சனி, 30 அக்டோபர், 2010

ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா

ஓவியக்கலை என்றதுமே பலரும் உச்சரிப்பது பிக்காஸோ, லியனார்டோ டாவின்சி, சால்வடோர் டாலி போன்ற மேலைநாட்டுக் கலைஞர்களின் பெயர்களைத்தான். அவர்களுக்கு இணையாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பெருமை ரவிவர்மாவைச் சேரும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளிமானூர் என்ற கிராமத்தில் 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 -ல் பிறந்தவர் ரவிவர்மா. அவரது பெற்றோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்துக்கு நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள்.

கேரளாவின் பழமையான அரச குடும்பங்களுக்கே உரித்தான சமூக, பொருளாதார, கலாச்சார பிரதிபலிப்புகள் கிளிமானூர் இல்லத்திலும் படிந்திருந்ததில் வியப்பில்லை. இலக்கியத்தின் மீதான இயல்பான ஆர்வம், கதகளி மற்றும் துள்ளல் போன்ற கலைகள் மீது ரவிவர்மாவின் குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடும், திறனும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரவிவர்மா ஒரு கலைஞனாக மிளிர்ந்ததில் அவரது தாயின் பங்கு மிகப் பெரியது. கதகளியில் ரவிவர்மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் இந்தியக் கலைகள் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே இந்நிலை காணப்பட்டது. இந்தியாவில், மேற்கத்திய நாடுகளின் தொடர்பால் ஒரு புதிய கலப்புக் கலை உருவாகத் தொடங்கியது. இந்தியக் கலைஞர்கள் மேற்கத்திய முறைகளில் உள்ள நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டு தங்கள் பாரம்பரிய ஓவியக் கலைக்கு மெருகூட்ட முயற்சித்தனர்.

துணிகளின் மீது தைல வண்ணங்களைப் பயன்படுத்தும் புதியமுறை வேகமாய்ப் பரவியது. திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தான ஓவியராக அழகிரி நாயுடு என்பவர் அக் காலகட்டத்தில்தான் நியமிக்கப்பட்டார். ரவிவர்மாவின் மாமா ராஜவர்மா என்பவர் அழகிரி நாயுடுவிடம் அனைத்து கலை நுட்பங்களையும் கற்றுணர்ந்தார். அவரிடமிருந்தே ரவிவர்மா ஓவியக்கலையில் பால பாடத்தைப் படித்தார். ரவிவர்மாவின் ஓவிய ஆர்வம் ராஜவர்மாவை ஆச்சர்யப்படுத்தியது. அவரிடமிருந்து ரவிவர்மா கற்றுக் கொண்டது மிகக் குறைவான அளவே என்றாலும் பொறுப்பாகவும், அன்பாகவும் அவர் கற்றுத் தந்தது ரவிவர்மாவைக் கவர்ந்தது.

ரவிவர்மா தனது 14 ஆவது வயதில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசர் 'ஆயில்யம் திருநாளின்' ஆதரவில் அரண்மனையில் வசிக்கத் துவங்கினார்.

அச் சமயம் அரண்மனை ஓவியராக இருந்து வந்த ராமசாமி நாயக்கர் என்பவர், ரவிவர்மா தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பொறாமையிலும் அவரை எதிரியாகப் பாவிக்கத் துவங்கினார். டச்சு நாட்டைச் சேர்ந்த தியோடர் ஜென்சன் என்ற உருவப்பட (போர்ட்ரெய்ட்) ஓவியர், வைசிராயின் சிபாரிசின் பேரில் அரண்மனைக்கு விஜயம் செய்தார். சமஸ்தானம் அவருக்குப் பெருமளவிலான வெகுமதிகளைக் கொடுத்து கெளரவித்தது. தியோடர் ஜென்சனும் தனது ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குக் கற்றுத் தர முன்வரவில்லை. தான் ஓவியம் வரைவதைப் பார்ப்பதற்கு மட்டுமே ரவிவர்மாவை அவர் அனுமதித்தார்.

ரவிவர்மாவின் ஓவியங்களை, அவற்றின் அழகியல் உணர்வு வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்பவர்கள் - புதிய முறையான, துணிகளின் மீது தைல வண்ண ஓவியங்களை வரைவதில் நிறுவன ரீதியான, முறையான பயிற்சி எதையும் ரவிவர்மா பெற்றதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இளம் வயதிலேயே பொதுமக்களின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவதில் ரவிவர்மா குறிப்பிடத்தக்க சிறப்பான வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த வெற்றியின் பின்னே, ரவிவர்மாவின் உயர்வான சமூக அந்தஸ்து இருந்ததை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அந்த வெற்றிகளுக்கான அடிப்படைத் திறமை அளவிட முடியாத அளவு அவரிடம் குவிந்திருந்தது என்பதையும் மறைக்க முடியாது.

1866 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்து ராணி லக்ஷ்மிபாயின் சகோதரியை ரவிவர்மா திருமணம் செய்து கொண்டார். அரசர் ஆயில்யம் திருநாளின் பரிபூரண ஆதரவு ரவிவர்மாவுக்குப் பெரிதும் உதவி செய்தது. மக்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு அங்கீகாரம் கிடைக்கும் முன்பாகவே, ரவிவர்மாவுக்கு கெளரவம் வாய்ந்த 'அரச வளையலைப்' பரிசாகக் கொடுத்து ஊக்குவித்தார் ஆயில்யம் திருநாள்.

அவருக்குப் பிறகு அவரது சகோதரர் விசாகம் திருநாள் அரச பதவிக்கு வந்த போது ரவிவர்மாவின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். அரச குடும்பத்தின் உள்விவகாரங்கள் மக்களைச் சென்றடைவது அக் காலத்தில் மிக அபூர்வம். அதிலும் சமஸ்தானத்துக்கு வெளியே செய்திகள் பரவ வாய்ப்பே இல்லாமலிருந்தது. அதனால் ரவிவர்மாவைத் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் உயரிய அங்கத்தினராகவே மக்கள் அங்கீகரித்து வந்தனர்.

பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் அவ்வாறே நினைத்தது என்பதுதான் ஆச்சரியம். அது அரச குடும்பத்தினரை எரிச்சலடைய வைத்தது என்றே சொல்ல வேண்டும். 1904 ஆம் ஆண்டு புத்தாண்டுப் பரிசாக 'கெய்சர்---ஹிந்த்' என்ற பதக்கத்தை வழங்கி ஆங்கிலேய அரசாங்கம் ரவிவர்மாவைப் பெருமைப்படுத்தியது.

அப் பதக்கத்தில் 'ராஜா ரவிவர்மா' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து திருவாங்கூர் சமஸ்தானம் எந்த ஆட்சேபணையும் எழுப்ப முடியவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ரவிவர்மாவின் செல்வாக்கும், மதிப்பும் அதிகரித்ததோடு ராஜாங்க ரீதியான சமஸ்தானத்து எதிர்ப்புகளையும் எளிதாக எதிர் கொள்ள வழி வகுத்தது.

ரவிவர்மாவைப் பொறுத்தவரையில் அவருக்குரிய அங்கீகாரம் எளிதாகவும் விரைவாகவும் கிடைத்தது. 1873 -ல் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொள்ள ரவிவர்மாவை ஆயில்யம் திருநாள் தூண்டினார். அன்றைய கவர்னர் லார்ட் ஹோபர்ட் ஆதரவில் நடைபெற்ற அக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியம் முதல் பரிசான தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. அதே ஓவியம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சிக்கும் அனுப்பப்பட்டு பதக்கம் வென்றதோடு தகுதிச் சான்றிதழையும் பெற்றது.

1874 ஆம் ஆண்டுக்கான சென்னை கண்காட்சியிலும் ரவிவர்மாவே தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 1893 ல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சிக்கு ரவிவர்மா 10 ஓவியங்களை அனுப்பி வைத்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சித்தரிக்கும் அந்த ஓவியங்களைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த 'வேர்ல்டு கொலம்பியன் கமிஷன்' ஏற்றுக் கொண்டது. ரவிவர்மாவுக்குப் பட்டயங்களுடன் இரண்டு பதக்கங்களும் பரிசாகக் கிடைத்தன.

ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் அமோக ஆதரவு இருந்தது. அவரது ஓவியங்களை நல்ல விலை கொடுத்து அவர்கள் வாங்கினார்கள்.

ரவிவர்மா பெற்ற பட்டங்களும் பதக்கங்களும்

1873, 1874 மற்றும் 1876 ஆம் ஆண்டுகளில் சென்னை ஓவியக் கண்காட்சியில் முதலிடம் மற்றும் தங்கப் பதக்கங்கள்.

1893 - வேர்ல்டு கொலம்பியன் கமிஷன் நடத்திய சிகாகோ சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பட்டயங்கள் மற்றும் இரண்டு பதக்கங்கள்.

1880 - பூனா கண்காட்சியில் கெயிக்வாட் தங்கப் பதக்கம். இங்கிலாந்து இளவரசரின் (பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்) இந்திய விஜயத்தின் போது அவரது பயணக் குழுவின் அங்கத்தினராக அங்கீகாரம்.

இப்படி பொருள், புகழ், பட்டம், பதவி, பதக்கங்கள் என அனைத்தையும் தனது வாழ்நாளிலேயே கிடைக்கப் பெற்ற கலைஞன் என்ற வகையில் ரவிவர்மா மிக வெற்றிகரமான ஓவியராக வரலாற்றில் பதிவு பெறுகிறார்.

ரவிவர்மாவின் புகழ் மிக்க ஓவியங்களில் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும், சமுத்திரத்தை வெற்றி கண்ட ராமன், பீஷ்மனின் சபதம், சகுந்தலா, கிருஷ்ணனின் தூது, இந்திரஜித்தின் வெற்றி மற்றும் காய்கறி விற்கும் பெண்மணி போன்ற ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

'சமுத்திரத்தை வெற்றி கண்ட ராமன்' ஓவியத்தில் இலங்கைக்குப் பாலம் கட்டும் தனது முயற்சிக்கு ஒத்துழைக்காத கடலரசன் மீது ராமன் வெகுண்டெழுந்து தாக்குதல் தொடுக்கத் தயாராவதையும் வருண பகவான் தனது துணைவியருடன் விரைந்து வந்து மன்னிப்புக் கோருவதையும் மிகச் சிறப்பான ஓவிய வடிவாக்கியுள்ளார். வேகமான கடற்காற்றை எதிர்த்து ராமன் உறுதியாக நிற்கிறான். ராமனின் ஆடை காற்றில் படபடக்கிறது. பாறைகளின் மீது மோதி அலைகள் நுரையடிக்க, பொங்கிச் சுருளும் அலை மீது வருண பகவான் தனது மனைவியருடன் வருவது, பின்னணியில் கருவானில் கோடு கிழிக்கும் மின்னல் என்று அக் காட்சியை ரவிவர்மா வரைந்திருக்கும் விதம் அற்புதமாக உள்ளது.

ரவிவர்மா மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் பலரும் ஓவியக்கலையில் சிறந்து விளங்கினர். ரவிவர்மாவின் சகோதரி மங்களா பாய், இளைய சகோதரர் ராஜ ராஜ வர்மா மற்றும் ரவிவர்மாவின் மகன் ராமவர்மா ஆகியோரும் அற்புதமான ஓவியங்களைப் படைத்துள்ளனர்.

ரவிவர்மாவின் ஓவியங்களில் உயிரோவியங்களாக எழுந்த சிலர் :

வேல்ஸ் ளவரசர் (பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்)
டியூக் ஆஃப் பக்கிங்ஹாம்
மெட்ராஸ் கவர்னர்
லார்ட் ஆம்ப்தில்
மெட்ராஸ் கவர்னர் -1878, அவரது மனைவி - 1904
திருவாங்கூர், புதுக்கோட்டை, பரோடா, உதய்பூர் சமஸ்தானங்களின் அரச குடும்பத்தினர்.

ரவிவர்மாவின் ஓவியங்களில் புராண, இதிகாசக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிகிறது. இன்றைய ஓவிய விமர்சகர்கள் பலரும் ரவிவர்மாவின் ஓவியங்களில் சில குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டுகின்றனர். எனினும் இந்திய ஓவியக் கலையின் மறுவாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ரவிவர்மாவின் பணி மகத்தான பங்கு வகித்தது என்பதில் மாற்றுக் கருத்துகள் எழ வாய்ப்பில்லை.

1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 -ல் தனது 58 ஆவது வயதில், தான் பிறந்த கிளிமானூர் மண்ணிலேயே ரவிவர்மா உயிர் நீத்தார். ஒரு தலைசிறந்த ஓவியக் கலைஞரின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

ரவிவர்மா மறைந்தாலும் அவரது ஓவியங்கள் அழியாப் புகழுடன் அவரது பெயரை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ளன.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக