சனி, 30 அக்டோபர், 2010

அர்ஜெண்டினாவில் ஆக்டோபஸ் படுகொலை

டிவியில் நேரடி ஒளிபரப்பு

தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் – நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்துக் கொண்டது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரை இறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் குல தெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஜெர்மனியிடம் கால் இறுதியில் அர்ஜெண்டினா உதை வாங்கும் என்று சொன்னதான் அந்த நாட்டு ரசிகர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். அர்ஜெண்டினா டிவி சேனலில் ‘எ பர்பெக்ட் வேர்ல்டு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ராபர்டோ என்பவர், நேரடி ஒளிபரப்பில் ஆக்டோபஸ் ஒன்றை வெறித்தனமாக கொலை செய்து ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார். ‘இதோ இந்த ஆக்டோபசை, நம்மை தோற்கடித்த பால் ஆக நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதன் கழுத்தை திருகப் போகிறேன். அப்படியே தலையை வெட்டி துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு அரைக்கிறேன்’ …என்று நேர்முக வர்ணனை கொடுத்தபடியே அந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியால் அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்கள் திருப்தி அடைந்திருந்தாலும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பால் மீது இருந்த ஆத்திரத்தை ஒரு பாவமும் செய்யாத வேறு ஒரு அப்பாவி ஆக்டோபஸ் மீது காட்டுவதா? என்று டிவி சேனல் மீது வழக்கு தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறார்களாம். 

நீல ரத்தம்…
ஆக்டோபஸ் ஒரு ஆச்சரியமான உயிரினம். கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்தது போல ராட்சத ஆக்டோபஸ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாக வளர்ந்த ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். அதிகபட்சமாக 71 கிலோ எடை கொண்ட ஆக்டோபஸ் ஒரு முறை பிடிபட்டிருக்கிறது.
+ ஆக்டோபஸ் உடலை பாதியாக வெட்டினால், 2 பக்க உடலும் எந்த மாற்றமும் இல்லாமல் சமமாக இருக்கும்.
+ ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலி என்கிறார்கள். எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளும். நம்மை போலவே குறுகியகால, நீண்டகால நினைவாற்றல் கொண்டது.
+ எலும்புக் கூடு கிடையாது.
+ எல்லா ஆக்டோபஸ்களுமே விஷத் தன்மை கொண்டவை என்றாலும், நீல நிற வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் மட்டுமே மனிதனைக் கொள்ளும் அளவுக்கு விஷமுடையது.
+ 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழும்.
+ செக்ஸ் உறவு கொண்ட ஆண் ஆக்டோபஸ் அடுத்த சில மாதங்களில் இறந்துவிடும். முட்டைகள் பொறித்த கொஞ்ச நாளில் பெண் ஆக்டோபசும் அவுட்.
+ 3 இதயம் கொண்டது. ஹீமோசயானின் என்ற ரசாயனம் இருப்பதால் ஆக்டோபஸ் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.    

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக