டெல்லி காமன்வெல்த் போட்டி எதிர்பார்த்ததை விடவும் சுவாரசியமாகவே களைகட்டியுள்ளது. பதக்க வேட்டையில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் நீடிப்பதால் ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் அதிகரித்துள்ளது. போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், டெல்லியில் அனல் பறக்கிறது.
மகளிர் பளுதூக்குதலில் சோனியா சானு வெள்ளி, சந்தியா ராணி தேவி வெண்கலம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தனர். துப்பாக்கி சுடுதலில் பெய்ஜிங் நாயகன் அபினவ் பிந்த்ரா – ககன் நரங் ஜோடி இந்தியாவுக்கு முதல் தங்கத்தை சுட்டது. ஷூட்டிங், வில்வித்தை, மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போட்டிகளில்தான் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் குவிந்தன.
துப்பாக்கி சுடுதல் தனிநபர் பிரிவில் பிந்த்ரா – நரங் இடையே கடும் போட்டி. அபாரமாக சுட்ட நரங் 600க்கு 600 புள்ளிகள் குவித்து தங்கத்தை தட்டினார். இதே போல மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜோடியாக தங்கம் வென்ற அனிசா சயீத் – ராஹி சர்னோபத் இருவரும் தனிநபர் பிரிவிலும் முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தினர்.
பள்ளி நாட்களில் என்.சி.சி.யில் பெஸ்ட் ஷூட்டர் விருது வாங்கிய அனிசா சயீதுக்கு காமன்வெல்த் கனவெல்லாம் சுத்தமாக இல்லை. டீச்சர் வேலை, மாதம் 1500 ரூபாய் சம்பளம்… வாங்கிய முதல் பொருள் துப்பாக்கி! இவரது ஆர்வத்தை பார்த்த புனே எஸ்.பி. நவீன துப்பாக்கி மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி ஊக்குவித்திருக்கிறார்.
தேஜஸ்வினி சாவந்த் – லஜ்ஜா கோஸ்வாமி ஜோடி 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் வெள்ளிப்தக்கம் பெற்றது. ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஓம்கார் சிங் தங்கம் வென்று அசத்தினார்.
மல்யுத்தத்தில் சஞ்சய் குமார், ரவீந்தர் சிங், அனில் குமார் ஒரே நாளில் 3 தங்கம் வென்று அமர்க்களப்படுத்தினர். மகளிர் மல்யுத்தத்தில் கீதாவின் உடும்புப்பிடி தங்கம் தட்டியது. நிர்மலா தேவி வெள்ளி வென்றார். பளுதூக்குதலில் ரவி குமார், ரேணு பாலா சானு தங்கம் வென்றபோது இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். குழு ரீகர்வ் பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது அற்புதமான சாதனையாக அமைந்தது.
டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், சானியா, இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதி, போபண்ணா-சோம்தேவ் பதக்க நம்பிக்கையை தக்கவைத்தனர். இங்கிலாந்து தடகள வீரர் மார்க் லூயிஸ் பிரான்சிசின் ஷூ திருடு போனாலும், மனிதர் மனம் தளராமல் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப்தக்கம் வென்று ஆறுதல் தேடிக் கொண்டார். டெல்லி போட்டியின் அதிவேக வீரராக ஜமைக்காவின் லெரான் கிளார்க்கும் (10.12 விநாடி), அதிவேக வீராங்கனையாக நைஜீரியாவின் ஒலுடமோலாவும் பெருமை பெற்றனர்.
உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 2-5 என்ற கோல் கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது ஹாக்கி ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வென்று பதக்க நம்பிக்கையை தக்க வைப்போம் என்கிறார் கேப்டன் ராஜ்பால் சிங். நமக்குதான் நம்பிக்கை வர மறுக்கிறது. இளம் ஜிமானாஸ்டிக் வீரர் ஆஷிஷ் குமார் (19 வயது) புளோர் எக்சர்சைஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று, காமன்வெல்த் பதக்க வரலாற்றில் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கால் பதிக்க உதவினார்.
படித்துக் கொண்டிருக்கும்போதே பதக்கப்பட்டியலில் இந்திய அறுவடை அமோகமாக நடந்திருக்கும் என்பது நிச்சயம். காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக பதக்கங்களைக் குவிக்கும் என்று அடித்துச் சொல்லலாம். நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகளம், ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா போட்டியே இல்லாமல் முதல் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. இங்கிலாந்துக்கு 3வது இடம்தான்.
போட்டிகள் ஒருபுறம் அமர்க்களமாக நடந்தாலும் சிறு சிறு பிரச்னைகளும் எழத்தான் செய்தன. விளையாட்டு கிராமத்தில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ‘மெட்டல் ஸ்டாப்பர்’ சாதனம் தவறுதலாக இயங்கியதால் உகாண்டா நிர்வாகிகள் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
எக்கச்சக்கமான காண்டம்கள் சேர்ந்து கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட சம்பவம் வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பான செக்சில் கவனமாக இருப்பதைக் காட்டுகிறது என்று காமன்வெல்த்
கூட்டமைப்பின் தலைவர் பாசிட்டிவாக சமாளித்தார்.
வேல்ஸ் வீராங்கனையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆபாசமாக போட்டோ எடுத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டு டெல்லி போட்டிக்கு கறும்புள்ளி குத்தியிருக்கிறது. எக்கச்சக்கமான நெருக்கடியில் இருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு மைக்கை பிடித்தாலே நாக்கு குழறுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆசாத் அவர்களே… இளவரசர் டயானா சார்லஸ் அவர்களே என்று எக்கச்சக்கமாக உளறி நகைச்சுவை நாயகன் விருதை தட்டிச் சென்றார். பாதுகாப்பு கெடுபிடிகள், அதிக டிக்கெட் கட்டணம் காரணமாக தொடக்கத்தில் ஸ்டேடியங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஏதாவது செய்யுங்கப்பா என்று காமன்வெல்த் கூட்டமைப்பு புலம்பித் தள்ளியது. நல்ல வேளையாக இந்தியாவுக்கு அதிக அளவில் பதக்கங்கள் கிடைத்ததால் ரசிகர்கள் ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர்.
போட்டிகள் வெற்றிகரமாக நடப்பதால், ஒலிம்பிக் போட்டியை நடத்த நாங்க ரெடி என்கிறார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித். காமன்வெல்த் கிளைமாக்ஸ் காட்சிகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக