வெள்ளி, 29 அக்டோபர், 2010

கிரிக்கெட் சூதாட்டம்... ஒரு தொடர்கதை

கிரிக்கெட் - '11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்வையிடுகிறார்கள்' - அறிஞர் பெர்னாட்ஷா.

அவரது கூற்றின் ஒரு பாதி உண்மையாகிவிட்டது. களத்தில் விளையாடும் வீரர்கள் அதிபுத்திசாலிகளாகவும், ரசிகர்கள் வடிகட்டிய முட்டாள்கள் என்பதும் நிரூபணமாகிவிட்டது. என்ன... ரசிக முட்டாள்களின் எண்ணிக்கைதான் கோடிக்கணக்கில் வளர்ந்து நிற்கிறது. தென்னாப்பிரிக்க அணித் தலைவர் குரோனி, இந்தியச் சுற்றுப் பயணத்தின்போது சூதாட்டக்காரர்களிடம் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு போட்டிகளைத் தோற்கத் திட்டமிட்டதாகச் செய்தி வெளியானதும் கிரிக்கெட் உலகமே திடுக்கிட்டது.

தில்லி காவல் துறையினர், சூதாட்டக்காரர்களில் ஒருவரான ராஜேஷ் கல்ரா என்பவரை வளைத்துப் பிடித்தனர் (தலையில் துணி போட்டு!).

சூதாட்டக்காரர்கள் - தென்னாப்பிரிக்க அணித் தலைவர் குரோனியிடையேயான 'ஒப்பந்த பேர' பேச்சு வார்த்தையை ரகசியமாக ஒலிப்பதிவு செய்ததாகத் தெரிவித்த தில்லி காவல் துறை உயரதிகாரிகள் பேச்சு விவரங்களையும் வெளியிட்டுப் பரபரப்பூட்டினர்.

தென்னாப்பிரிக்க வீரர்கள் கிப்ஸ், ஸ்டிரைடம், வில்லியம்ஸ், போயே ஆகியோரும் சூதாட்ட பேரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

குரோனி தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார். தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், பல பிரபல வீரர்களும் கிரிக்கெட் ஜாம்பவான்களும் குறிப்பாகத் தென்னாப்பிரிக்க மக்களும் குரோனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

சில மணி நேரங்களுக்குள்ளாகவே தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவரின் முகத்திலும், குரோனி கரி பூசினார். தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் அலி பேக்கரிடம் உண்மையைக் கூ றினார்! ''நான் சில சமயங்களில் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

அதற்கு முன்னதாக டர்பனிலுள்ள கிறிஸ்மாடிக் ரெமர் தேவாலயப் பாதிரியார் ரே மெக்காலேவிற்கு ஒன்பது பக்க அளவிலான பாவமன்னிப்புக் கடிதத்தினை ஃபேக்ஸ் செய்தார் குரோனி என்பது குறிப்பிடத்தக்கது.

குரோனியின் ஒப்புதல் வாக்குமூலம் கிரிக்கெட் ரசிகர்களின் தலையில் இடியென இறங்கியது. உலகின் தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குரோனி ( இவரது தலைமையில் தென்னாப்பிரிக்க அணி 99 ஒரு நாள் போட்டிகளை வென்றிருக்கிறது) சூதாட்டக்காரர்களிடம் விலை போயுள்ளார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.

இதையடுத்துத் தினம் தினம் புதுக்கதைகள் புற்றீசலாய் வெளிக் கிளம்பி கிரிக்கெட் ரசிகர்களைத் திணறடித்துக் கொண்டுள்ளன.

சூதாட்டக்காரர்களுடன் இந்திய வீரர்களுக்குத் தொடர்பு. கிரிக்கெட் சூதாட்டம் - நடிகர் கிஷன்குமார் கைது, சூதாட்டக்காரர் சஞ்சய் சாவ்லா லண்டனில் தலைமறைவு என்று பரபரப்பாய்ச் செய்திகள். அடப்பாவிகளா! என்று வாய் பிளக்கும் அப்பாவி ரசிகர்களே... கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டமும், போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் முயற்சிகளும் புதியன அல்ல. கிரிக்கெட் விளையாட்டை நிர்வாகம் செய்யும் உயர்மட்டத்தினரே பொத்திப் பொத்தி மறைத்துப் போற்றிப் போற்றி வளர்த்து வரும் ஒரு புற்று நோய்க் கட்டி அது. அவசர அறுவை சிகிச்சை அவசியம் என்றாகிவிட்ட புரையோடிப் போன நிலையில் இன்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.

அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் குரோனி கூட போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தான் பணம் வாங்கியதாக ஒப்புக் கொள்ளவில்லை. போட்டி குறித்த சில முக்கிய தகவல்களை சூதாட்டக்காரர்களிடம் பரிமாறிக் கொண்டதாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று பல முன்னாள் வீரர்களும், அணித் தலைவர்களும், ஏன் சில நடுவர்களுமே கூட சூதாட்டக்காரர்கள் தங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகத் தகவல்கள் வெளியிடுகின்றனர்.

1997-ல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர், சக இந்திய வீரர்கள் மீது சூதாட்டக்காரர்களுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு சுமத்தியபோது இந்தியக் கிரிக்கெட் வாரியம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

மாறாக குற்றம் சுமத்திய பிரபாகர், 'நினைவுப் பரிசு' என்ற வகையில் அணியிலிருந்தே நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது.

1998-ல் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாஹ், ஷேன் வார்னே இருவரும் பணம் பெற்றுக் கொண்டு சூதாட்டக்காரர்களிடம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக உண்மையை விளம்பியதோடு மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உலகுக்கு அறிவித்தபோதும் கிரிக்கெட் உலகில் சூறாவளி வீசத்தான் செய்தது. மிகக் குறைவான அளவு பணத்தை அவர்களுக்கு அபராதமாக விதித்த ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவ்விரு வீரர்களையும் தொடர்ந்து விளையாட அனுமதித்தது.

சூதாட்டக்காரர்களிடம் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர்கள் பாகிஸ்தானிய வீரர்கள்தான். பணம் பெற்றுக் கொண்டு பல போட்டிகளில் தோல்வியடைந்தனர் என்ற சந்தேகம் அந்த அணி மீது பலமாக விழுந்துள்ளது. குறிப்பாக முன்னாள் அணித் தலைவர் வாசிம் அக்ரம் மீது பல குற்றச்சாட்டுகள்.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தத் தனி நபர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

குரோனி விவகாரத்தையடுத்து இந்திய நாடாளுமன்றத்தில் சூடான விவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, நீதிபதி சந்திரசூட் அறிக்கையை மன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. அதில் விசேஷமான தகவல் ஏதுமில்லை. ''கிரிக்கெட் சூதாட்டத்தில் எந்த இந்தியக் கிரிக்கெட் வீரரும், போர்டு நிர்வாகியும், பத்திரிகையாளரும் சம்பந்தப்படவில்லை என்று தெரிகிறது. என்றாலும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில், கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவில் சூதாட்டம் நடக்கிறது. ஆனால் இது சட்டம் தொடர்பான பிரச்சினை'' என்று வழவழத்துக் கை கழுவியிருக்கிறார்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா, ''ஒவ்வொரு ஒரு நாள் போட்டியுமே முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான். சூதாட்டத்தில் ஒவ்வொரு வீரருக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தமிருக்கிறது'' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

'' இந்தியக் கிரிக்கெட் அணி அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குக் கிரிக்கெட் விளையாடக்கூடாது. கிரிக்கெட் ஊழல் பற்றி நமது நாட்டின் மீதுள்ள சந்தேக மேகங்கள் விலக்கப்பட வேண்டியது அவசியம். மேட்ச் ஃபிக்சிங், பெட்டிங் ஊழல்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்கிறார் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதையப் பயிற்சியாளருமான கபில்தேவ். அவர் மீது ஊழல் குற்றம் சாட்டிப் பத்திரிகைகளில் செய்திகள். அவரது மறுப்புச் செய்திகளும்! யாரைத்தான் நம்புவதோ-புலம்புகிறார்கள் ரசிகர்கள். அசார், டெண்டுல்கர், ஜடேஜா என்று குற்றச்சாட்டில் சிக்கும் வீரர்களின் பெயர்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வீரர்களும் ஆக்ரோஷமாக மறுத்து வருகிறார்கள். தலை சுற்றுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் தலையில் கைவைத்தபடி செயலற்று நிற்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியில் வெற்றி காண்பதெங்கே?

பாகிஸ்தானில் நீதிபதி மாலிக் முகம்மது கயூம் நடத்திய விசாரணை அறிக்கையைத் தற்போதைய ராணுவ ஆட்சியாளர்களின் கைப்பாவையாக விளங்கும் கிரிக்கெட் வாரியம் பரணில் தூக்கிப் போட்டிருக்கிறது.

குரோனி புயல் எழுப்பிய அலைகளை அடுத்து அந்த அறிக்கை தூசு தட்டப்படுமா என்பது கேள்விக்குறியே. எனினும் நீதிபதி மாலிக் முகம்மது கயூம் முன்பாக வாக்குமூலம் அளித்த பாகிஸ்தான் வீரர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்வது இந்த சமயத்தில் பொருத்தமாக இருக்கும். அதற்கு முன்பாகக் கிரிக்கெட் உலகக் கோப்பை 1999 - ன் போது பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபட்ட இரண்டு செய்திகளைப் பார்ப்போம்...

கவரிமான் காமாச்சி

தமிழ்நாடு, மணப்பாறையைச் சேர்ந்த 25 வயது ரசிகர் 'காமாச்சி'க்கு இந்திய அணி மீது அபார நம்பிக்கை. தென்னாப்பிரிக்க மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கெதிராக இந்திய அணி வெற்றி பெறும் என்று தனது நண்பர்களுடன் பந்தயம் கட்டினார். பந்தயப் பொருள் காசு, பணம் அல்ல. மயிர்! இந்திய அணி தோற்றால் தான் 'மயிர் நீக்கி' அவமானப்படுவதாக காமாச்சிக் கவரிமான் அறிவித்தார்.

அந்தோ பரிதாபம். அவர் பெரிதும் நம்பிக்கை வைத்த அசார் தலைமையிலான இந்திய அணி கவிழ்ந்(த்)து விட காமாச்சி முடியிழக்க வேண்டியதானது. அதுவும் எப்படி? பாதி தலைமுடி... பாதி மீசை... பாதி தாடி! என மழித்துவிட்டு அந்த அலங்கோலத்துடன் இரண்டு முறை நகர் வலம் வேறு வந்திருக்கிறார். கேட்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்திய ரசிகர்கள் தங்கள் அணியின் மீது எத்தனை நம்பிக்கை (குருட்டுத்தனமான?) வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாகும். இந்திய வீரர்களே! இதைக் கருத்தில் கொண்டாவது இனி வரும் போட்டிகளில் வெற்றிகளைக் குவியுங்கள்.

கிரிக்கெட் சூதாட்டம் - பெண் கைது!

புதுதில்லியைச் சேர்ந்த மோனா என்ற 34 வயதுப் பெண், கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 'வசந்த விகார்' பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது ரூ.3,200 ரொக்கப் பணம், ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 கையடக்க செல்போன்களையும் மற்றும் சூதாட்டத்தில் பணம் கட்டியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் செலுத்திய பணம் ஆகியவற்றுக்கான ரகசியக் குறியீடுகள் அடங்கிய குறிப்புப் புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சூதாட்டத்தில் புழங்கியுள்ள பணம் சுமார் இரண்டு கோடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் முதலாவது செய்தியினை, தேசபக்தியின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். அல்லது 'எங்கோ ஒரு குக்கிராமத்தில் ஒரு மூலையில் நடைபெற்ற சிறிய அளவிலான 'சூதாட்டம்' என்றும் கொள்ளலாம் அல்லவா? அடுத்ததாக இரண்டாவது செய்தி. கிரிக்கெட் சூதாட்டம் எந்த அளவிற்கு நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எவ்வளவு விரிவாகவும் ஏராளமான பணப் புழக்கத்தோடும் நடைபெறுகிறது என்பதற்கான உதாரணமாக அமைகிறது.

1999- ல் சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்மணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அவ் வழக்கு தொடர்பாக வேறு யாரேனும் கைது செய்யப்பட்டார்களா? குரோனி விவகாரத்திலும் சூதாட்டக்காரர்கள் சார்பில் ஒரு பெண்தான் இடைத்தரகராகச் செயல்பட்டிருக்கிறார். தகவல்களைப் பரிமாற உதவினார் என்று சொல்லப்படுகிறதே, அந்தப் பெண் இவர்தானா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் விடையில்லை.

பிந்த்ரே கூறுவது போன்று குரோனி உண்மையில் குற்றவாளியில்லை. தூண்டிலில் மாட்டியுள்ள சின்ன மீன்தான். தலைமறைவாக இருக்கும் திமிங்கிலங்களையும் வேட்டையாடத்தான் வேண்டும்.

அதுவரை பாகிஸ்தான் பழங்கதை அல்ல... அல்ல.. தொடர்கதை ஒன்றையும் நிதானமாகப் படித்து வைப்போமே ! அது இனி வரும் இதழ்களில்.

(ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக