சனி, 30 அக்டோபர், 2010

புகைப்பழக்கம் - ஒரு ஆக்டோபஸ்

மே 30 - புகைக்கும் பழக்கத்தை எதிர்க்கும் நாள்                    

சிகரெட்

அதன் ஒரு முனையில் நெருப்பு
மறு முனையில் ஓர் முட்டாள் - பெர்னாட்ஷா

அறிஞர் பெர்னாட்ஷா வர்ணித்த முட்டாள்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறையக்கூடும் என்று தோன்றவில்லை. வம்பை விலைக்கு வாங்கும் இந்தக் கருத்துக் குருடர்களின் கண்களைத் திறப்பது கடினமே. காரியச் செவிடர்களின் காதில் கால(ன்)ச் சங்கொலி வீழ்வதில்லை. பாதிப்பு புகைப்பவர்களுக்கு மட்டுமே என்ற நிலையிருந்தால் பரவாயில்லை. அது அவர் தம் குடும்பத்தையும் சமூகத்தையும் மறைமுகமாய் அரித்தெடுக்கும் அவலம் நம்மைக் கவலைக்குள்ளாக்குகிறது.

மன அழுத்தத்தினை விலக்கிக் கொள்வதற்காக என்ற போர்வையில் முக்காடிட்டுக் கொள்ளும் இவர்கள், அதன் போதை வலையில் சிக்கிக் கொண்டதை விளக்கிச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்..' என்ற கதைதான் இங்கும். இருந்தும் சில சட்டபூர்வமான நடவடிக்கைகள் மூலம் இப் பழக்கத்திற்குத் தற்காலிகத் தடைகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது. இந்தியத் தலைநகர் தில்லியிலும், கேரள மாநிலத்திலும் பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவாதத்திற்குரிய விஷயமாகப் புகைந்து கொண்டிருக்கிறது!

பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது புகைப்பழக்கம். இதை உலகுக்கு அறிமுகப்படுத்திய மகானுபாவர்களாகப் போர்ச்சுகீசியர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இப் பழக்கம் உலகமயமானது1600-ஆம் ஆண்டுகளில்தான். ஹூக்கா, பைப், சுருட்டு, பீடி, சிகரெட் என்று பல்வேறு வடிவங்களில் புகைப்பழக்கம், மனிதர்களைத் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக் கொண்டது. சுருட்டு உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகித்த பெருமை தமிழகத்தைச் சேரும். சிகரெட்டின் ஆதிக்கம் சுருட்டுத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. எந்திர உதவியுடன் சிகரெட் தயாரிப்பு 1800-ஆம் ஆண்டுகளில் துவங்கியது. வடிப்பான் பொருத்தப்பட்ட சிகரெட்டுகள் 1950-வாக்கில் அறிமுகமாயின. ஃபில்டர் இருப்பதால் பெரிய நன்மை ஏதுமில்லை.

சிகரெட்டில் சுமார் 4000 விதமான ரசாயனப் பொருள்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் முன்னிலை வகிப்பது 'நிக்கோடின்' ஆகும். இவற்றுடன் ஒன்பது விதமான வாயுக்களும், தார் மற்றும் 250 வகையான நுண் துகள்களும் அடக்கம்.

சிகரெட் முனை நெருப்பின் வெப்ப அளவு 1600 டிகிரி பாரன்ஹீட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தண்ணீரின் கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்தான் என்பதோடு ஒப்பிடும்போது சிகரெட்டின் அபாய நிலை விளங்கும்.

சிகரெட் பழக்கத்தின் ஆரம்பத்திற்குப் பல்வேறு சமூக, உளவியல் காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. சிகரெட் பிடிக்கும் அந்த நிமிடத்தில், உடலில் பிறக்கும் உற்சாகம் தற்காலிகமானது; ஆனால் அபாயகரமானது. புகைக்கும்போது அட்ரினல் சுரப்பி அதிகமாகச் சுரப்பதனால்தான் உற்சாகம் உண்டாகிறது. ஆனால், நாளடைவில் புகைப்பழக்கம் பலவிதமான நோய்களுக்கும் வரவேற்புரை வாசிக்கத் துவங்கி விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

சுவாசிக்கும்போது நாம் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள மாசுக்களை வடிகட்டும் 'சிலியா'வை சிகரெட் புகையின் வெப்பமும், வாயுக்களும் சிதைத்து விடுகின்றன. இதன் காரணமாக சிலியாவின் வடிகட்டும் திறன் பாதிக்கப்படுகிறது. நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்களும், அசுத்தக் காற்றும் அழுக்கும் நுரையீரலை அடைவது எளிதாகி விடுகின்றது. மார்ச்சளி அதிகரிக்கிறது. காற்றுப் பைகளின் நாளங்கள் சிதைவடைகின்றன. விளைவு... நுரையீரல் சிரை வியாதி, தூக்கத்தில் மூச்சு நின்று போதல் (ஸ்லீப் அப்னீயா), ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்கள் உடலைத் தாக்குகின்றன.

நுரையீரல் புற்று நோய்க்கு 90% காரணமாக சிகரெட் பழக்கம் அமைகிறது. மொத்தப் புற்று நோயாளிகளில் 19 சதவீதத்தினர் நுரையீரல் புற்று நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் மட்டுமல்லாது கார்சினோஜென் என்ற மற்ற பொருள்களும் புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றன. நுரையீரல் புற்று நோயுடன் வாய்ப் புற்று நோய், உணவுக்குழாய் புற்று நோய் போன்றவையும் உடன்பிறப்புகளாய்த் தோன்றும் அபாயமுமிருக்கிறது.

சிலருக்கு சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட சிகரெட்டும் மறைமுகக் காரணமாகயிருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் புகைப்பதால், பிறக்கும் குழந்தையின் நுரையீரல் செயல்பாடு மோசமடைவதுடன் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதோ அந்த அச்சுறுத்தும் செய்தியின் விவரம்:

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனையில், கர்ப்பிணிப் பெண்கள் புகை பிடிக்கும்போது குழந்தையின் நுரையீரலில் காற்று செல்வது குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் நுரையீரல் செயல் திறனைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர். குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பை டாக்டர் பிராங்க் கில்லினாண்டும் அவரது சகாக்களும் செய்தனர். 10 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்து 300 சிறுவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவர்களின் தாயார்களின் புகைபிடிக்கும் பழக்கம் பற்றியும் கேட்டறிந்தனர். புகை பிடித்த பெண்களின் மகன்களது நுரையீரல் செயல்பாடு மோசமாகயிருந்தது கண்டறியப்பட்டது.

பெண்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாதல் இந்தியாவில் மிக அரிதான ஒன்றாகும். எனினும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் இப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

தனிமையைத் தவிர்க்கவும், மன அழுத்தம் காரணமாகவும், பரிசோதனை முயற்சியாகவும் பெண்கள் சிகரெட் பிடிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் நுரையீரலைத் தாக்குவதோடு நின்று விடுவதில்லை. இதயத்தையும் ஒரு கை பார்க்கிறது. இப் பழக்கத்தின் காரணமாக இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் குறுகி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு கூடுகிறது.

சிகரெட் புகையின் பாதிப்பு மூளை வரை முன்னேறுகிறது. விளைவு... பக்கவாத பாதிப்புகள், ஞாபகம் குறைதல், மயங்கியிருக்க விரும்பும் மனப்பான்மை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்மையின் அடையாளமாகக் கருதப்படும் சிகரெட் பழக்கம், ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. சிகரெட் பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஆண் அணு குறைந்து விடுகிறது என்பது மருத்துவபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் உள்ள ஒருவர் தனது ஆயுளைக் குறைத்துக் கொள்வதோடு, வாழ்நாளில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்குப் புகைத்துச் சாம்பலாக்குவதாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

புகைப்பவர்கள் தாங்கள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், அப் பழக்கத்திற்கு ஆளாகாத அப்பாவிகளையும் மறைமுகமாகப் பாதிக்கிறார்கள். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதால் பலவகையான பாதிப்புகள் உண்டாகின்றன. எனவேதான் பொது இடங்களில் புகைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்துப் பக்கம் பக்கமாய் எழுதிக் கொண்டே போகலாம். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா? சந்தேகம்தான். 'சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது' என்ற சட்டபூர்வமான எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டுத்தானே புகையை உல்லாசமாக உள்ளிழுக்கிறார்கள்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக