கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச்சாளர்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினை அவர்களது பந்து வீசும் முறைக்கான அங்கீகாரம்தான். சில பந்து வீச்சாளர்கள் பந்தை முறையாக வீசாமல் 'எறிவதாக' அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கையாகி விட்டது. எறிவதாகக் குற்றம் சாட்டப்படும் வீரர்களில் பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர், (ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்) இலங்கையின் சுழற்பந்து மின்னல் முத்தையா முரளிதரன் ஆகியோர் முன்னிற்கிறார்கள்.
எறிவதாக எறியப்பட்டவர்கள் :
இதே போன்ற குற்றச்சாட்டு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ராஜேஷ் சௌகான், ஹர்பஜன் சிங் ஆகியோர் மீதும் எழுந்தது. மற்ற நாட்டுக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்கள் வீரர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சௌகானையும், ஹர்பஜனையும் போட்டிகளிலிருந்து விலக்கிக் கொண்டது. அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததோடு சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கவும் செய்தது. இது அந்த வீரர்களின் மனதைப் பாதித்ததோடு தன்னம்பிக்கையையும் சிதைப்பதாக அமைந்தது. இப்போது இரண்டு வீரர்களுமே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் மனமுடைந்து போயுள்ளனர்.
முத்தையா இது தப்பய்யா!
இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிரான 'எறியல்' குற்றச்சாட்டு பல பிரச்சினைகளைக் கிளப்பியது. இலங்கை அணி 1996 ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டேரல் ஹேர் என்ற நடுவர், முரளிதரன் பந்தை எறிவதாகக் குற்றம் சாட்டி 'நோ-பால்' என அறிவித்தார்.
ஆஸ்திரேலிய ரசிகர்களும் முரளி பந்து வீச வரும்போதெல்லாம் கிண்டலும், கேலியுமாகக் கூக்குரல் எழுப்ப நிலைமை விபரீதமானது.
நடுவர் டேரல் ஹேர் எழுதிய 'மேன் இன் தி மிடில்' என்ற புத்தகத்திலும் முரளியின் பந்து வீசும் முறை தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டது. (மூன்று நாடுகள் ஒரு நாள் போட்டித் தொடர்).
இந்த முறை ஆஸ்திரேலிய நடுவர் ராஸ் எமர்சன் என்பவர், முரளிதரன் பந்தை எறிவதாகக் குற்றம் சுமத்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில், நடுவர் ராஸ் எமர்சனின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்கா வாக்குவாதத்தில் இறங்கியதோடு தனது அணி வீரர்களுடன் வெளிநடப்பும் செய்தார்.
ரணதுங்காவிற்கு அபராதமும், இரண்டு போட்டிகளில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது. இலங்கை வீரர்களுக்கு ஆஸ்திரேலியா மீதே ஒரு கசப்புணர்வு பதிவாகிப் போனது. தடித்த வார்த்தைப் பிரயோகங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
அடிலெய்டு ஒரு நாள் போட்டியில் நடந்த வெளிநடப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக செயல்படத் துவங்கியது. தங்கள் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளரின் எதிர்காலம் விளையாட்டல்ல என்று கருதிய இலங்கை வாரியம், மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடியது.
அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் எந்திரவியல் (பயோ மெகானிக்ஸ்) ஆராய்ச்சிப் பிரிவு முரளியின் பந்து வீசும் முறையை ஆய்வு செய்தது.
முரளிதரன் மீது 1996 ல் முதன்முதலாக 'எறிகிறார்' என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது அவரது பந்து வீச்சை ஒளிப்பதிவு செய்து முப்பரிமாண முறையில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் முரளியின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இம்முறை அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
'அசைவுகளைத்' துல்லியமாக அலசி ஆராயும் புதியதோர் அமைப்பைப் பயன்படுத்த முடிவு செய்த ஆய்வாளர்கள் முரளியின் பந்து வீசும் கையில் 14 ஒளி பிரதிபலிப்புப் புள்ளிகளைப் பதித்தனர். இதன் மூலம் அவர் பந்து வீசும் போது நிகழும் கையின் அசைவுகளை கணினி மூலம் எளிதாக ஆய்வு செய்ய முடிந்தது. முரளியின் பிரத்தியேகமான சுழற்பந்து வீச்சுகளையும், அப் பந்துகளை அவர் வீசும்போது முழங்கை, மணிக்கட்டு இணைப்புகள் செயல்படும் விதத்தையும் நுணுக்கமாகக் கணக்கிட்டனர்.
ஆய்வின் முடிவில் முரளிதரன் பந்தை எறியவில்லை என்றும், அவரது கையில் பிறவியில் இருந்தே இருக்கும் சிறு குறைபாடே எறிவது போல் தோற்றமளிப்பதற்கான காரணம் என்றும் தெரிய வந்தது. முரளியின் வலது கை நீட்டப்பட்ட நிலையில் 37 டிகிரி கோணத்தில் வளைந்திருப்பதாக மருத்துவச் சோதனைகள் தெரிவித்தன. இக் குறைபாடு அவரது சகோதரர்களுக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு முடிவுகளைப் பேராசிரியர் புரூஸ் எலியாட், 'கிரிக்கெட்டில் அறிவியலும் மருத்துவமும்' என்ற தலைப்பில் நடைபெற்ற உலக அளவிலான கருத்தரங்கில் வெளியிட்டார்.
எனினும் இது குறித்த இறுதி முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் அறிவிக்க வேண்டும். ஆய்வறிக்கை, முரளிதரன் சரியான முறையில்தான் வீசுகிறார் என நற்சான்றிதழ் கொடுத்திருப்பதால் முத்தையா முரளிதரனும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதோடு மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
கிரிக்கெட் உலகில் எரியும் பிரச்சினையாக விளங்கும் 'எறியல்' குற்றச்சாட்டுகளுக்கு இனி சுலபமாகத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை அறிவியல் ஆய்வாளர்கள் அளித்துள்ளனர்.
முரளியும் முன்னெப்போதையும் விட நம்பிக்கையுடன் பந்து வீசத் துவங்கியுள்ளார்.
- பா. சங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக