சனி, 30 அக்டோபர், 2010

ஆனந்த் இந்தியரா?

அமைச்சகத்துக்கு வந்த அநியாய சந்தேகம்
விளையாட்டு வீரர்களை சீண்டிப் பார்ப்பதில் சிலருக்கு அற்ப சந்தோஷம். போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு செல்லும் வீரர்களுக்கு குறித்த நேரத்தில் விசா வழங்காமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பார்கள். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் லிட்டில் மாஸ்டர் கவாஸ்கரையே உள்ளே விடாமல் கலாய்த்திருக்கிறார் ஒரு பாதுகாப்பு அதிகாரி. ‘மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம். முதலில் நான் இந்தியன், பிறகுதான் மராத்தியன்’ என்று சொன்ன மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுடன் மோதிப் பார்த்தார் பால் தாக்கரே. ஒட்டு மொத்த இந்தியாவும் சச்சினுக்கு ஆதரவாகப் பொங்கி எழ, ஜகா வாங்கிவிட்டார். இப்போது, உலக செஸ் சாம்பியனும் நம்ம ஊர் நாயகனுமான விஸ்வநாதன் ஆனந்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்.
,நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்துக்கு, கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க ஆசைப்பட்டது ஐதராபாத் பல்கலைக்கழகம். இதற்காக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி கேட்டது. விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிக்கு, ஆனந்த் இந்தியக் குடிமகன்தானா? என்று திடீர் சந்தேகம். சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு வசதியாக ஆனந்த் ஸ்பெயினில் தங்கியிருப்பதால், அந்நாட்டு பிரஜையாகிவிட்டிருப்பாரோ என்று அந்த அதிகாரி விளையாட்டாக சிந்தித்தது விபரீதமாகிவிட்டது.
ஐதராபாத் பல்கலை.யில் கடந்த வாரம் நடந்த கணித மாநாட்டின்போது ஆனந்துக்கு டாக்டர் பட்டம் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அர்த்தமற்ற கேள்வியால் டோட்டல் கொலாப்ஸாகிவிட்டது. ஏகத்துக்கு எரிச்சலான ஆனந்த், ‘போங்கடா நீங்களும் உங்கள் பட்டமும்… ஒரு மண்ணும் ’வேண்டாம்’ என்று ஒரே போடாய் போட்டார். மீடியா கிழி கிழியென்று கிழித்ததில் ஆடிப் போன அமைச்சர் கபில்சிபல், ஆனந்துக்கு போன் போட்டு சாரி சொன்னதோடு நீங்கள் விரும்பும் தேதியில் பட்டமளிப்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று தாஜா செய்தார். போனால் போகிறதென்று ஓகே சொல்லியிருக்கிறார் ஆனந்த்.
‘டாக்டர் பட்டத்துக்காக நாங்கள் ஒன்றும் ஏங்கவில்லை. ஆனந்திடம் இந்திய பாஸ்போர்ட்தான் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் விளையாடினாலும் அவருக்கு அருகே இந்திய தேசியக் கொடிதான் இருக்கும். அவர் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேறு எதை எதிர்பார்க்கிறார்கள் என்று விளங்கவில்லை’ என்று கொதிக்கிறார் ஆனந்தின் மனைவி அருணா.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கே தங்கள் துறைகளில் வெற்றிக் கொடி நாட்டும் போதெல்லாம், நாடே அந்த சாதனையில் பெருமையும் பெருமிதமும் அடைவது வாடிக்கை. கல்பனா சாவ்லா முதல் அர்ஜுன் ஆத்வால் வரை அப்படித்தான் கொண்டாடி வருகிறோம். அப்படி இருக்கையில், ஆனந்த் பற்றி இப்படியொரு சர்ச்சையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், இது போன்ற தவறு இனி எப்போதும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக