வெள்ளி, 29 அக்டோபர், 2010

குறைகளைக் களைந்தால் வெற்றி நமதே

ஆகஸ்டு 29 - தேசிய விளையாட்டு தினம்

மிக உயரிய விளையாட்டுப் பாரம்பரியம் உள்ள நாடு இந்தியா. சுதந்திர நாடாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் விளங்குவதோடு 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகையுடன் ஒரு மகத்தான சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது.

பல துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், பெருமை மிகு விளையாட்டுத் துறையில் நாம் அத்தகையதோர் வளர்ச்சியினைப் பெற்றுள்ளோமோ? என்ற கேள்விக்கு இல்லை என்றே பதிலளிக்க வேண்டியுள்ளது.

விளையாட்டுத் துறையை விளையாட்டாகவே! நடத்தும் நமது அணுகுமுறைதான் அதற்குக் காரணம். எனினும், சுதந்திரத்திற்குப் பின்னரான குறுகிய காலத்தில் நமது விளையாட்டுத்துறை அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

நூறு கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை என்பதே நமது பலமாகவும், பலவீனமாகவும் அமைந்து விடுகிறது. அந்த மிகப் பெரிய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது நமது வெற்றிகளும் சாதனைகளும் மிகச் சிறிய அளவினதாகக் குறுகிப் போய்விடுகின்றன.

அப்படியிருந்தும் கூட பல உலக சாதனையாளர்கள் நமது நாட்டின் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி - லியாண்டர் பயஸ் இணை, கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர், பில்லியர்ட்ஸ் வீரர் கீத் சேத்தி, பளு தூக்கும் வீராங்கனைகளான குஞ்சராணி, கர்ணம் மல்லேஸ்வரி, தடகளப் போட்டியில் தங்க மங்கை பி.டி. உஷா, மில்காசிங், துப்பாக்கிச் சுடுதலில் ஜஸ்பால் ராணா, கால்பந்து வீரர் பைசுங் பூட்டியா, ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை என்று சாதனையாளர்களின் வரிசை நீண்டு கொண்டே போகிறது.

கபடி விளையாட்டில் நம்மை வீழ்த்த யாருமில்லை. கேரம் வீரர் மரிய இருதயம் செய்துள்ள சாதனைகளும் குறிப்பிடத்தக்கது. என்ன செய்வது, கபடி, கேரம் போன்ற விளையாட்டுகளுக்கு இன்னமும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே!

ஹாக்கியில் இந்திய அணி மகத்தான சாதனைகளைத் தன் வசம் வைத்திருந்தாலும் பின்னர் தனது பிடியை அது தளர்த்திக் கொண்டுவிட்டது. நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆடுகளம், பயிற்சி, வீரர்கள் தேர்வு ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தாததன் விளைவு நாம் பின்தங்க நேரிட்டது.

ஹாக்கி மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளுக்குமே அது பொருந்தும்.

அதற்காக, அரசு இயந்திரம் செயலற்றிருப்பதாகச் சொல்ல முடியாது. விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறது.

ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்திற்கு முன்பாக 1982 ஆம் ஆண்டு தனியாக 'விளையாட்டுத் துறை' என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டுக் கொள்கை வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 1985ல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கலை, கலாச்சாரம், கல்வி போன்ற துறைகளில் வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

விளையாட்டுத் துறைக்குத் தேவைப்படும் வசதிகள், மேம்படுத்துதல், நிர்வகித்தல், அனுமதி அளித்தல் போன்ற பணிகளைத் கவனிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) அமைக்கப்பட்டது.

இந்திய விளையாட்டு ஆணையம்

* முதன்மைத் திட்டங்கள்
* விளையாட்டுக் கல்வி நிறுவனங்கள்
* சாதனையாளர்களுக்கான விருதுகள்
* விளையாட்டின் மேம்பாட்டிற்கான ஊக்கத் தொகைகள்
* உடற்கல்வி, விளையாட்டு கட்டமைப்பு
போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது.

1953 ஆம் ஆண்டில் 'ராஜ்குமாரி அம்ரித் கவுர்' விளையாட்டுப் பயிற்சி திட்டம், 1961 ஆம் ஆண்டில் பாட்டியாலாவில் 'நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகம்' தொடங்கப்பட்டது போன்றவை விளையாட்டு மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட மிகச் சிறப்பான நடவடிக்கைகள் ஆகும்.

விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பான சாதனைகளைப் படைக்கும் வீரர் வீராங்கனைகளை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு பல விருதுகளை நிறுவி ஊக்குவித்து வருகிறது.

விருதுகளின் விவரங்கள்

* அர்ஜுனா விருது - நிறுவப்பட்ட ஆண்டு 1961

வெண்கலத்தால் ஆன அர்ஜுனன் உருவச்சிலை, பத்திரச் சுருள், பகட்டு வண்ணச் சட்டை மற்றும் கழுத்துப் பட்டை ஆகியவற்றை உள்ளடக்கியது.

1994 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது பெறும் வீரர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ. 50,000 வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

* துரோணாச்சாரிய விருது - நிறுவப்பட்ட ஆண்டு 1985

விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த பயிற்சியாளர்களாக விளங்குபவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டு அடிப்படையில் மிகச் சிறந்த சாதனையாளர்களை உருவாக்கிய பயிற்சியாளர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களும் விருது பெறத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

துரோணாச்சாரியாரின் வெண்கல உருவச்சிலை, பத்திரச் சுருள், பகட்டு வண்ணச் சட்டை, கழுத்துப் பட்டை மற்றும் பரிசுத் தொகை ரூ. 75,000 ஆகியவற்றை உள்ளடக்கியது.

* ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

விளையாட்டுத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளங்குகிறது. மகத்தான சாதனை புரிந்த வீரர், வீராங்கனை அல்லது அணிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான பரிசுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகம் - பாட்டியாலா, (பெங்களூர், கல்கத்தா, காந்தி நகர் மையங்கள்), லக்ஷ்மிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரி - குவாலியர் (நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து பெற்றது), திருவனந்தபுரம் ஆகியவை இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் கீழ் இயங்கும் கல்விப் பிரிவுகளாக அமைந்துள்ளன.

ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரும் பிற அமைப்புகள்:

மண்டல மையங்கள்(பெங்களூர், கல்கத்தா, தில்லி, காந்தி நகர், சண்டிகர், இம்பால்)
துணை மையங்கள்(கவுஹாத்தி, அவுரங்காபாத்).

நாடு முழுவதும் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு திட்டங்களை வகுத்து இந்திய விளையாட்டு ஆணையம் செயலாற்றி வருகிறது.

* சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு. (ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை).

* திறமையான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிச் சம்பளம் வழங்கும் திட்டம் (1970-71 ல் நிறுவப்பட்டது).

* தேசிய அளவில்:ரூபாய் 4,800 (ஆண்டு ஒன்றுக்கு)
* மாநில அளவில்:ரூபாய் 3,600 (ஆண்டு ஒன்றுக்கு)

தேசிய அளவிலான பயனீட்டாளர்களுக்கு உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் 100 பேரும், யூனியன் பிரதேசங்களுக்கு 40 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

* சிறந்த வீரர்களின் பயிற்சிக்காக உதவிச் சம்பளம்
* சாதனையாளர்களுக்கு ஓய்வூதியம்
* வீரர்களுக்கான தேசிய நல நிதி
* பயண உதவித்தொகை
* மகளிர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம்
* கிராமப்புற விளையாட்டுத் திட்டங்கள்
* கிராமப்புற விளையாட்டுச் சங்கங்கள்
* வடகிழக்கு மாநிலங்களின் விளையாட்டுத் திருவிழா
* டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள்
* மகளிர் தேசிய விளையாட்டுத் திருவிழா
* விளையாட்டுத் திட்டங்களின் மதிப்பீடு
விளையாட்டு மற்றும் உடற்கல்வி அணிகள், வல்லுநர்கள் பரிமாற்றம்
போன்ற செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் முதன்மைத் திட்டங்களாக,

* தேசிய விளையாட்டுத் திறனறிதல் போட்டிகள்
* விளையாட்டு விடுதிகள்
* ராணுவத்தில் ஆடவர் விளையாட்டுப் பிரிவு
* தேசியப் பயிற்சித் திட்டம்
* விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்

போன்றவை விளங்குகின்றன.
இவ்வளவு விரிவான வலை அமைப்பு, திட்டமிடல் இருந்தும், இந்திய விளையாட்டுத் துறை குறிப்பிடத்தக்க அளவில் பிரகாசிக்க முடியாததற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறையும், வீரர்கள் தேர்வு முறையும்தான்.

கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் தவிர்த்து ஏனைய விளையாட்டு நிர்வாக அமைப்புகள் கடுமையான நிதிப்பற்றாக்குறையோடுதான் செயலாற்றி வருகின்றன.

அரசு தன்னாலியன்ற உதவிகளைச் செய்து வருகிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. அடுத்ததாக விளையாட்டு வீரர்கள் தேர்வும் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள், வசதியுடையவர்கள், அரசியல் செல்வாக்குடையவர்கள் ஆகியோருக்கு மட்டுமேயான துறையாக விளையாட்டுத்துறை மாறி வருவதும் வருந்தத்தக்கது.

கிராமப்புறங்களிலும், மலைவாழ் மக்களிடமும் ஏராளமான திறமையுள்ள இளம் வீரர் வீராங்கனைகள் வெளிச்சத்துக்கு வராமல் மறைந்துள்ளனர். அவர்களையெல்லாம் இனம் கண்டு, ஊக்குவித்து, சரியான பயிற்சிகள் அளித்துத் தயார்படுத்தினோமானால் இந்திய வீரர்களும் அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் மகத்தான சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.

களைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்து இந்திய விளையாட்டுத்துறை உலக அரங்கில் பிரகாசிக்க தேசிய விளையாட்டு தினத்திலாவது வழி பிறக்கட்டும் !

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக