பொது வேலைநிறுத்தம் கூட இல்லையே என்று குழப்பமடைவர்களுக்கு - ''கிரிக்கெட் மாட்ச் நடக்குதாம் ; அதுதான் இப்படி'' என்று பதில் வரும்.
ஒரு நோயாகவே வியாபித்து மக்களைப் பாதித்து வரும் விளையாட்டு கிரிக்கெட். இது விஷம் அல்ல, இளைஞர்களின் மனதை ஒருமுகப்படுத்தி நன்மை பயக்கும் விஷயம் என்று வாதிடுவோரும் உண்டு.
மற்ற விளையாட்டுகளைப் போல் மணிக்கணக்கில் இன்றி நாள் கணக்கில் ! விளையாடப்படுவதுதான் கிரிக்கெட்டின் பலமும் பலவீனமுமாக அமைகிறது. கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கு மகத்தானது.
இங்கிலாந்தில் பதினான்காம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் ஆடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் 17 ஆம் நூற்றாண்டில்தான் அது முழு வளர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டில் அது மேலும் முறைப்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலடி எடுத்து வைத்து ஆதிக்கம் செலுத்திய காலனி நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் விதைக்கப்பட்டு இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் வானளாவ உயர்ந்து நிற்கிறது.
ஒரு விளையாட்டாக மட்டுமின்றி மிகப் பெரிய வியாபார வலையாகவும் அது விரிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வருத்தமளிக்கும் சங்கதி. இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் தனி மரியாதை திரை நட்சத்திரங்களையும் அரசியல்வாதிகளையுமே கூட நிச்சயம் பொறாமை கொள்ளச் செய்யும். கனவான்களின் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டில் சமீப காலத்தில் எழுந்த சூதாட்டக் குற்றச்சாட்டுகள் சூறாவளியாகக் கிளம்பி அதன் மீதான மதிப்பை வெகுவாகக் குறைத்து விட்டன.
ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களைக் கொட்டாவி விட வைத்த நேரத்தில்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி அமோக வரவேற்பைப் பெற்றது. இவ்வகைப் போட்டிகளுக்குத்தான் கவர்ச்சியும் ஆதரவும் அதிகம்.
கிரிக்கெட் போன்று அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் விளையாட்டுகள் வேறு எதுவுமில்லை என்றே சொல்லலாம். டெஸ்ட் போட்டிகள் மட்டும் பாரம்பரிய வெள்ளைச் சீருடைகளுடன் ஆடப்பட ஒருநாள் போட்டிகளில் வண்ணமயம்தான். இரவில் மின்னொளியில் வெள்ளைப் பந்துடன் என்று ஒருநாள் போட்டிக்கு மெருகு சேர்த்துக் கொண்டே வருகின்றனர். 8 வீரர்கள் கொண்ட அணிகள், 25 ஓவர்கள் அடிப்படையிலான அரைநாள் கிரிக்கெட் போட்டிகள் கூட விரைவில் அரங்கேற்றப்படலாம் என்கிறார்கள். இது போன்ற மாற்றங்களுக்கு அடிகோலுபவர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள்தான்.
விஞ்ஞான ரீதியான தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் கிரிக்கெட் முன்னிலை வகிக்கிறது. ஸ்டம்புகளில் மிகச்சிறிய ஒளி, ஒலிப்பதிவுக் கருவி, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மூன்றாவது நடுவருடன் ஆலோசனை கலந்து முடிவெடுக்கும் வசதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைத் துல்லியமாகக் காட்டிடும் 'ஸ்நிக்கோ மீட்டர்' தற்போதைய புதுவரவு. கால்காப்பில் படும் பந்து விக்கெட்டைத் தாக்கியிருக்குமா என்பதை அறியவும் வழி கண்டாகி விட்டது. பந்து விழுந்த இடம், திரும்பும் திசை, பயணிக்கும் வேகம் ஆகியவற்றை ஆய்ந்து சில விநாடிகளுக்குள் கணித்துச் சொல்லி விட முடிகிறது. எனினும் இந்தப் புதிய முறைகள் சர்வதேசக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் இன்னமும் அங்கீகரிக்கப் படவில்லை.
கிரிக்கெட் போட்டிகளின்போது தங்கள் பொருள்களை விளம்பரம் செய்வதற்காக வியாபார நிறுவனங்கள் வேறு போட்டா போட்டி போடுகின்றன.
கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டை, கால்காப்பு, சட்டை, தொப்பி என்று அங்குலம் அங்குலமாகத் தங்கள் நிறுவன அடையாளத்தைப் பொறிப்பதற்குக் கோடிக்கணக்கில் செலவழிக்க முன் வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற முன்னணி வீரர்கள் தேவதூதர்களாகவே ரசிகர்களால் போற்றப்படுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை வீரர்கள் தேர்வுமுறை எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அதிகார மையம் தன்னிச்சையாகவும் எதேச்சதிகாரமாகவும் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வாரியம் வீரர்களின் நலன் குறித்துக் கவலைப்படாமல் ஏராளமான போட்டிகளில் அவர்களைப் பங்கேற்க வைக்கிறது.
ரசிகர்கள் கட்டுப்பாடின்றிக் களத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவிப்பதும், வீரர்கள் மீது கையில் கிடைக்கும் பொருள்களையெல்லாம் வீசி எறிந்து காயம் விளைவிப்பதும் சமீப காலக் களங்கங்களாகத் தலைகாட்டுகின்றன. பந்து வீச்சாளர்கள் சிலர் மீது அவ்வப்போது எழும் 'எறியல்' குற்றச்சாட்டுகளும் பரபரப்பையூட்டி வருகின்றன.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆயினும், பெரும்பான்மையினரால் விரும்பப்படும் விளையாட்டாகக் கிரிக்கெட் இப்போதும் முந்திக் கொண்டுதான் இருக்கிறது.
பல்வேறு வகையான நிறைகுறைகளைப் பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டு மேலும் புதிய நூற்றாண்டில் பல மாற்றங்களை உள்வாங்கிப் பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக