சனி, 30 அக்டோபர், 2010

பயிற்சியாளர் ஈகோவால் பிரான்ஸ் பணால்

நாக்-அவுட் சுற்று தொடங்கிவிட்டதால் உலக கோப்பையில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. நடப்பு சாம்பியன் இத்தாலியும், கடந்த முறை 2வது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணியும் முதல் சுற்றிலேயே மூட்டை கட்டியதுதான் மிகப் பெரிய அப்செட்.
இரண்டு அணிகளும் தங்கள் பிரிவில் கடைசி இடத்தைப் பிடிக்கும் என்பதை யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. கடந்த முறை வின்னரும்/ ரன்னரும் 2வது சுற்றுக்கு முன்னேறத் தவறுவது உலக கோப்பை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.
இத்தாலி அணியாவது கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்லோவகியாவிடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்ற திருப்தியுடன் வெளியேறியது. பிரான்ஸ் நிலைமைதான் படு மோசம். பயிற்சியாளர் ரேமண்ட் டொமினிக் பற்றி நட்சத்திர வீரர் நிகோலஸ் அனெல்கா மோசமாக கமெண்ட் அடித்ததுடன் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். விடுவாரா டொமினிக்? உலக கோப்பையில் இருந்து அனெல்காவை திருப்பி அனுப்பி தனது செல்வாக்கை காட்டினார்.
அதிருப்தி அடைந்த மற்ற வீரர்கள் பயிற்சிக்கே வராமல் முரண்டு பிடிக்க, பிரான்ஸ் அணி கவுரவம் அப்போதே டைவ் அடிக்க ஆரம்பித்துவிட்டது. தென் ஆப்ரிக்காவுடனான கடைசி லீக் ஆட்டத்தில் டொமினிக் தனக்கு பிடிக்காத வீரர்களையெல்லாம் கட்டம் கட்டி ஒதுக்க, செமத்தியாக உதை வாங்கியது பிரான்ஸ். பயிற்சியாளரின் ஈகோவால் நேர்ந்த இந்த சோகம் கங்குலி – சேப்பல் மோதலை நினைவூட்டியது.
இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நட்சத்திர அணிகள் எல்லாம் தட்டுத் தடுமாறி 2வது சுற்றுக்கு முன்னேற, அமெரிக்கா சி பிரிவில் முதலிடம் பிடித்து கம்பீரமாக நுழைந்தது. அல்ஜீரியா அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் கடைசி விநாடியில் கோல் அடித்து அசத்தியது அமெரிக்கா. இந்த எதிர்பாராத முடிவால், ஸ்லோவேனியா வெளியேறியது சோகத்தின் உச்சக்கட்டம்.
தென் ஆப்ரிக்கா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் கடைசி வரை போராடி கவுரவமாக விடைபெற்றன. நாக்-அவுட் சுற்றில் ஒவ்வொரு ஆட்டமுமே வாழ்வா? சாவா? போராட்டம் என்பதால் ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.
+ ஐவரி கோஸ்ட் அணியுடனான லீக் ஆட்டத்தில் பிரேசில் வீரர் காகாவுக்கு ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. காகா கால் எதேச்சையாக பட்டதால் கீழே விழுந்த ஐவரி கோஸ்ட் வீரர் காதர் கெய்தா, படுகாயம் அடைந்தது போல சூப்பராக நடித்ததில் ஏமாந்த நடுவர் 2வது மஞ்சள் அட்டையை காட்டிவிட்டார். இதனால் போர்ச்சுகல் அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் காகா விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. வட கொரியாவை 7-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் கலாய்த்தது இந்த உலக கோப்பையின் காமெடி பீஸ்.
+ அல்ஜீரியா லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மோசமாக விளையாடி டிரா செய்ய, ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களைக் கிண்டலடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேய்ன் ரூனி ரசிகர்களைப் பார்த்து கோபத்தில் கொப்பளித்தார். ஸ்லோவேனியா போட்டியில் வென்று ஒரு வழியாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரூனி. அடுத்து வரும் ஆட்டங்களில் கோல் போட்டால்தான் ரூனியை மன்னிப்போம் என்கிறார்கள் ரசிகர்கள்.
+ ஐவரி கோஸ்ட் ஆட்டத்தில் பிரேசில் வீரர் பேபியானோ அசத்தலாக கோல் அடித்தார். அதற்கு முன்பாக பந்து அவரது கையில் 2 முறை பட்டது டிவி ரீபிளேயில் தெளிவாகத் தெரிந்தது. ஆட்டம் முடிந்ததும் இதை பேபியானோவும் ஒப்புக் கொண்டார். இந்த கோல் பற்றி, 1986 உலக கோப்பையில் ‘கடவுளின் கை’ உதவியுடன் கோல் அடித்த அர்ஜெண்டினாவின் மரடோனாவிடம் கேட்டபோது ‘பந்து 2 முறை கையில் பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த கோலை அனுமதித்திருக்கக் கூடாது’ என்று சொல்ல பிரேசில் வீரர்கள் காதில் புகை பறக்கிறது. பந்து கையில் பட்டதை கவணிக்கத் தவறிய நடுவர், பின்னர் டிவியை பார்த்து புன்னகைத்தது சரியான சோக காமெடி.
+ ஜூன் 22ல் இருந்து 25ம் தேதி வரை ஒரே நாளில் நான்கு போட்டிகள் நடந்ததால் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயினர். ஆசிய கோப்பை இறுதிப் போட்டி, விம்பிள்டனில் இஸ்னர் – மாஹுத் மாரத்தான் ஆட்டம் என்று தவிர்க்க முடியாத ஈர்ப்புகளின் சுகமான தொல்லைகளும் கடந்த வாரம் விளையாட்டு ரசிகர்களைப் பாடாய்ப்படுத்தின.
நாக்-அவுட் சுற்றில் ஒரு நாளுக்கு 2 போட்டி மட்டுமே என்பதால் இனி ரிலாக்சாகப் பார்க்கலாம். அரை இறுதி, பைனல் எல்லாமே நள்ளிரவு ஆட்டங்கள். இந்திய ரசிகர்களுக்கு தூக்கம் தொலைவது காலத்தின் கட்டாயம்.


பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக