சனி, 30 அக்டோபர், 2010

சதுரங்க சக்கரவர்த்தி…

பல்கேரியா கொண்டான் பராக்…பராக்

இந்திய செஸ் ரசிகர்கள் ஆனந்தக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். இருக்காதா பின்னே! நம்ம ஆனந்த் நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது சாதாரண சாதனையா என்ன? ஒட்டு மொத்த விளையாட்டு உலகமும் அன்னாந்து பார்க்கிறது.
நடப்பு சாம்பியனான ஆனந்த், இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரியாவின் வேசலின் டோபலாவுடன் மோதப் போகிறார் என்பது தெரிந்ததுமே ரசிகர்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டனர்.
போட்டி தொடங்கப்போகும் சமயம் பார்த்து, ஐஸ்லாண்டில் எரிமலை வெடித்துச் சீற, உலகமெங்கும் விமானப் போக்குவரத்து முடங்கியது. வேறு வழியில்லாமல் பிராங்க்பர்ட்டில் இருந்து 40 மணி நேரம் காரில் பயணித்து, அவசரம் அவசரமாக சோபியா போய் சேர்ந்தார் ஆனந்த். பயணக் களைப்பு தீர்வதற்குள்ளாகவே செஸ் டேபிளில் டோபலாவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி.
பதற்றத்துடன் ஆடிய ஆனந்துக்கு அதிர்ச்சி தோல்வி. இன்னும் 11 ஆட்டங்கள் இருந்தாலும் முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடக் கூடாதே என்ற கவலையில் இந்திய ரசிகர்கள். சுதாரித்துக் கொண்ட ஆனந்த் பதிலடி கொடுக்க போட்டி சூடு பிடித்தது. 12வது கடைசி ஆட்டம்… இரண்டு வீரர்களும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில். யார் வென்றாலும் அவர்தான் சாம்பியன். இந்த ஆட்டமும் டிராவானால் டைபிரேக்கரில் விரைவு சுற்றாக நான்கு ஆட்டங்களில் மோத வேண்டும். ரேப்பிட் முறை ஆட்டத்தில் ஆனந்த் கில்லாடி. அல்வா சாப்பிடுற மாதிரி அசத்திவிடுவார் என்பதால், கடைசி ஆட்டம் டிரா ஆனால் கூட போதும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்தனர்.
வெள்ளைக் காய்களுடன் ஆரம்பித்த டோபலாவ் போட்டுத் தாக்கினார். தற்காப்பு ஆட்டத்தில் போக்கு காட்டிக் கொண்டிருந்தார் ஆனந்த். எதிர் முகாம் கை ஓங்கிக் கொண்டே இருந்தது. ஒரு அமர்க்களமான நகர்த்தலில் டோபலாவின் ராணியை ஆனந்த் தீர்த்துக்கட்ட, ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது. டென்ஷனான ஆட்டத்தில் ஆனந்த் வெற்றியை முத்தமிட இந்திய ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். ஒன்றல்ல…இரண்டல்ல நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் ஆனந்த் கைகளில். செஸ் உலக சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு சேர்ந்துள்ளது. ‘நான் விளையாடியதிலேயே மிக மிக சிக்கலான, நெருக்கடியான, கடினமான ஆட்டம் இதுதான். டோபலாவை தவறாகக் கணித்துவிட்டேன். மனிதர் சாலிடாக எதிர்த்து மோதினார்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் ஆனந்த்.
’போட்டியை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தோம். கடைசி ஆட்டம் விறுவிறுப்பாக போனதால் இருப்புக் கொள்ளவில்லை. ஆனந்த் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் விளையாடினான். அவன் வெற்றி பெற்றதும் துள்ளிக் குதித்தோம். நல்ல வேளையாக போட்டி டைபிரேக்கர் வரை போகவில்லை’ என்றார் ஆனந்தின் அம்மா.
உலக கோப்பை டி20ல் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் சூடாகியிருந்த ரசிகர்களை, ஆனந்தின் வெற்றி கோடை மழையாக குளிர்வித்திருக்கிறது. இந்த வாரம் தாயகம் திரும்பும் உலக சாம்பியனை வரவேற்க சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டிருக்கின்றனர். மறுபடியும் தலைப்பை படிங்க.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக