சனி, 30 அக்டோபர், 2010

காமன்வெல்த் பதக்க வேட்டையில் இந்தியா

சர்ச்சைகள், புகார்கள், அதிருப்தி எல்லாம் அடங்கி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கிவிட்டது. விளையாட்டு கிராமத்தில் இது சரியில்லை…அது சரியில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு கிடைக்கும் ராஜ உபசாரத்தில் இப்போது ஆஹா ஓஹோவென்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த்தில் இந்திய அணியை ஆவலோடு ஃபாலோ செய்ய காத்திருக்கிறேன் என்கிறார் கிரிக்கெட் அணி கேப்டன் டோனி. அவர் மட்டும் அல்ல எல்லோரது கவனமும் இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டையில்தான்.
மொத்தம் 17 வகை விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இந்திய அணி அதிக பதக்கங்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் (2006) இந்திய அணி 26 பதக்கங்களை அள்ளியது.
பெய்ஜிங் ஒலிம்பிக் நாயகன் அபினவ் பிந்திரா, சமரேஷ் ஜங், ரோஞ்சன் சோதி, மானவ்ஜித் உட்பட திறமையான வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை சுடுவார்கள் என எதிர்பார்க்கலாம். குறைந்தபட்சம் 30 பதக்கம் நிச்சயம் என்கிறார் பயிற்சியாளர். ஷூட்டிங்குக்கு அடுத்தபடியாக, இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு பளுதூக்குதலில் தான். மான்செஸ்டரில் நடந்த போட்டியில் (2002) இந்திய வெயிட்லிப்டர்கள் 11 தங்கம் உட்பட 27 பதக்கங்களை தூக்கி வந்தார்கள். இம்முறை ரேணுபாலா சானு, சோனியா சானு, ரவிகுமார், மோனிகா தேவி என நட்சத்திரங்கள் அணிவகுப்பதால் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மல்யுத்த அணி சுமாராகத்தான் தாக்குப் பிடித்திருக்கிறது என்றாலும், ‘டெல்லி பிடி’ உறுதியாக இருக்கும் என்பது உறுதி. மாஸ்கோ உலக சாம்பியன்ஷிப்பில் அசத்திய சுஷில் குமார் இருக்க பயமேன்? அவரோடு யோகேஷ்வர் தத், அனில் குமார், அனுஜ் குமார், சுனில் குமார், பபிதா குமாரி, கீதா, அல்கா தோமர்… என்று தொடை தட்டுகிறார்கள்.   
குத்துச்சண்டையில் உலகின் நம்பர் 1 வீரர் விஜேந்தர் (மிடில் வெயிட்), அகில், சுரஞ்ஜாய் சிங், மனோஜ் குமார், தினேஷ் குமார், மன்பிரீத் சிங், பரம்ஜீத் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் தங்கத்துக்கு உத்தரவாதம் தருகிறார். இரண்டு தங்கம் வாங்காமல் விடமாட்டேன் என்று அடித்துச் சொல்கிறார் ஜ்வாலா கட்டா. மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பாவுடனும், கலப்பு இரட்டையர் பிரிவில் வலியவீட்டில் திஜுவுடனும் இணைந்து களமிறங்குகிறார் கட்டா. ஆண்கள் பிரிவில் சேத்தன் ஆனந்த், காஷ்யப் வரிந்து கட்டுகிறார்கள்.
வில்வித்தையில் உலக சாம்பியன் கொரியாவும் வலுவான சீனாவும் களத்தில் இல்லாததால் இந்திய அணி உற்சாகமடைந்துள்ளது. தருந்தீப் ராய், ஜெயந்தா தாலுக்தார், டோலா பானர்ஜி, பாம்பேயலா தேவி, தீபிகா குமாரி, ககன்தீப் கவுர்… பதக்கத்துக்கு குறி வைக்கிறார்கள்.
காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக அறிமுகமாகும் டென்னிஸில் இந்தியா பதக்கத்தை எதிர்பார்க்கிறது. அனுபவ வீரர்கள் லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி ஜோடி ஏடிபி போட்டிகளில் விளையாடுவதை விட தாய் நாட்டுக்காக விளையாடும்போது உற்சாகம் + ஆக்ரோஷத்துடன் அனல் பறக்கும் என்பதால் தங்க நம்பிக்கை ஜொலிக்கிறது. இருந்தாலும், போட்டி கடுமையாக இருக்கும் என எச்சரிக்கிறார் பூபதி. ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், போபண்ணா போராட காத்திருக்கிறார்கள். ஆட்டத்தை விட உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை அதிகம் நம்புகிறார் சானியா மிர்சா. கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா – பயஸ் ஜோடி சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
நீச்சலில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் என்பதால் இந்தியாவுக்கு தண்ணீரில் கண்டம்தான். ஆனாலும், அவ்வளவு எளிதாக மூழ்கிவிட மாட்டோம் என்கிறார்கள் சந்தீப் செஜ்வால், ரேஹான் போஞ்சா, ஏஞ்சல் டிசோசா, வீர்தவால் காடே, ரோகித் ஹவல்தார், பாலகிருஷ்ணன், அக்னீஷ்வர், ஆகியோர். மகளிர் பிரிவில் கேப்டன் ரிச்சா மிஷ்ரா, தலஷா, சுரபி, ஆர்த்தி ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடக்கத்தில் 26 பேர் அடங்கிய அணியை அறிவித்த இந்திய தேர்வுக் குழுவினர் நிர்வாகிகள், ஆஸ்திரெலியா பிரம்மாண்ட அணியுடன் வருவதைப் பார்த்ததும் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்திருக்கிறார்கள்.
தேசிய விளையாட்டான ஹாக்கி பற்றி சொல்லவே இல்லை என்கிறீர்களா? காமன்வெல்த்தில் இந்திய ஹாக்கி அணி இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை என்பதால், இம்முறை வெண்கலப் பதக்கத்தையாவது பெற முயற்சிப்போம் என்று கொஞ்சம் சுருதி குறைவாக அடக்கி வாசிக்கிறது. போதாக் குறைக்கு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பங்காளி பாகிஸ்தான், மலேசியா என்று ஏ பிரிவில் எக்கச்சக்க எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நெருக்கடி. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது இதயத்துக்கு நல்லது. அதையும் தாண்டி பதக்கம் கிடைத்தால் ஆனந்த அதிர்ச்சி அடைவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதி தானே!
தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், நெட்பால், லான் பவுல் போட்டிகளிலும் இந்தியா பெயர் சொல்லும் அளவுக்கு போராடும் என எதிர்பார்க்கலாம். 250 ரூபாய் கொடுத்து வுவுஸிலா ஊதுகுழல் வாங்கி, இந்திய வெற்றிக்காக நம்பிக்கையுடன் ஊதுங்கள்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக