இயற்கை கூட
என்னிடம் கேட்கவில்லை
உருவத்தில் மாற்றம்
பருவம் வந்தது.
பாவாடை சட்டை மேலே
தாவணி வந்தது.
தெருவாசல்
ஜன்னலில் திரைகள்
அவனோடு என்னடி பேச்சு
பாட்டி அதட்டுகிறாள்.
மொட்டை மாடியில்
மறையும் சூரியனை
ரசிக்கிறேன்.
என் தொலைதூரப் பார்வையில்
குழம்புகிறாள் அம்மா
என்னமோ ஏதோ
புலம்புகிறாள்
என்னிடம் யாரும்
என்னவென்று கேட்கவில்லை
அடுத்தநாள்
மொட்டை மாடிக்கு
இரட்டைத் தாழ்ப்பாள்!
அப்பா ஒன்று
அண்ணன் ஒன்று
விலங்குகள் என்னை
விலங்காக்கி விடுமோ?
விளங்கவில்லை.
பள்ளித் தோழி
பங்கஜம் வருகிறாள்
அழுத்தங்கள் விலகி
இயல்பான நட்பில்
சிறகடிக்கும் மனம்.
சேர்ந்து நடப்போம்
சேர்ந்தே படிப்போம்
சச்சின் முதல்
சதாம் வரை
சகலமும் அலசுவோம்
மலர்ந்த நட்பின்
ஆணி வேரில்
அமிலம் வார்த்தது சமூகம்
'தீ' தோழிகள் என்று
நெருப்பு வார்த்தைகள்
காதுகளுக்குக் கடிவாளம்
போட்டுக் கொள்வோம்
என்னிடம் யாரும்
என்னவென்று கேட்கவில்லை.
அமெரிக்க மாப்பிள்ளை
அடுத்த மாதம் கல்யாணம்
அவங்களுக்கு அவசரமாம்
அப்பா அம்மா
அகமகிழ்ந்தார்கள்
என் கனவுகள் உடைக்க
கணவன் வரப் போகிறான்
மகிழ்ச்சிதானே...
சிரித்துக் கொள்கிறேன்
கைகுலுக்கி வாழ்த்தும்
பங்கஜத்தின்
விழியோர வியர்வையும்
சிரிக்கிறதே.
(ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது - 2000)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக