்து அணிகளின் சவால்
காத்திருக்கும் நிலையில், தெற்காசிய விளையாட்டில் தங்கம்
வென்றிருந்தால் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும். எனினும், இந்த தோல்விக்காக துவண்டு
விடாமல் குறைகளைக்
களைந்து, தீவிர
பயிற்சி மற்றும்
புதுமையான வியூகங்களுடன்
முயன்றால் புதிய
எழுச்சி நிச்சயம்.கவுகாத்திக்கு வந்துள்ள
பாகிஸ்தான் அணி வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதும், போட்டிகள் எந்தவித தடங்கலும் இன்றி
சிறப்பாக நடந்து
வருவதும் மகிழ்ச்சி
அளிக்கிறது. இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும்
ஐசிசி உலக
கோப்பை டி20
போட்டித் தொடரிலும்
பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் எந்த சிக்கலும்
இருக்காது என்ற
நம்பிக்கையை தெற்காசிய விளையாட்டு போட்டி கொடுத்துள்ளது.
இந்திய அணியின்
பதக்க வேட்கையும்
வேட்டையும் தொடர வாழ்த்துவோம்.
ஆச்சரியம்... ஏமாற்றம்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்
தொடருக்கான வீரர்கள் ஏலம் அமர்க்களமாக நடந்திருக்கிறது.
சிலருக்கு ஆச்சரியம்,
பலருக்கு ஏமாற்றம்.
ஸ்பாட் பிக்சிங்
சூதாட்ட சர்ச்சை
காரணமாக சென்னை
சூப்பர் கிங்ஸ்,
ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிகள் இரண்டு
ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால்
புதிதாக உருவாகி
உள்ள புனே,
ராஜ்கோட் அணிகள்
வீரர்களை வாங்குவதில்
அதிக ஆர்வம்
காட்டின. கடந்த
சீசனில் தொடர்ச்சியாக
தோல்விகளை சந்தித்த
டெல்லி டேர்டெவில்ஸ்
பல வீரர்களைக்
கழட்டி விட்டதால்,
ஏலத்தில் மிகக்
கவனமாக செயல்பட்டது.230
இந்திய வீரர்கள்,
121 வெளிநாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து
116 பேரை மட்டுமே
ஏலம் எடுக்க
முடியும் என்பதால்,
சரியான வீரரை
தேர்வு செய்வதில்
சற்று தடுமாற்றம்
இருந்தது. முன்னணி
வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்த
யுவராஜ் சிங்,
கெவின் பீட்டர்சன்,
ஷேன் வாட்சன்
போன்றவர்களை எந்த அணிகள் எவ்வளவு தொகைக்கு
வாங்கின என்பதை
தெரிந்து கொள்ள
ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.அதிகபட்ச தொகைக்கு
ஏலம் எடுக்கப்பட்ட
வீரர் என்ற
பெருமை, இந்த
முறை ஆஸ்திரேலிய
ஆல் ரவுண்டர்
ஷேன் வாட்சனுக்கு
கிடைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
₹9.5 கோடிக்கு வாட்சனை அள்ளியிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
அணிக்காக ₹7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் யுவராஜ் சிங். ஜாக்பாட் அடித்தது
யார் என்றால்,
டெல்லி ஆல்
ரவுண்டர் பவான்
நேகி தான்.
ஆசிய கோப்பை,
உலக கோப்பை
டி20 தொடர்களுக்கான
இந்திய அணியில்
இடம் பிடித்த
கையோடு, டெல்லி
டேர்டெவில்ஸ் அணிக்காக ₹8.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்
என்பதை யாருமே
எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து நட்சத்திரம்
கெவின் பீட்டர்சனுக்கே
₹3.5 கோடி தான்!
தென் ஆப்ரிக்காவின்
கிறிஸ் மோரிஸ்
(₹7 கோடி), சென்னை வீரர் முருகன் அஷ்வின்
(₹4.5 கோடி), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்
(தலா ₹4.2 கோடி)
ஆனந்த அதிர்ச்சியில்
திக்குமுக்காடிப் போயுள்ளனர். இப்படி, ஆச்சரியங்கள் ஒரு
பக்கம் இருந்தாலும்,
விலை போகாத
பல வீரர்களுக்கு
பலத்த ஏமாற்றத்தையும்
பரிசாகக் கொடுத்துள்ளது
2016 ஐபிஎல் ஏலம். மைக்கேல் ஹஸி, பெய்லி,
ஜெயவர்தனே, கப்தில், கவாஜா, தில்ஷன், புஜாரா,
கேன் ரிச்சர்ட்சன்
என்று இந்த
பட்டியல் மிக
நீளம். வாய்ப்பு
கிடைக்காதவர்கள் வருத்தப்பட்டாலும், இந்திய யு-19 அணிக்காக
விளையாடும் ரிஷப் பன்ட் போன்ற இளம்
வீரர்களும் கோடியில் சம்பாதிக்க முடியும் என்பதே
ஐபிஎல் தொடரின்
அடையாளம், பெருமை.
எதற்கும் ஒரு எல்லை
இந்திய அணியுடன் அடிலெய்டு மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் மைக்ரோபோனில் பேசிக்கொண்டே பேட் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அடுத்த சில விநாடிகளில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது, ‘உங்கள் ஓட்டை வாயை மூடிக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்புங்கள்’ என்று இந்திய வீரர் கோஹ்லி சைகை செய்ததும் புயலை கிளப்ப தவறவில்லை.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான ‘டிவி 9’ சேனலுக்கு பேட்டி கொடுத்தபடியே பேட்டிங் செய்ததால் தான், கவனம் சிதறி விக்கெட்டை பறிகொடுத்தார் ஸ்மித் என்கிறார்கள். செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பின் தரத்தை மேம்படுத்துவதை குறை கூற முடியாது. அதே சமயம், களத்தில் இருக்கும் வீரர்களின் உடலில் மைக்ரோபோனை பொருத்தி ஓவருக்கு ஓவர் அவர்களின் வாயைக் கிளறி பேட்டி எடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்! என அலுத்துக் கொள்கிறார்கள் முன்னாள் பிரபலங்கள்.ஸ்மித்தை ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்தது பற்றி கோஹ்லியிடம் கேட்டால், ‘அவர் மைக்ரோபோன் வைத்திருந்தது எனக்கு தெரியாது. எங்கள் அணியின் இளம் பந்துவீச்சாளர்களை ஸ்மித் கிண்டலடித்தார்.
பவுண்டரி அடித்துவிட்டு எகத்தாளமாக ஏதோ கூறியதை பார்த்தேன். அவரை கண்காணித்து எச்சரித்து வையுங்கள். இல்லையென்றால் நான் தலையிட நேரிடும் என்று நடுவரிடம் கூறினேன். அதற்குள்ளாகவே அவுட்டாகி விட்டார். அதனால் தான் வாயை மூடிக்கொண்டு போங்கள் என்று சைகை செய்தேன்’ என்கிறார்.இதே போல விறுவிறுப்பான ஆட்டத்தில் மூக்கை நுழைக்கும் மற்றொரு தொழில்நுட்பமாக உருவெடுத்திருக்கிறது ஸ்பைடர் கேமரா.
மைதானத்தின் குறுக்காக கம்பியில் தொங்கியபடி இப்படியும் அப்படியுமாக நகர்ந்து பறவையின் பார்வையில் படம் பிடிக்கும் இந்த கேமராவின் கோணம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை காட்டிப் பரவசப்படுத்துகிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சிட்னியில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் கோஹ்லி வேகமாக அடித்த பந்து ஸ்பைடர் கேமராவில் பட்டு எல்லைக் கோட்டை கடந்தபோது, இந்திய அணிக்கு 4 ரன் சேர வேண்டிய நிலையில் அந்த பந்து ‘செல்லாது’ என்று நடுவர் அறிவித்தது கேப்டன் டோனியை கடுப்பாக்கி விட்டது.
‘அந்த 4 ரன் ஆட்டத்தின் முடிவையே மாற்றியமைக்கக் கூடியது என்பதை மறந்துவிடக் கூடாது. இனி ஸ்பைடர் கேமராவால் ஆட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என்கிறார் டோனி. நியாயமான வாதம். காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், அதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)