சனி, 30 அக்டோபர், 2010

மெஸ்ஸி இட்லி… காகா வடை

உலக கோப்பை கலாட்டா

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா போட்டுத் தள்ளியதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோருடைய கவனமும் லயனல் மெஸ்ஸி மீதே இருக்க, ’ஜபுலானி’ கேப்பில் அர்ஜெண்டினாவின் கோன்சாலோ ஹாட்ரிக் கோல் அடித்து ஸ்பாட் லைட் வெளிச்சத்தை கொள்ளை அடித்தார். கோல்டன் ஷூ இவருக்குத்தான் என்று இப்போதே பெட் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டமும் அவசியம் என்பது மெஸ்ஸி விஷயத்தில் புரூப் ஆகியிருக்கிறது. கிளப் போட்டிகளில் கோல் மழை பொழியும் மெஸ்ஸியால் உலக் கோப்பையில் சிறு தூறல் கூட போட முடியவில்லை. மனிதர் என்னதான் துல்லியமாக அடித்தாலும், பந்து வலைக்குள் நுழையாமல் அடம் பிடிக்கிறது. பல ஷாட்டுகள் கோல் கம்பத்தில் பட்டு திரும்ப, மெஸ்ஸி தலையில் கை வைத்தபடி நொந்து போனார். கோல் அடிக்காவிட்டாலும், அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு இவர்தான் அச்சாணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கோப்பை எங்களுக்குத்தான் என அர்ஜெண்டினா மிரட்டிக் கொண்டிருக்க சக பேவரைட்களான ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் அதிர்ச்சித் தோல்விகளால் அரண்டு போயிருக்கின்றன. இந்த அணிகள் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவதற்குள் நாக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது. 
உலக செஸ் சாம்பியன் விஸ்வனாதன் ஆனந்த், மெஸ்ஸியின் பரம ரசிகராம். ‘லியோ விளையாடும் ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ணமாட்டேன். அவரோட ஆட்டத்த பார்க்கும் போதுதான், கால்பந்து எவ்வளவு அழகான விளையாட்டுங்கறதே தெரியுது. அர்ஜெண்டினா அணிக்கு அதிக சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். தூக்கம் கெட்டாலும் முடிஞ்ச அளவுக்கு எல்லா போட்டியையும் பார்த்துடனும்கிற முடிவோடதான் இருக்கேன்’ என்கிறார் ஆனந்த்.
ஒரு மிட்நைட் போட்டியை பார்த்தாலே மறுநாள் அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சகோதரிகள் ஜோன்னி (22), அலோனா (24) இருவரும் தொடர்ந்து 87 மணி நேரம் உலக கோப்பை கால்பந்து ஒளிபரப்பை பார்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக 5 விநாடிக்கு மேல் டிவியை விட்டு கண்ணை அசைக்கக் கூடாது. ஒரு மணிக்கு 5 நிமிடம் மட்டுமே பிரேக். ஒரு நாளைக்கு 5 கப் காபி அல்லது டீதான் அலவ்டு. என்ன நீங்க ரெடியா? சகோதரிகளை கண்காணித்த கின்னஸ் குழுதான் தொடர்ந்து 48 மணி நேரமா தூங்கிக்கிட்டிருக்காம்!
டுவிட்டர் இணையதளத்தில் உலக கோப்பை போட்டி கொடி கட்டி பறக்கிறது. பிரேசில் கால்பந்து நட்சத்திரம் காகா, அர்ஜெண்டினா பயிற்சியாளர் மரடோனாவின் மச்சான் செர்ஜியோ (கவாஸ்கர் - விஸ்வநாத் மாதிரி), சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர்… என்று டுவிட்டரில் தகவல் பரிமாறும் பிரபலங்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது. ஒரே நாளிலேயே பிளாட்டரை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 20,000த்தை தொட்டிருக்கிறது. விண்வெளியில் இருந்து கூட கேட்க முடியும் ஒரே சத்தம் ’வுவுஸுலா’ முழக்கம்தான் என்று ஒரு ரசிகர் ஹைகூ வடிக்க, இணையதள ரசிகர்களின் முற்றுகையில் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கிறது டுவிட்டர்.
’வுவுஸுலா’ குழல்களின் காதை பிளக்கும் ஓசையால் ‘பிபா’ மட்டுமல்ல பிபிசி சேனலும் திணறிக் கொண்டிருக்கிறது. உங்க வர்ணனையை ஒழுங்காவே கேட்க முடியவில்லை என்று 545 புகார்கள் வர, அந்த சத்தத்தை மட்டும் ஃபில்டர் செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் பிபிசி பிஸி.
உலக் கோப்பை ஜுரம் தென் ஆப்ரிக்க ஓட்டல்களையும் விட்டுவைக்கவில்லை. ஓட்டலையே மினி ஸ்டேடியமாக மாற்றியிருக்கிறார்கள். நட்சத்திர வீரர்களின் கட் அவுட்கள், கோப்பையில் விளையாடும் 32 நாடுகளின் கொடிகள், ராட்சத திரையில் நேரடி ஒளிபரப்பு என்று களை கட்டுவதுடன் மெஸ்ஸி இட்லி, காகா வடை, ரொனால்டினோ தோசை, டிடியர் கிச்சடி என்று டிஷ்களுக்கு விதவிதமாகப் பெயர் வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறார்கள்.
ரூனி 65 சாப்பிட்டுக் கொண்டே போட்டிகளை ரசித்துக் கொண்டிருங்கள். மீண்டும் சந்திப்போம்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக