சச்சின் – சாதனையின் மறு பெயர். கிரிக்கெட் களத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் இவரது பயணம், கொஞ்சம் கூட தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனி இவர் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியும், சந்திக்கும் ஒவ்வொரு பந்தும், அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் ஒரு சாதனை மைல்கல் என்னும் அளவுக்கு சிகரத்தை அடைந்து வானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுடன் பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 14,000 ரன்னைக் கடந்ததுடன் தனது 6வது இரட்டை சதத்தையும் பதிவு செய்து அசத்தியிருக்கிறார். ‘டென்னிஸ் எல்போ’ பாதிப்பால் அவதிப்பட்டபோது, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சராசரியில் சற்றே சறுக்கினார். உடனே சில அரைவேக்காட்டு விமர்சகர்கள் ‘சச்சின் கெட் அவுட்’ என்று எழுதி தங்கள் அதிமேதாவித்தனத்தை வெளிச்சம் போட்டார்கள்.
இது போன்ற உளறல்களுக்கெல்லாம் சச்சின் பதில் சொல்வதே இல்லை! அவரது மட்டைதான் வட்டியும் முதலுமாக சேர்த்து நெத்தியடி கொடுத்து வருகிறது. பெங்களூர் டெஸ்டில் வெற்றிக்கான இரண்டு ரன்களையும் சச்சின் ஓடி எடுத்த விதம் அவரது உடல்தகுதிக்கும், மன உறுதிக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.
எதோ 16 வயது சிறுவனைப் போல மின்னல் வேகத்தில் ஓடி, இலக்கை எட்டியதும் துள்ளிக் குதித்து வெற்றியைக் கொண்டாடிய சச்சினைப் பார்த்த யாரும் அவருக்கு 37 வயது ஆகிறது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1000 ரன்களைக் கடக்கும் சாதனையையும் சச்சின் 6வது முறையாக நிகழ்த்தினார். அவர் ஒவ்வொரு சாதனையாக தகர்த்து முன்னேறியபோது, எதிரணி கேப்டன் பான்டிங்கும் அவரது சகாக்களும் கூட மெய்மறந்து கைதட்டிய காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
சச்சினுடைய சாதனைகளை பற்றி குறைந்தபட்சம் இன்னும் 50 ஆண்டுகளுக்காவது உலக ரசிகர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள் என்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ். கிரிக்கெட் உலகின் மகத்தான வீரர் சச்சின் என்று அடித்துச் சொல்கிறார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்ஸ். சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற சச்சினுக்கு இன்னும் 5 சதம்தான் தேவை. இந்த ஆண்டுக்குள்ளாகவே அவர் அந்த சாதனையையும் தனதாக்கிக் கொண்டால் ஆச்சரியப்பட அவசியமே இல்லை. அப்படி ஒரு சூப்பர் பார்மில் இருக்கிறார். யாருக்குமே பணம், புகழ், செல்வாக்கு குவியும்போது போதை தலைக்கேறுவது வாடிக்கைதான். அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், இங்கிலாந்து கால்பந்து வீரர் வேய்ன் ரூனி உள்பட ஏராளமான பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி சந்தி சிரிக்கும்போது, சாதனை சக்கரவர்த்தியாக விளங்கும் சச்சின் இன்னும் தன்னை ஒரு அறிமுக வீரராகவே எண்ணி கண்ணும் கருத்துமாக விளையாடுவது இளம் வீரர்கள் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம்.
எல்லா சாதனைகளையும் ஒரு கை பார்த்துவிட்ட சச்சினுக்கு ஒரே மனக்குறை… உலக கோப்பையை வெல்லாததுதான். அடுத்த உலக கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எந்த சவாலுக்கும் நான் ரெடி என்று சிங்கம் போல சிலிர்த்து நிற்கிறார் சச்சின். சக இந்திய வீரர்களும் தோள் கொடுத்தால், சொந்த மண்ணில் நடக்கும் உலக போட்டியில் டோனி அண்ட் கோ கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக