வெள்ளி, 29 அக்டோபர், 2010

போட்டி நடுவருக்கு வானளாவிய அதிகாரமா?

தென்னாப்பிரிக்க- இந்திய அணிகளிடையே போர்ட் எலிஸபெத்தில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது, டெண்டுல்கர், கங்குலி, வீரேந்தர் ஷேவக், ஹர்பஜன் சிங், எஸ்.எஸ்.தாஸ், தீப் தாஸ் குப்தா ஆகிய 6 இந்திய வீரர்கள் விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகக் கூறி தடை மற்றும் அபராதம் விதித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஐ.சி.சி போட்டி நடுவர் மைக் டென்னெஸ்.

சச்சின் டெண்டுல்கர் உள்பட 6 இந்திய வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் புதிய புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. இந்தப் புழுதிப் புயல், இந்திய வீரர்களை வேண்டுமென்றே களங்கப்படுத்தும் நோக்கத்துடன் எழுப்பப்பட்டதா என்ற ஐயம் இந்திய ரசிகர்களிடம் நிலவுகிறது. உலகின் முதன்மையான பேட்ஸ்மேனாகப் போற்றப்படும் சச்சின் மற்றும் ஏனைய 5 வீரர்கள் மீதான குற்றச்சாட்டு அபாண்டமானது, அக்கிரமமானது என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவறு செய்யும் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், விதிமுறைகள் பாரபட்சமின்றி அனைத்து வீரர்களுக்கும் பொதுவானதாகப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இந்தச் சம்பவத்தில், போட்டி நடுவர் மைக் டென்னெஸ் ஒருதலைப்பட்சமாக இந்திய வீரர்களை மட்டும் தண்டித்திருப்பதுதான் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

சச்சின் பந்தை சேதப்படுத்தியதாகவும், வீரேந்தர் ஷேவக், ஹர்பஜன் சிங், எஸ்.எஸ்.தாஸ், தீப் தாஸ் குப்தா ஆகியோர் அளவுக்கதிகமாக முறையீடு செய்து நடுவரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், இந்திய அணித்தலைவர் கங்குலி தனது வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றம் சாட்டிய டென்னெஸ் 6 இந்திய வீரர்களுக்கும் அபராதம் மற்றும் போட்டியில் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதே சமயம், அணித்தலைவர் பொல்லாக், ஜேக் கல்லிஸ் போன்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் இதே வகையான செயல்களில் ஈடுபட்டதை மைக் டென்னெஸ் கண்டுகொள்ளாததுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக அணித்தலைவர் பொல்லாக் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் எஸ்.எஸ்.தாஸ், வி.வி.எஸ். லஷ்மண் ஆகியோர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கக் கோரி அளவுக்கதிகமான, நடுவரை அச்சுறுத்தும் வகையிலான முறையீடுகளைச் செய்தது வீடியோ ஒளிப்பதிவில் மிகத்தெளிவாகத் தெரிந்தது.

அதிலும், எஸ்.எஸ்.தாஸ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட பொல்லாக்கின் அளவுக்கதிகமான முறையீடே காரணமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்தில், முதலில் மட்டையின் விளிம்பில் பட்ட பந்து, அதன் பின்னரே கால்காப்பில் பட்டது குறிப்பிடத்தக்கது.

கை நகங்களை ஒட்ட வெட்டியிருக்கும் சச்சின், பந்தை சேதப்படுத்தி வடிவமிழக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டு மிக வேடிக்கையானது, உள் நோக்கம் கொண்டது என்றே பலரும் கருதுகின்றனர்

உண்மையில் கை நகங்களை அவர் கடித்துத் துப்பிவிடுவார் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேவக் தவறு செய்ததாக வைத்துக் கொண்டாலும், அவரை எச்சரித்து அறிவுறுத்துவது மட்டுமே சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.

கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங், எஸ்.எஸ்.தாஸ், தீப் தாஸ் குப்தா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் கேலிக் கூத்தானது. ஒருவேளை பொல்லாக் மீதும் இதே வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் மைக் டென்னெஸ் தனது செயலை நியாயப்படுத்தியிருக்க முடியும்.

சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நெறிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்ட போட்டி நடுவர் என்ற பதவியின் வரம்புகள் இங்கே மீறப்பட்டிருப்பதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நவ்ஜோத் சிங் சித்து குறிப்பிட்டது போல், வல்லூறுகளை விட்டுவிட்டு புறாக்களைத் தண்டித்திருக்கும் மைக் டென்னெஸ் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டார்.

இதை விட மோசமாகச் செயல்பட்ட சில வீரர்களை போட்டி நடுவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பாக, ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸி வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கிந்திய வீரர் ராம்நரேஷ் சர்வானுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த மெக்கிலைக் கடுமையாக எச்சரித்த போட்டி நடுவர் ஆலன் ஸ்மித், தண்டனை ஏதுமின்றி ஸ்டூவர்ட் மெக்கிலை விடுவித்தார்.

மெக்கில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்ததில் அதிருப்தியடைந்த அவர், பெவிலியன் திரும்பும் வழியில் பதிலி வீரராகக் களத்தினுள் நின்றிருந்த சர்வானை இடித்துவிட்டுச் சென்றார். பின்னர், தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று கூறிய மெக்கில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

''சம்பவம் குறித்து நன்கு விசாரித்து அறிந்தேன். சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலமாகப் பிரச்சினையைத் தங்களுக்குள்ளாகவே அவர்கள் தீர்த்துக் கொண்டனர். எனினும், மெக்கில்லை நான் கடுமையாக எச்சரித்தேன்'' என்று அப்போது போட்டி நடுவர் ஸ்மித் அறிக்கை விடுத்தார்.

அதே சமயம், ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக இந்திய அணித்தலைவர் கங்குலி, விக்கெட் காப்பாளர் விஜய் தாஹியா ஆகியோருக்குச் சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தவறு செய்யும் வீரர்களைத் தாராளமாகத் தண்டியுங்கள்...ஆனால் நிறம், நாடு என்ற பாரபட்சமின்றி நியாயமான நடிவடிக்கையாக அது அமைய வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு எதிராக மட்டுமே பாரபட்சமான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நிலவும் கருத்தைப் பொய்யாக்குவது சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் வசம்தான் உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கான ஐ.சி.சி செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஐ.சி.சி தலைவர் மால்கம் கிரே, இந்த விஷயத்தில் சர்வதேச கவுன்சிலின் பங்கு குறைவானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஐ.சி.சி என்ற அமைப்பு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்றது, செயல் திறன் அற்றது என்ற எண்ணம் பரவலாக நிலவுவதை இது மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இச்சம்பவம் குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகளைப் பார்ப்போம்...
முன்னாள் இந்திய அணித்தலைவரும் பயிற்சியாளருமான அஜித் வடேகர்: இச்சம்பவம் 1992ல் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளிடையே நடைபெற்ற நட்புறவுத் தொடரை நினைவுபடுத்துகிறது. அப்போது நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில், பந்து வீசப்படும் முன்பாகவே ரன் எடுக்க எத்தனித்த பீட்டர் கர்ஸ்டனை பல முறை எச்சரித்த கபில் தேவ் இறுதியில் ரன் அவுட் செய்தார். இதனால் எரிச்சலுற்ற கெப்லர் வெஸல்ஸ் தனது மட்டையின் கைப்பிடியால் கபில்தேவை வேண்டுமென்றே இடித்தார். அப்போது போட்டி நடுவராக இருந்த கிளைவ் லாயிட் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

சச்சினைக் குழந்தைப் பருவத்திலிருந்தே நான் நன்கறிவேன். பந்தை சேதப்படுத்த வேண்டிய அவசியமோ, காரணமோ அவருக்கு இல்லை. முன்பு இங்கிலாந்து அணித்தலைவர் மைக் ஆத்தர்ட்டன் பந்தை உலர வைக்க முற்பட்ட போது எழுந்த சர்ச்சை போன்றதுதான் இது. வீரர்கள் அளவுக்கதிகமாக முறையீடு செய்வதைத் தடுப்பது அவசியம்தான். ஆனால் அதில் பாரபட்சம் கூடாது.

முன்னாள் பயிற்சியாளர் அஞ்சுமன் கெயிக்வாட்: சச்சின் டெண்டுல்கர் ஒரு கடினமான கிரிக்கெட் வீரர். களத்தில் இருக்கும் போது அவரது செயல்பாடுகளில் எந்தவிதமான நெறிமுறை மீறலையும் காண முடியாது. தனித்துவம் மிக்க சச்சின் ஒருபோதும் தவறிழைக்க மாட்டார். சச்சின் மீது குறி வைத்து ஏன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், பல ஆண்டுகளாகவே இந்திய வீரர்கள் இத்தகைய பாரபட்சமான குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சச்சின் டெண்டுல்கர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். இதுவரையிலான அவரது கிரிக்கெட் வாழ்க்கை அப்பழுக்கில்லாதது. இந்தக் குற்றச்சாட்டு அனைத்து இந்தியர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பு என்றே கருதுகிறேன் என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வாரியத் தலைவர் ராஜ்சிங் துங்கார்பூர்.

மேலும் பல இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதியும் போட்டி நடுவரின் பாரபட்சமான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ICC நடுவராக மைக் டென்னெஸ் நீடிக்கக் கூடாது, இந்திய வீரர்களுக்கு எதிரான தடையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்து விட்டதால் பிரச்சனையின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது. டென்னஸ் போட்டி நடுவராக நீடித்தால், இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் என இந்திய வாரியம் தெளிவாகத் தெரிவித்து விட்டது.

இதனைத் தவிர்க்க விரும்பிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு, மைக் டென்னஸை விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது. அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டதால், அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தென்னாப்பிரிக்க வாரியம், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மைக் டென்னஸுக்கு பதிலாக டெனிஸ் லிண்ட்ஸே போட்டி நடுவராகப் பணியாற்றுவார் என அறிவித்தது.

இந்திய, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஐ.சி.சி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து தனது ஆளுமையை நிலை நாட்ட முயற்சித்துள்ளது.

இந்தத் தொடர் நடவடிக்கைகளால் கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் நெறிகளைக் கட்டிக்காக்கும் முயற்சி என்ற போர்வையில் டென்னஸ் எடுத்த தான்தோன்றித்தனமான நடவடிக்கையின் பலன் எதிர்மறையான விளைவுகளையே தந்துள்ளது. ஐ.சி.சி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போட்டி நடுவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டால், மேலும் பல பாரபட்சமான
உள் நோக்கங்கள் கொண்ட தீர்ப்புகளையே நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.

முளையிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பிரச்சனை, தற்போது பூதாகரமாக வளர்ந்து அச்சுறுத்துகின்றது. ஐ.சி.சியும் சம்பந்தப்பட்ட நாடுகளின் கட்டுப்பாட்டு வாரியங்களும் பிடிவாதப் போக்கைக் கைவிடாவிடில் இப்பிரச்சனை மேலும் சிக்கலாகி விடும் என்பதில் ஐயமில்லை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இனியாவது சரியான திசையில் பயணிக்குமா?...

(ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக