எல்லா புகழும் ரசிகர்களுக்கே
ஹஹ ஹஹா… தடகளத்தில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் தங்கம், தங்கவேட்டையில் முந்தைய சாதனையான 30 பதக்கங்களை முந்தியது, தேசிய விளையாட்டு ஹாக்கியில் முதல் முறையாக பதக்கம்… என்று டெல்லி காமன்வெல்த் இந்தியாவுக்கு மிக திருப்தியான போட்டியாகவே அமைந்தது. பல்வேறு தடைகளைத் தாண்டி தொடரை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
என்னதான் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், வில்வித்தையில் கணிசமான பதக்கங்கள் குவிந்தாலும், தனிப்பெருமை வாய்ந்த தடகளத்தில் நம்மவர்கள் தடம் பதிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது! மகளிர் நீளம் தாண்டுதலில் மல்லியக்கல் பிரஜுஷா நூலிழையில் தங்கத்தை நழுவவிட்டபோது நேரு ஸ்டேடியத்தில் திரண்டிருந்த அரை லட்சம் ரசிகர்களின் விழிகளிலும் ரத்தக்கண்ணீர்.
சரி இந்த முறையும் தடகளத்தில் தங்கம் நம்மை தவிக்கவிடத்தான் போகிறது என்று நினைத்த வேளையில்… மகளிர் வட்டு எறிதலில் அந்த அதிசயம் நடந்தது. தங்கம் மட்டுமல்ல கூடவே வெள்ளி, வெண்கலமும் எங்களுக்குத்தான் என்று கிருஷ்ண பூனியா, ஹர்வந்த் கவுர், சீமா ஆன்டில் கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் தேனுடன் முக்கனிச் சாறும் சேர்த்து ஒரு அபூர்வ காக்டெய்லை வார்த்தது. கார்டிப் காமன்வெல்த்தில் (1958) பறக்கும் சீக்கியர் மில்கா சிங் தங்கம் வென்று 52 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் 2வது தங்கம் கிடைத்ததை நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.
இந்த காக்டெய்ல் தந்த மயக்கம் தீர்வதற்கு முன்பாகவே, மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மன்ஜீத் கவுர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குன்ஜி, மன்தீப் கவுர் கூட்டணி தங்கம் தட்டி வர… சோமபானம் சுராபானம் சேர்த்து அடித்த மாதிரி இந்திய ரசிகர்கள் பிளாட் ஆனார்கள்.
‘வெறும் காலுடன் ஓடி கூட பயிற்சி செய்யலாம் என்பதால் ஓட்டத்தை தேர்ந்தெடுத்தேன்’ என்று சொல்லி மனதைப் பிசைந்தார் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற நாசிக் நங்கை கவிதா ராவுத். வில்வித்தையில் வெள்ளி வென்ற பாப்பாரப்பட்டி ஸ்ரீதர், பிவானி கிராமத்தை சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் கீதா, அனிதா, அல்கா… ஆகியோரும் ஏழ்மையான பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்தான். இளம் தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களுக்கு ராயல் சல்யூட் அடிப்போம்.
அதிக பதக்கங்களை சுட்டுத் தள்ளி, சொன்னதை செய்தது ஷூட்டிங் டீம். ககன் நரங், விஜய் குமார், ஓம்கார், ஹர்மீத், பிந்த்ரா, சமரேஷ், ஹீனா சித்து, அன்னு ராஜ், தேஜஸ்வினி… என்று பெரிய படையே பதக்க வேட்டையில் அமர்க்களப்படுத்தி அசர வைத்தது.
டென்னிசில் எல்லோரும் எதிர்பார்த்த பயஸ் – பூபதி ஜோடி வெண்கலத்துடன் ஏமாற்றியது. மகளிர் ஒற்றையர் பைனலில் கடுமையாகப் போராடிய சானியாவால் வெள்ளிதான் பெற முடிந்தது. இரட்டையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது. சென்னை பையன் சோம்தேவ் சொக்கத்தங்கம் வென்றதில் எந்திரன் பார்த்த திருப்தி!
பேட்மிண்டனிலும் சாய்னா நெஹ்வால், ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா திருப்தி அளித்தனர். ஸ்குவாஷில் தீபிகா பாலிகல் உடல்நிலை காரணமாக விலகியது பெரும் பின்னடைவு. ஜோஷ்னா ஓரளவுக்கு போராடினாலும் சாதிக்க முடியவில்லை.
டேபிள் டென்னிசில் அசந்தா சரத் கமல் அண்ட் கோ அசத்தியது. குத்துச்சண்டையில் நம்பர் 1 வீரர் விஜேந்தரின் தங்க வாய்ப்பை நடுவரின் தவறான எச்சரிக்கைகள் தட்டிப் பறித்தது சர்ச்சையை கிளப்பியது. பாக்சர்களால் அதிக வெண்கலப் பதக்கங்களைதான் அள்ள முடிந்தது.
மகளிர் ஹாக்கி அணி 5வது இடத்துடன் திருப்தியடைந்த நிலையில் ஆண்கள் அணி அமர்க்களப்படுத்தியது. பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தினால்தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலை. உரசினால் பற்றிக் கொள்ளும் என்ற அளவுக்கு அனல் பறந்த ஆட்டத்தில் இந்தியா 7-4 என்ற கோல் கணக்கில் வென்றபோது தயான்சந்த் ஸ்டேடியம் தடதடத்தது. கேலரியில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் இருவரும் சின்னக் குழந்தைகளைப் போல குதூகலித்த விதம் இந்திய ரசிகர்களின் மனநிலையை வெளிச்சமிட்டது. சினிமாவில் ‘அந்த ஒரு பாட்டு… பைட்டு போதும், டிக்கெட் காசு சரியாப் போச்சு’ என்பார்கள் ரசிகர்கள். டெல்லி காமன்வெல்த்தில் இந்திய ரசிகர்களுக்கு பைசா வசூல் ஆட்டம் இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எல்லா புகழும் ரசிகர்களுக்கே என்று பயிற்சியாளர் ஜோஸ் பிராசாவும், கேப்டன் ராஜ்பால் சிங்கும் புளகாங்கிதம் அடைந்தார்கள். அரை இறுதியில் இங்கிலாந்திடம் 1-3 என பின்தங்கி, பின்னர் 3-3 என சமன்செய்து, பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என வென்றதும் ரசிகர்களின் உசுப்பேற்றல் தயவில்தான். முதல் முறையாக காமன்வெல்த் ஹாக்கியில் இந்தியா பதக்கத்தை கைப்பற்றியது மன நிறைவைத் தந்தது.
நைஜீரிய அணியில் 2 பேரும், இந்திய அணியில் ஒருவரும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது டெல்லி போட்டிக்கு வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுகள். முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களுடன் முதலிடத்தை ஆக்கிரமித்தது. பலமான இங்கிலாந்து, கனடா அணிகளின் கடும் போட்டிக்கிடையே இந்தியா 2வது இடத்தை வசப்படுத்தியது பெரிய சாதனை. தலைநகர் டெல்லிக்கு கிடைத்திருக்கும் தரமான ஸ்டேடியங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை நன்கு பராமரிப்பதுடன் இளம் வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு எல்லா உதவிகளையும் செய்தால், அடுத்த காமன்வெல்த்தில் இந்தியா இதைவிட இரண்டு மடங்கு பதக்கங்களை அள்ளுவது நிச்சயம்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக